மனம் விரும்பியதற்கு மாறாக மண வாழ்க்கை அமைந்தால் பின் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை காமெடியாக காட்சிப்படுத்தியிருக்கும் ‘கட்டா குஸ்தி!’
ஹீரோ தனக்கு மனைவியாக வருகிறவள் அதிகம் படித்தவளாக இருக்கக்கூடாது; தனக்கு பணிவிடை செய்பவளாக இருக்க வேண்டும். அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும்; அளவில்லாத கூந்தலுக்குச் சொந்தக்காரியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் விரும்புகிறார். பெண் வீட்டார் தங்கள் மகள் குஸ்தி வீராங்கனை என்கிற விவரத்தை மறைத்து ஹீரோவுக்கு கட்டி வைக்கிறார்கள்.
மறைக்கப்பட்ட விவரம் மணாளனுக்கு தெரிந்தபின் அரங்கேறுகிற கலவர களேபரங்களே கதையோட்டம்… ஒவ்வொரு காட்சியும் சிரித்து ரசிக்க உத்தரவாதம்! இயக்கம்: செல்லா அய்யாவு
கபடி, குடி, சின்னச்சின்ன அடிதடி என திமிராகத் திரிவதாகட்டும், தன் மனைவி குஸ்தி வீராங்கனை என்பது தெரிகிறபோது காட்டும் முகபாவமாகட்டும், மனைவிக்கு ஊரில் கிடைக்கிற மாலை மரியாதையைப் பார்த்து பம்முவதாகட்டும், தனக்குத் தெரியாத குஸ்தியை முறையாக கற்றுக் கொண்டு மனைவிக்கு எதிராக களமிறங்குவதாகட்டும் அத்தனையும் கவர்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதையில் தனது நடிப்பு பங்களிப்பு அதிகம் இருந்துவிடக்கூடாது என அடக்கி வாசித்திருப்பதற்காக விஷ்ணு விஷாலுக்கு ஸ்பெஷலாய் பாராட்டு!
வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் குஸ்தி களத்தில் கம்பீரம் காட்டுகிற கதைநாயகியாக ஐஸ்வர்யா லெஷ்மி. கணவனுக்கு தனது செயற்கை கூந்தல் தெரிந்துவிடக்கூடாது என அவதிப்படுகிற அத்தியாயங்களில் அவர் அந்த செயற்கை கூந்தலை துவைத்துக் காயவைக்கிறபோது எழுகிற சிரிப்பை அடக்குவது சிரமமோ சிரமம்! கணவனை சிலர் தாக்கும்போது அவருக்குள்ளிருக்கும் குஸ்தி வீராங்கனை வெளிப்பட, ‘கிராப் கட்டிங்’கோடு சிலிர்த்தெழுந்து சூறாவளியாய் சுழன்றடிப்பது, புல்லட்டில் ஏறி பறப்பது கவனம் ஈர்க்கிறது; அந்த சண்டைப் பயிற்சிக்காக அதிகம் உழைத்திருப்பது தெரிகிறது.
அவரது உடற்கட்டின் செழுமை ஒரு கோணத்தில் கவர்ச்சி, இன்னொரு கோணத்தில் குஸ்தி வீராங்கனை பாத்திரத்துக்கு கச்சிதமான தேர்ச்சி!
நண்பன், மாமா, மச்சி என மற்ற பாத்திரங்களில் வருகிற கருணாஸ், முனீஸ்காந்த், காளி வெங்கட், ஹரீஸ் பேரடி என அத்தனைப் பேரும் அசத்தலான தேர்வு. அவரவர் பங்களிப்பில் நிறைவு!
கருணாஸின் மனைவியாக லிஸி ஆண்டனி. ஒன்றிரண்டு காட்சிகளில் வந்துபோகும் அவரை வைத்து போகிற போக்கில் ‘இந்த காலத்திலும் பெண்கள் நிலை பரிதாபம்தான்’ என்பதை சொல்லியிருப்பது டைரக்டரின் இன்டைரக்ட் டச்!
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ‘உன்ன பாக்காத நேரம்’ பாடல் இனிமை. அந்த கல்யாணப் பாட்டும் கிறங்கடிக்கிறது! பாடல் காட்சிகள் ஏகத்துக்கும் கலர்ஃபுல்!
பொள்ளாச்சியின் இயற்கை, பாலக்காட்டின் பசுமை என ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி.
கதைக்களத்தின் பெரும்பகுதியை காமெடியால் நிரப்பியிருந்தாலும், பெண்களின் திறமையை மதித்து ஊக்குவிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியிருப்பது படத்தின் தனித்துவம்!