படம் வழியாக சமூகத்துக்கும், நாட்டுக்கும் பாடம் நடத்துகிற படங்களின் வரிசையில் ‘லெஷ்மிகாந்தன் கொலை வழக்கு.’
தலைப்பைப் பார்த்து அந்தக் கால சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதருக்கு தொடர்புள்ள லெஷ்மிகாந்தன் கொலை வழக்கு சம்பந்தப்பட்ட கதையாக இருக்குமோ என நினைத்துக் குழம்ப வேண்டாம். இதற்கும் அதற்கும் எந்த தொடர்புமில்லை.
எம் ஜி ஆர் அதிமுக’வை துவங்கிய காலகட்டம் அது. நாயகன் அறிவுமதி திருட்டைத் தொழிலாக வைத்திருப்பவன். திருடப் போன இடத்தில் ஒரு கொலையைச் செய்துவிட, தூக்கு தண்டனை பெறுகிறான். சிறையில் நாட்களைக் கழிக்கும்போது, தன் வாழ்க்கையில் நடந்தவற்றையெல்லாம் எழுதி முடிக்கிறான். அதை புக்கமாக்கி வெளியிட உதவும்படி ஜெயிலரிடம் வேண்டுகோள் வைக்கிறான். குற்றங்களுக்கு மரண தண்டனை என்பதே தவறு என ஜெயிலரிடம் கருத்து சொல்கிறான்.
இப்படி நகரும் கதையில், திருடன் கொலைகாரனாக மாறியது ஏன்? யாரை கொலை செய்தான்? தூக்கு தண்டனையிலிருந்து தப்பிக்க முடிந்ததா? இல்லையா? என்பதெல்லாம் பரபரப்பான பக்கங்கள்… இயக்கம் தயாள் பத்மநாபன்
திருடுவதை ஆரம்பத்தில் குற்றமாக கருதுவது, போகப்போக குற்றவுணர்ச்சியின்றி திருடுவது, மனைவியாகப் போகிறவளிடம் தான் திருடன் என்பதை வெளிப்படையாகச் சொல்வது, தன் கண்ணெதிரில் நடக்கும் கொடுமையை ஜீரணிக்க முடியாமல் கத்தி ரத்தம் என சட்டத்தைக் கையிலெடுப்பது, தூக்கில் போட கொஞ்ச நேரமே இருக்கும்போது குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் மரண தண்டனை அநியாயத்தின் உச்சம் என ஜெயிலரிடம் அழுத்தந்திருத்தமாய் எடுத்துச் சொல்வது என அறிவுமதியாக வருகிற வெற்றி இயல்பாக நடித்து கவனம் பெறுகிறார்.
ஜெயிலராக ரங்கராஜ் பாண்டே. எந்த ஜெயிலரும் தூக்குக் கயிறை ஏற்பதற்கு குளித்து தயாராகிவிட்ட கைதியிடம் அத்தனை நேரம் நிறுத்தி நிதானமாக பேசிக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், இவர் கைதியின் கருத்துக்களை வரி வரியாக கேட்கிறார்; அவனது உணர்வுகளைப் புரிந்து கொள்கிறார்; சட்டத்தை மீறி தன்னால் எதை செய்ய முடியுமோ அதை அவனுக்காக செய்யத் தயாராகிறார். ஒட்டுமொத்தமாக பார்த்தால் நின்றபடியே வசனம் பேசுகிற வேலை. அதை கச்சிதமாக செய்திருக்கிறார்.
மகன் திருடன், கொலைகாரன் என தெரிந்ததும் ஆத்திரமடைவதாகட்டும், மகனை இன்னும் சில நிமிடங்களில் தூக்கில் போட்டுவிடுவார்கள் என்ற நிலையில் அருகிலிருந்து கதறித் துடிப்பதாகட்டும் லிஸி ஆண்டனி காட்டும் தாய்ப்பாசம் நெகிழ வைக்கிறது.
ஊரில் பெரிய மனிதர், பணபலம் அதிகமுள்ளவர், வட்டிக்கு கடன் கொடுப்பவர், வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்தாதவர் வீட்டுப் பெண்களை காமப்பசிக்கு பலியாக்குபவர், சொந்த பெண்ணையும் பலியாக்க காத்திருப்பவர் என கவிதா பாரதிக்கு தரப்பட்டிருப்பது குரூரமான வில்லன் வேடம். குறை சொல்லமுடியாத அளவில் களமாடியிருக்கிறார்.
பிரிகிடாவுக்கு காட்சிகள் குறைவு; அன்பான காதலியாக, பாசமான மனைவியாக நடிப்பு நிறைவு.
லொள்ளு சபா மாறனுக்கு காமெடி ஒருசில சந்தர்ப்பம் தவிர வழக்கமான கலாட்டாக்களில் ஈடுபட வாய்ப்பில்லாத, கதையோடு இணைந்து பயணிக்கிற வாய்ப்பு. சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
குற்றவாளிகளை தூக்கில் போடும் பணியாளராக சுப்ரமணிய சிவா, நீதிபதியாக கன்யா பாரதி, ஆசிரியராக சரவணன், கொலைக் குற்றவாளியாக அருவி மதன் என இன்னபிற கேரக்டர்களில் வருகிறவர்களின் பங்களிப்பு போதுமான அளவில் இருக்கிறது.
பெரியாரிய சிந்தனையாளர் சுப. வீரபாண்டியன் கிளைமாக்ஸில் ஒன்றிரண்டு நிமிடங்கள் மரண தண்டனை குறித்து தனது தனித்துவமான குரலில் பேசி நகர்கிறார்.
தர்புகா சிவாவின் பின்னணி இசை மெல்ல நகரும் காட்சிகளுக்கு சுறுசுறுப்பூட்டுவது போலவும், சில காட்சிகளில் அளவுக்கதிக சோக கீதமாகவும் கலந்திருக்கிறது.
குற்றங்களுக்கு விதிக்கப்படும் மரண தண்டனை கொலைக்குச் சமம் என்கிற கருத்தை எளிமையான கதை மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் தயாள் பத்மநாபன்.

