‘ச்சீய்’ படங்களில் திறந்து காட்டிக் கொண்டிருந்த சன்னிலியோன் பேய்ப்படத்தில் திறமை காட்டியிருப்பதை பார்க்கிற வாய்ப்பு!
‘ஏ‘டாகூடமான படங்கள் எடுப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிற இயக்குநர் ஏ. பாரதி. அவருக்கு, இரண்டாயிரம் ரூபாயை கொடுத்து தனக்கு ஜோடியாக நயன்தாரா வேண்டும் என கேட்கிற ஆர்வக்கோளாறான தயாரிப்பாளர் கிடைக்க அவரையே ஹீரோவாக்கி கட்டிலில் தூக்கிப் போடுகிறார். இந்த ‘காம‘டி களேபரங்களுக்கிடையில் இயக்குநர் தங்கியிருக்கும் அறையில் அமானுஷ்ய சக்தியின் நடமாட்டம் தென்பட கலவரமடைகிறார்.
அந்த சக்தி தனது காதலியின் உடலை ஆக்கிரமித்து ஆட்டிவைக்க பயம் தொற்றி பதற்றமடைகிற இயக்குநர் தன் காதலியை பற்றியிருக்கும் சக்தி பற்றி அறிந்துகொள்ள களமிறங்குகிறார். 1000 வருடங்களுக்கு முந்தைய கதை விரிகிறது.
அரசியாக, அழகியாக இருக்கிற சன்னிலியோன் யோகிபாபுவின் சூழ்ச்சியால் கொல்லப்படுகிறார். அவரது ஆவியே இயக்குநருடைய காதலியின் உடலில் தஞ்சமடைந்திருக்கிறது என்கிற உண்மை தெரிகிறது.
யோகிபாபு செய்த சூழ்ச்சி என்ன? சம்பந்தப்பட்ட இயக்குநருக்கும் அந்த ஆவிக்கும் என்ன சம்பந்தம்? இயக்குநர் ஆவியின் பிடியிலிருந்து தன் காதலியை எப்படி மீட்கிறார்? இதற்கான பதில்கள் சற்றே பரபரப்பான திரைக்கதையில்… இயக்கம்: யுவன்
இடைவேளையில் பாப்கார்ன் வாங்க எந்திரிக்கும்போதுதான் சன்னிலியோன் என்ற பால்கோவாவின் என்ட்ரீ. அவர் தன் தந்தையை எதிர்த்து சேவகர்களை வாள் வீச்சுக்கு பலியாக்கும் காட்சிகளில் அனல் பறக்கிறது. மேகத்தில் செய்தது போலிருக்கிற அவரது மேனியின் வளைவு நெளிவுகளை தரிசிக்க பாடலொன்றில் காட்சி தருகிறார் அந்த ஸ்டைலிஷ் தலைவி!
எடுப்பது ஏ படம் என்றாலும் ஏ.ஆர். முருகதாஸ் ரேஞ்சுக்கு கெத்து காட்டுகிற கலகலப்பான வேடத்தில் சதீஷ். சன்னியுடனான பிளாஷ்பேக் காட்சியிலும் கவர்கிறார்.
யோகிபாபுவுக்கு 1000 வருடங்களுக்கு முந்தைய கதையில் வருகிற ராஜகுரு கதாபாத்திரத்தைக் கொடுத்து, வழக்கமான பாணியிலேயே அவரை பேசவைத்து அழகு பார்த்திருக்கிறார்கள். அவரும் ‘போடா ஸ்பிரே வாயா’ என்றெல்லாம் அடித்து விடுகிறார். அவ்வளவாய் ஈர்க்கவில்லை.
சதீஷின் காதலியாக தர்ஷா குப்தா. வழக்கமான ஹீரோயின்களுக்கான வேலையை சரியாகச் செய்திருக்கிறார். பேயாக மாறி பயமுறுத்துவதில் தனித்துவம் நஹி!
கலாட்டாவான ரோலில் ஜி.பி. முத்து. கொஞ்ச நேரமே வருகிற அவரது கதாபாத்திரப் பெயர் ‘குஞ்சாங்கோ.’ அவர் எது செய்தாலும் ரசிக்க ஒரு கூட்டமிருக்கிறது. அவர்களை திருப்திபடுத்த தவறவில்லை!
சதீஷின் ரூம் மேட்டாக வருகிற ரமேஷ் திலக், புல்லாங்குழல் சாமியாராக வருகிற ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், படத் தயாரிப்பாளராக வருகிற அர்ஜுன் அவரவர் ஸ்டைலில் லேசாக கிச்சுக்கிச்சு மூட்டுவதோடு சரி!
சன்னிலியோனை வீழ்த்த வந்து வீழ்கிற ரவிமரியாவை ரசிக்க முடிகிறது!
குத்துப் பாட்டு, மெலடி மெட்டு என வெரைட்டி காட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸ்!
கலை இயக்குநரின் உழைப்பில் உருவான பிரமாண்ட அரண்மனை தீபக் மேனனின் ஒளிப்பதிவில் கூடுதல் கம்பீரம் காட்டுகிறது.
நிறைவாக இருவரி… வழக்கமான பேய்ப்படங்களில் இதுவும் ஒன்று என்ற நினைப்பில் போனால் ஏமாற்றமிருக்காது. இல்லையென்றால் ‘ஓ மை கோஸ்ட்’, ‘ஓ மை காட்’ சொல்ல வைக்கலாம், ஜாக்கிரதை!
Review சு. கணேஷ்குமார்
WhatsApp 99415 14078
Mail startcutactionn@gmail.com

