கதாநாயகிகள் கதையின் நாயகிகளாக வலுவான கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்களின் வரிசையில் ‘டிரைவர் ஜமுனா.’
வழக்கமான பழிவாங்கல் கதையில் ஒரு பெண்ணின் நியாயமான கோபத்தை கோர்த்திருப்பது கதையோட்டத்தின் தனித்துவம்.
அப்பாவை இழந்த இளம்பெண் ஐமுனா, அவர் ஓட்டிக் கொண்டிருந்த சொந்த காரை கால்டாக்ஸியில் இணைத்து தானே டிரைவராகிறார். கொலை செய்வதை தொழிலாக கொண்ட மூன்று பேர் ஒருநாள் ஜமுனாவின் காரில் ஏறுகிறார்கள்.
அந்த காரில் கூலிப்படை ஆசாமிகள் பயணிப்பதை கண்டறிந்த காவல்துறை அவர்களை மடக்கிப் பிடிக்க ஆயத்தமாகிறது. போலீஸிடமிருந்து தப்பிக்க தாங்கள் சொல்கிற பாதையில் காரை செலுத்தும்படி ஜமுனாவை கட்டாயப்படுத்துகிறார்கள். கூடவே பாலியல் சீண்டலுக்கும் ஆளாகிறாள்.
ஆபத்தில் சிக்கிக்கொண்டதை உணர்கிற ஜமுனா வேறுவழியின்றி அவர்கள் சொல்வதை செய்கிறார். அதன்பிறகான கார் பயண காட்சிகளில் பெட்ரோல் கிணற்றில் தீ பிடித்தது போன்ற பரபரப்பு தொற்றுகிறது. இடைவேளைக்குப் பிறகு கதையிலிருக்கிற எதிர்பாராத டிவிஸ்ட் விறுவிறுப்பு கூட்டுகிறது…
டிரைவர் ஜமுனாவாக நடிப்பு ராட்சசி ஐஸ்வர்யா ராஜேஷ். கூலிப்படையிடம் சிக்கிக்கொண்டு பயத்தில் உறைவதாகட்டும் அப்பாவைக் கொன்றவர்களை பழிவாங்க தம்பியோடு சேர்ந்து திட்டமிட்டு சாதுர்யமாக செயல்படுத்துவதாகட்டும் அத்தனை காட்சிகளிலும் தேர்ந்த நடிப்பு. படம் முழுக்க கிட்டத்தட்ட ஒரே காஸ்ட்யூமில் எளிமையான தோற்றத்தில் வருவது கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கிறது!
கதையின் முதல் ஹீரோ ஐஸ்வர்யா ராஜேஷ் என்றால், இரண்டாவது ஹீரோ சாதாரணமாக நகரும் காட்சிகளைக்கூட தனது இசையால் ஜிவ்வென்று வேகமெடுக்க வைத்திருக்கிற ஜிப்ரான்!
சுயநலத்துக்காக எதையும் செய்கிற அரசியல்வாதியாக ‘ஆடுகளம்’ நரேன். கொலைவெறியை கண்களிலும் வசன உச்சரிப்பிலும் காட்டுகிறார்.
கூலிப்படை ஆசாமிகளாக வருகிறவர்களின் நடிப்பு மிரட்டல்.
பக்கவாத(உதறு)வாதத்தால் பாதிக்கப்பட்டவராக வருகிற ஸ்ரீரஞ்சனியின் நடிப்பும் ஈர்க்கிறது.
கார் பயணத்தில் இணைந்துகொள்கிற அபிஷேக்கின் ஆர்வக்கோளாறு அலட்டல்களை அவ்வளவாய் ரசிக்க முடியவில்லை.
கார் பயணம் மட்டுமே ஒட்டுமொத்த படத்தின் கதைக்களம். ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாயின் உழைப்பால் அந்த களம் கனமாகியிருக்கிறது!
கதாநாயகியை கால் டாக்ஸி டிரைவராக முதன்மை பாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பது தமிழ் சினிமாவில் புதிய முயற்சி! அதை செய்த இயக்குநர் கிங்ஸ்லி, திரைக்கதையிலும் புதுமை செய்ய முயற்சித்திருக்கலாம்.
இந்த படம் மற்றவர்கள் பார்வையில் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். படத்தைப் பார்க்கும் பெண்கள் மனதில் டிரைவர் ஜமுனா தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தூண்டுவது உறுதி!