‘டான்’ சினிமா விமர்சனம்

டான்‘ சினிமா விமர்சனம்

‘டான்கள் உருவாவதில்லை; உருவாக்கப்படுகிறார்கள்’ கருத்து சொல்லும் தமிழ் சினிமாவின் மற்றுமொரு படைப்பு.

படிப்பில் ஆர்வமில்லாமல் தனக்குள் இருக்கும் திறமையைக் கண்டறிந்து முன்னேற விரும்புகிற கடைசி பெஞ்ச் மாணவன் சிவகார்த்திகேயன். ‘கல்லூரியில் படிப்பைத் தவிர எதற்கும் இடமில்லை’ என கண்டிப்பு காட்டும் பேராசிரியர் எஸ்.ஜே. சூர்யா. இருவருக்கும் இடையில் நடக்கும் முட்டல் மோதல், காமெடி கலாட்டாக்களின் காம்போ பேக்காக ‘டான்.’

இனிப்பான எபிசோடுகளுடன், திரைக்கதையில் ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ள அழுவாச்சி அத்தியாயங்களும், அடுக்கடுக்காய் சமூகத்துக்கு அறிவுரை அப்லோடுகளும் உண்டு!

இயக்கம்: சிபி சக்கரவர்த்தி

மீசை அரும்பும் பள்ளி மாணவன், எந்தவொரு கட்டுப்பாட்டுக்குள்ளும் சிக்காமல் மாணவர்களைத் திரட்டி கல்லூரியையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கெத்து காட்டுகிற டான், தன் திறமையறிந்து அதில் சாதித்த இளைஞன் என பருவத்துக்கேற்ப தோற்றத்தில் மாறுபாடு காட்டுவதோடு, அப்பாவின் கண்டிப்புக்கு ஆளாகி அவதிப்படுவது, பேராசிரியரின் அத்துமீறலுக்கு ஆளாகி ஆத்திரப்படுவது, அனைத்தையும் சமாளித்து ஆசைப்பட்டதை அடைவது என பாத்திரத்துக்கு உரிய நடிப்பை வழங்கி உயிரூட்டியதில் சிவகார்த்திகேயனின் பங்களிப்பு நிறைவு! பாடல் காட்சிகளில் வெளிப்படும் சிவாவின் எனர்ஜி ஜிவ்வ்வ்…!

தமிழ் சினிமாவில் கதையின் நாயகன் மீது காதல் கொள்கிற கதாநாயகிகளின் பங்களிப்பு எப்படியிருக்குமோ அதே ‘டெம்ப்ளேட்’டில் பிரியங்கா அருள்மோகன். இமைகள் துடித்தெழ அழகாய் உயரும் மேற்பார்வை, மென் புன்னகையில் எட்டிப் பார்க்கும் வெட்கம் என ஈர்க்கிறார்.

கண்டிப்பான பேராசிரியராக வரும்போது ‘ஸ்பைடர்’ வில்லனைப் போல் வெறித்தனம் காட்டி தெறிக்கவிடுகிற எஸ். ஜே. சூர்யா, கனிவாக முகம் காட்டும்போது ‘அட’ போட வைக்கிறார்.

மகனை படி படி என துன்புறுத்துவதையே தொழிலாக வைத்திருக்கிற சமுத்திரகனியின் நடிப்பு கதையோட்டத்தின் கனபரிமாணம்!

பட்டதாரிகளை உருவாக்கும் பேராசிரியர்களாக மனோபாலா, காளி வெங்கட், முனீஸ்காந்த் ராமதாஸ், ஜார்ஜ் மரியன், செல்லா என பரிச்சயமான பட்டாளம் ஒரு பக்கம் அணிவகுக்க, ‘வகுப்பறையே அலர்ஜி அலப்பறையே ஆனந்தம்’ என அலட்டலாய் திரியும் ஆர்ஜே விஜய், ‘பிக் பாஸ்’ ராஜூ, பால சரவணன், ‘விஜய் டி.வி.’ ஷிவாங்கி என இளவட்டங்கள் இன்னொரு பக்கம் சுற்றித் திரிய, பெயருக்கு ஒட்டிக் கொண்டிருக்கிறார் சூரி. ராதாரவிக்கு ‘கல்வித் தந்தை’ வேடம் கச்சிதம்.

கிளைமாக்ஸ் அப்பா – மகன் சென்டிமென்ட் ஏனோதானோ என்றிருந்தாலும் ஏற்ற பாத்திரத்துக்கு தனது நடிப்பால் உயிரூட்டியிருக்கிறார் ஆதிரா பாண்டிலட்சுமி! இயக்குநர் கெளதம் மேனனும் தலை காட்டுகிறார்.

‘ஜல புல ஜங்கு’, ‘ப்ரைவேட் பார்ட்டி’, ‘பே’… அனிருத் இசையில் ஏற்கனவே ஹிட்டான பாடல்களுக்கு ஃபிட்டான நடனங்கள் கலக்கல் & கலர்ஃபுல்!

துளியும் லாஜிக் இல்லாத சில காட்சிகள் சலிப்பு. கதையின் நாயகன் தன் திறமையால் சாதித்தபின், சிறப்பு விருந்தினராக கல்லூரிக்கு வருவதெல்லாம் சரிதான்… சாதிக்கத் துடிப்போருக்கான முன்னுதாரணம்தான். ஆனால் அப்படி வரும்போது மழை நேரம், மலைப்பாதை, சாயும் மரங்கள், பாயும் யானை என்றெல்லாம் சீன்கள் சீரியலாய் நீள்வது அயர்ச்சி!

குறைகள் இருந்தாலும் குடும்பத்தோடு பார்க்கலாம் என்பதால் டான், வின்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here