இந்த படத்தின் இயக்குநரும் இசையமைப்பாளரும் சரித்திரம் படைக்க வந்தவர்கள்! -‘ஃபைண்டர்’ பட விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து பேச்சு

சார்லி கதைநாயகனாக நடிக்க, வினோத் ராஜேந்திரன் இயக்கியுள்ள படம் ‘ஃபைண்டர்.’ இந்த படத்தில் சென்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், நடிகை பிரானா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா 29.7.2023 அன்று காலை சென்னையில் நடந்தது. படக்குழுவினருடன், திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இயக்குநர் தயாரிப்பாளர் வினோத் ராஜேந்திரன், ‘‘படத்திற்கு பெரும் உறுதுணையாக இருந்த ஐயா வைரமுத்து, நடிகர் சார்லி ஆகியோருக்கு என் நன்றிகள். படத்தில் அனைவருமே தங்கள் படம் போல் கருதி மிக கடினமான உழைப்பை தந்துள்ளார்கள். நாங்கள் நினைத்ததை சுவாரஸ்யமான படமாக உருவாக்கியுள்ளோம். உங்கள் அனைவருக்கும் படம் கண்டிப்பாக பிடிக்கும். படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்” என்றார்.

நடிகர் சார்லி, ‘‘இந்த நிகழ்ச்சி எனது மனதிற்கு மிகவும் பெருக்கமானது, அண்ணன் வைரமுத்து அவர்கள் இந்த விழாவிற்கு தலைமை தாங்குவது எங்கள் குழுவினருக்கு பெருமை, இந்த படத்தில் பெரிய கதாநாயகன்கள் இல்லை; கதைதான் நாயகன். வைரமுத்து அவர்கள் இந்தப் படத்தில் பாடல் எழுத ஒப்புக் கொண்டது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. இந்த படத்திற்காக கடின உழைப்பை கொடுத்துள்ளார் இயக்குநர் வினோத். நல்ல கவிஞர்; மிகவும் நல்ல மனிதர். நன்றி மறவா மனிதர். இந்தப் படம் பலரது உழைப்பில் உருவானது. படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள்” என்றார்.

கவிப்பேரரசு வைரமுத்து, ‘‘இந்த விழாவிற்கு வந்த தயாரிப்பாளர் குஞ்சு மோகன் அவர்களுக்கு நன்றி, சார்லி மற்றும் படக்குழு அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். சினிமாவின் முதல் ரசிகனும் நான்தான், கடைசி உழைப்பாளியும் நான்தான். சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டும் இல்லை அது ஒரு பல்கலைகழகம், நாம் அங்கு கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. இயக்குநரும் இசையமைப்பாளரும் என் வீட்டிற்கு வந்தனர், அவர்களை உற்று கவனித்தேன். அவர்கள் கதை சொல்ல மட்டும் வந்தவர்கள் அல்ல சரித்திரம் படைக்க வந்தவர்கள் என்பதை புரிந்து கொண்டேன்.

நான் புதியவர்கள் யார் வந்தாலும் அவர்களை பார்ப்பதில்லை அவர்களது உழைப்பை தான் பார்ப்பேன், இவர்களது உழைப்பு அருமையாக இருந்தது. தயாரிப்பாளர் சுப்ரமணியன் அவர்களுக்கு எனது வாழ்த்துகள் இன்று சினிமாவில் தயாரிப்பாளர்கள் கண்டு பிடிப்பது அரிது. இந்த தயாரிப்பாளருக்கு எந்த ஐயமும் இல்லை படத்தை நன்றாக தயாரித்துள்ளார். படம் கண்டிப்பாக உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும். இந்தப் படத்தில் பாடல்கள் கதையை சொல்லவில்லை. படத்தில் வரும் ஒரு நிகழ்வை சொல்லுமாறு அமைந்துள்ளது. சினிமாவில் குறை சொல்வது எளிது ஆனால் நிறை காண்பது அரிது. அதனால் யாரும் எழுதட்டும், யாரும் பாடட்டும், அதில் யாரும் நடிக்கட்டும், ஆனால் தமிழை நன்கு அறிந்து விட்டு அதை செய்யட்டும். இதைத்தான் நான் வேண்டுகோளாக கேட்டுக் கொள்கிறேன்.

இந்தப் படத்திற்கு தமிழில் தலைப்பை வைக்க வேண்டுமென்று கேட்டேன். ஆனால் படக்குழுவினர் வியாபாரத்தில் அது பிரச்சனை ஏற்படுத்துகிறது என்றனர். தமிழுக்கு அது தவறு என்றாலும் தயாரிப்பாளர் தமிழன் என்பதால் அதை நான் ஒப்புக் கொண்டேன். சார்லி ஒரு கெட்டிகார நல்லவன். நாற்பது வருடம் இந்த சினிமாவில் இருந்து வருகிறான். அவனது கலை மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன், இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். படத்தின் வெற்றி விழாவில் அனைவரையும் நான் சந்திப்பேன், படக்குழு அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.

இசையமைப்பாளர் சூர்யபிரசாத், ‘‘இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாகவும் அடையாளமாகவும் வைரமுத்து சார் உள்ளார். அவரது வரிகளுக்கு நான் இசையமைத்தது எனக்கு கனவு மாதிரி இருந்தது. இன்றும் என்னால் இதை நம்ப முடியவில்லை. எங்கள் தேவை அறிந்து அட்டகாசமான பாடல்களை கொடுத்தார். படத்தில் சார்லி சாரின் நடிப்பு சிறப்பாக இருந்தது” என்றார்.

‘அரபி புரொடக்சன்ஸ்’ வெற்றி, தயாரிப்பாளர் கே டி குஞ்சு மோகன், தயாரிப்பாளர் ஜி தனஞ்செயன், நடிகர் சென்ராயன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

‘அரபி புரொடக்சன்ஸ்’ ரஜீஃப் சுப்பிரமணியம், ‘வியன் வெஞ்சர்ஸ்’ இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

உருவாக்கத்தில் உறுதுணை:-
தயாரிப்பு – Arabi production ரஜீஃப் சுப்பிரமணியம் & Viyan ventures வினோத் ராஜேந்திரன்
ஒளிப்பதிவு – பிரசாந்த் வெள்ளிங்கிரி
இசை – சூர்ய பிரசாத்
எடிட்டர் – தமிழ்குமரன்
கலை இயக்கம் – அஜய் சம்பந்தம்
மக்கள் தொடர்பு – ஏ. ராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here