அறிமுக இயக்குநர் விக்ரம் ரமேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராகவும் நடித்துள்ள படம் ‘எனக்கு என்டே கிடையாது.’
இந்த படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கதாநாயகியாக ஸ்வயம்சித்தா நடித்துள்ளார். சிவகுமார் ராஜு, பிச்சைக்காரன் புகழ் முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சென்னையில் உள்ள மூன்று வெவ்வேறு பகுதிகளில் கிட்டத்தட்ட 35 நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது.
இப்படம் குறித்து தயாரிப்பாளரும் படத்தின் ஹீரோக்களில் ஒருவருமான கார்த்திக் கூறும்போது, “சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் பல வருடங்கள் தியேட்டர் லேப் ஜெயராவிடம் நடிப்பு பயிற்சி பெற்றேன். ஓரிரு படங்களில் நடித்தாலும் அவை பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் நண்பர்கள் உதவியுடன் படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினேன். அப்படி உருவானது இந்த ஹங்ரி வொல்ஃப் தயாரிப்பு நிறுவனம்.
என்னுடைய நண்பர் மூலமாக இணைந்தவர் தான் இயக்குநர் விக்ரம். அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் ஐடி துறையில் பணியாற்றிய அவர் சினிமா மீதான ஆர்வத்தால் நடிப்பு மற்றும் டைரக்சனில் இறங்கியுள்ளார். இரண்டு மூன்று படங்களில் நடித்த ஓரளவு பிரபலமான ஹீரோக்கள் கூட எங்களது புதிய நிறுவனத்தில் நடிப்பதற்கு தயக்கம் காட்டினர். அதனால் புது முகங்களை வைத்து படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினோம்.
நானும் இயக்குநர் விக்ரமும் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரங்களாக நடித்துள்ளோம். மற்றபடி எங்களைத் தவிர படத்தில் நடித்துள்ளவர்களும் பணியாற்றியவர்களும் ஓரளவுக்கு மற்ற படங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்கள் தான். இருந்தாலும் பக்காவான ரிகர்சல் செய்துதான் படப்பிடிப்பிற்கு சென்றோம்.
தேவையில்லாத விஷயத்தில் தலையிட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்கிற கருத்தை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலேயே படம் பார்ப்பவர்களை கதைக்குள் இழுத்து சென்றுவிடும். நான் அடிப்படையில் ஹாலிவுட் இயக்குநர் ஹிட்ச்காக் படங்களை விரும்பிப் பார்ப்பவன். குறிப்பாக அவர் தனது பல படங்களை ஒரு வீட்டிற்குள்ளேயே, அதற்குள் உள்ள மனிதர்களை வைத்து உருவாக்கி இருப்பார். அதே பாணியில் தான் இந்த படமும் ஒரு வீட்டிற்குள்ளேயே நடைபெறும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக சென்னையில் முக்கிய பகுதியில் உள்ள, சீரியலுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வீட்டை செட் ஒர்க் அமைத்து முற்றிலுமாக மாற்றி படப்பிடிப்பை நடத்தினோம். அந்த வீடு இன்று பல சீரியல்களில் இடம் பெற்றிருந்தாலும் எங்களது படத்தில் முற்றிலும் ஒரு புதிய இடமாக காட்சியளிக்கும். கிட்டத்தட்ட 35 நாட்கள் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.
புதிய நிறுவனம் தான் என்றாலும் கேப்டன் விஜயகாந்த் பாணியில் அனைவருக்கும் சரிசமமான சாப்பாடு, படப்பிடிப்பு நிறைவு பெறும் நேரத்திலேயே ஊதியம் என தொழிலாளர்களின் மன நிறைவுடன் இந்த படத்தை நடத்தி முடித்தோம்.
படத்தில் அதிக காட்சிகளில் மது பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் நாங்கள் சொல்ல வந்த விஷயத்தை சொல்வதற்கு அப்படிப்பட்ட காட்சிகள் தேவைப்பட்டது. இனிவரும் படங்களில் இது போன்ற காட்சிகள் இடம் பெறாமல் பார்த்துக் கொள்வோம். அதேசமயம் எந்த ஒரு மெசேஜையும் இந்த படத்தின் மூலமாக நாங்கள் வலிந்து சொல்லவில்லை.
இந்த படத்தை தயாரிக்க மிக முக்கிய காரணம் விக்ரம் கூறிய கதை மேல் இருந்த நம்பிக்கைதான். அதனால் இந்த கதையை உருவாக்கிய அவரே படத்தையும் இயக்கினால் பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம். அது மட்டுமல்ல பிரபல இயக்குநர்களிடம் பணியாற்றி விட்டு வரும் பெரும்பாலான உதவி இயக்குநர்கள் தங்களது குருவின் பாணியிலேயே பயணிப்பது தான் வழக்கம். இது முற்றிலும் புதிய வகை சினிமா என்பதால் புதியவரான விக்ரம் இதை திறம்பட கையாண்டு உள்ளார். படம் பார்த்த பலரும் இந்த படத்தின் காட்சிகளும் வசனமும் ஃப்ரெஷ்ஷாக இருப்பதாக பாராட்டினார்கள். இந்தியாவின் “ஹேங் ஓவர்” படம் போன்று இதை உருவாக்கியுள்ளோம் என்று சொல்லலாம்.
சமீப காலமாக இயக்குநர் நெல்சன் போன்றவர்கள் டார்க் காமெடிக்கு ஒரு பாதை போட்டு கொடுத்து தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற வைத்துள்ளனர். இந்த படமும் டார்க் காமெடி கலந்த கிரைம் திரில்லராகத் தான் தான் உருவாகி உள்ளது. படம் பார்க்கும் ரசிகர்கள் நிச்சயம் புன்முறுவல் பூக்கும் விதமாகத்தான் இந்த படம் இருக்கும்” என்கிறார்.இப்படத்தை ஆக்ஷன் ரியாக்ஷன் சார்பில் ஜெனீஷ் வெளியிடுகிறார்.
சூப்பர் டூப்பர், ரிப்பப்பரி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தளபதி ரத்னம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவப்பு எனக்கு பிடிக்கும், பீர்பால், தீவிரம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள கலாச்சரண் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஆல் இன் ஆல் அழகுராஜா, சந்திரமுகி 2, யாத்திசை உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குனர் பிரகாஷ் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். படத்தொகுப்பை முகன்வேல் மேற்கொண்டுள்ளார். கலை வடிவமைப்பை சூர்யா கவனித்துள்ளார்.