இட்லி கடை சினிமா விமர்சனம்

‘அடிதடி தகராறெல்லாம் கூடாது; அகிம்சையே தலை சிறந்தது’ என தன் தந்தை சொல்லிக் கொடுத்தபடி வாழ முயற்சி செய்கிற ஒருவனை, சந்தர்ப்பச் சூழ்நிலை ஆக்சன் அதிரடிக்குள் இழுத்து விடுவதும், அதிலிருந்து அவன் மீண்டு வருவதுமாய் பின்னப்பட்ட கதை…

தேனியிலுள்ள சிறிய கிராமத்தில் இருக்கிறது அந்த இட்லி கடை. அதன் உரிமையாளர் சிவனேசனின் கைப்பக்குவத்தில் உருவாகும் இட்லி சுவையோ சுவை. அதற்கு ஒட்டுமொத்த மக்களும் அடிமையாகி கிடக்க, அந்த கடை கிராமத்தின் அடையாளமாகவே மாறிப்போயிருக்கிறது.

சிவனேசன் காலமான பிறகு அவரது வாரிசான முருகன் கடைக்கு பொறுப்பேற்க, அவனையும் கடையையும் அழிக்க வெளிநாட்டிலிருந்து அஸ்வின் என்ற மாபெரும் பணக்கார இளைஞன் வருகிறான். அவனிடமிருந்து தன்னையும், கடையையும் காப்பாற்றிக்கொள்ள முருகன் படுகிற அவஸ்தைகள் அத்தனையும் ரணகளம்.

முருகனுக்கும் அஸ்வினுக்கும் அப்படி என்னதான் பகை? பதில் சொல்கிறது இயக்குநர் தனுஷின் திரைக்கதை.

படத்தை இயக்கியதோடு, ‘உங்ககளைப் போலவே நானும் இட்லி கடை காலத்தை ஓட்டணுமா, சொந்தமா கார் வாங்கி ஓட்ட வேண்டாமா?’ என்றெல்லாம் அப்பாவிடம் வார்த்தைகளைக் கொட்டுவது, கேட்டரிங் படித்து வெளிநாட்டில் உலகமகா பணக்காரர் ஒருவர் நடத்தும் ஸ்டார் ஹோட்டலில் செஃப்பாக வேலைக்குச் சேர்ந்து திறமையால் முன்னேறுவது, ஹோட்டல் முதலாளியின் மகளின் மனதைக் கவர்ந்து கல்யாணம் வரை செல்வது, அப்பாவின் இழப்புக்கு பின் அவரது வாரிசாக இட்லி கடைக்குள் நுழைவது, அவரது கைப்பக்குவத்தில் உருவாகும் சுவையை கொண்டுவர படாதபாடு படுவது, தன் காதலியின் அண்ணன் அஸ்வினிடம் அடிபட்டு மிதிபட்டு சுடப்பட்டு ரத்தம் சிந்துவது, பொறுமையின் எல்லை மீறி அஸ்வினை போட்டுப் பொளப்பது என தனுஷுக்கு தினுசு தினுசால செய்ய ஏகப்பட்ட வேலைகள். அனைத்தையும் மீட்டருக்கு மிகாத நடிப்பில் அடக்கியிருப்பவருக்கு, உள்ளூரிலும் ஒரு காதலி. ரொமான்ஸ் எல்லாம் படு ஜாலி. அஸ்வினுக்கு கிளைமாக்ஸில் கொடுக்கும் தண்டனை சுவாரஸ்யம்.

கிரைண்டரில் அரைத்தால் இட்லியின் தரம் குறையும் என்பதால் அதை தவிர்த்து வாழ்நாள் முழுக்க கையினாலேயே மாவரைத்து இட்லி வார்ப்பது, சண்டை சச்சரவுகளில் தான் கையாளும் மென்முறையை மகனுக்கும் கடத்துவது என கையெடுத்துக் கும்பிடும்படி பங்களித்திருக்கிறார் தனுஷின் தந்தையாக வருகிற ராஜ்கிரண். அவரது மனைவியாக கீதா கைலாசம்; இட்லி மாவுக்கான அரிசியோடு கலக்கும் உளுந்துபோல் நல்ல பொருத்தம்.

