விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி இணைந்து நடிக்கும் வசனமில்லாத மௌனப் படம் ‘காந்தி டாக்ஸ்.’ கிஷோர் பி. பெலேகர் இந்த படத்தை இயக்குகிறார். படத்தில் அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த் ஜாதவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஜீ ஸ்டுடியோஸ் (Zee Studios) நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் ப்ளாக் காமெடி ஜானரில் உருவாகிறது.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் விளம்பரக் காட்சி, படம் இப்படித்தான் இருக்கும் என எடுத்துக் காட்டுவதாக இருந்தது. மௌனப் படம் என்பதால் அனைத்து ‘மொழி’யினருக்கும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
படத்துக்கு இசை ஏ.ஆர். ரஹ்மான். வசனமில்லாத இந்த படத்துக்கு அவரது இசைதான் பெரும்பலமாக இருக்க முடியும்.
படத்தின் இயக்குநரிடம் பேசினோம்… ”மௌனப் படம் என்பது வித்தை காட்டும் செயல் அல்ல. இது கதைசொல்லலின் ஒரு வடிவம். பேசும் மொழியான வசனத்தை முற்றிலும் நிராகரித்துவிட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது கடினமானது மட்டுமல்ல, சுவாரஸ்யமும் சவாலும் கூட” என்றார்.
ஜீ ஸ்டுடியோஸ் (Zee Studios) நிறுவனத்தின் CBO ஷாரிக் படேல், ”இந்த படத்தின் கதை தனித்துவமானது. பலரும் தங்கள் வாழ்வுடன் தொடர்புபடுத்தக்கூடியது. பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த மெளனப் படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி என பெரிய நடிகர்கள் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த புது முயற்சி எங்களுக்கு புத்துணர்வைத் தந்துள்ளது” என்றார்.
இந்த படம் உலகம் முழுவதும் அடுத்தாண்டு வெளியிடப்படவுள்ளது.