விஜய் சேதுபதியுடன் பரோட்டா கடையில் களமாடிய நித்யா மேனனுக்கு இதில் இட்லி கடையில் கடமையாற்ற வாய்ப்பு. அதை பயன்படுத்தி இட்லிக்கு சுவை கூட்டும் சட்னியாய் கதையோடும் கதாநாயகனின் காதலோடும் கலந்திருக்கிறார்.

உலகமகா பணக்காரரின் வாரிசாக அருண் விஜய். தங்களிடம் சம்பளத்துக்கு வேலை பார்க்கிற முருகனை தன் தங்கை காதலிப்பதில் துவங்கிற வெறுப்பை, தங்கையை அவன் கல்யாணம் செய்து கொள்ள மறுக்கும்போது பகையாக மாற்றிக்கொண்டு வன்முறை வெறியாட்டம் ஆடுகிறபோது தெறிக்க விடுகிறார்.

ஒரு விதத்தில், சமுத்திரகனி கதைக்குத் தேவையில்லாத ஆணி போல் தோன்றினாலும் இட்லி கடைக்கு எதிராக பரோட்டா கடை போட்டு அடாவடியை அப்லோடு செய்திருப்பதில் குறையில்லை.

பல்லாயிரம் கோடிக்கு சொந்தக்காரர் என்றாலும் பண்பானவராக இருப்பது, தன் பொறுமை சோதனைக்கு ஆளாகும்போது வில்லனாக மாறுவது என சத்யராஜ்,

கேடுகெட்ட போலீஸ் போல் நடந்துகொண்டாலும், ஒரு கட்டத்துக்கு மேல் பண்பான குணத்துக்கு சொந்தக்காரர் போல் மாறுகிற பார்த்திபன் என சீனியர்கள் போடும் அட்டனன்ஸ் சின்சியராக இருக்கிறது.

ஒன் டே மேட்சில் கவனம் ஈர்க்கிற பிளேயர்போல் கதாநாயகனை உருகி உருகி காதலிக்கிற ஷாலினி பாண்டே பொருத்தமான நடிப்பால் மனதைக் கவர்கிறார்.

கிராமத்தின் அழகு, வெளிநாட்டின் பளபளப்பு இரண்டையும் அதனதன் தன்மை குறையாமல் தன் கேமரா கண்களால் காட்டியிருக்கிறார் கிரண் கௌசிக்.

ஜி.வி. பிரகாஷ் இசையில் தனுஷ் குரல் புகுந்து புறப்பட்டிருக்கும் ‘என்ன சுகம்’ பாடல் இனிமைகூட்ட, ‘எத்தன சாமி’ பாடல் மனதில் இடம்பிடிக்கிறது. காட்சிகள் தர நினைக்கும் உணர்வுகளுக்கு துணை நிற்கிறது பின்னணி இசை.

கலை இயக்குநர் ஜாக்கியின் உழைப்பில் கட்டமைக்கப்பட்ட இட்லி கடையும், கிராமத்து வீடுகளும் பழங்காலத்துக்கு கூட்டிச் செல்கிறது.

அதிக சம்பளம், சொகுசு வாழ்க்கை என கிராமத்திலிருந்து வெளியூர் வெளிநாடு செல்பவர்களால் அவர்களின் பெற்றோர் தவிக்கிற தவிப்பு, கிராமம் அதன் தன்மையை இழக்கிற வருத்தம் என பலவற்றை இதமாக பதமாக பரிமாறி,  ‘அகிம்சையை விட சிறந்த ஆயுதம் ஏதுமில்லை’ என எடுத்துச் சொல்லியிருக்கும் இட்லி கடை இயக்குநர் தனுஷுக்கு பூக்கூடை பரிசளித்துப் பாராட்டலாம்!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here