Home Uncategorized ‘இன் கார்’ சினிமா விமர்சனம்

‘இன் கார்’ சினிமா விமர்சனம்

பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை பெருகிவரும் சூழலில், அதே சப்ஜெக்டை கதைக்களமாக கொண்டு ஹிந்தியில் உருவான ‘இன் கார்’ மொழிமாற்றம் செய்யப்பட்டு அரங்கேறியிருக்கிறது தமிழ்நாட்டு திரையரங்குகளில்!

கதைக்களம் வட மாநிலம். இரண்டு இளைஞர்கள், அவர்களின் மாமன் என மூன்று பேர் ஒரு இளம்பெண்ணை காரில் கடத்துகிறார்கள். ஏகப்பட்ட தூரம் பயணித்து, குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு கூட்டிச் சென்று அவளை தங்கள் பாலியல் பசிக்கு பலியாக்குவது அவர்களின் திட்டம்.

அதற்கு முன்பாக, காரிலேயே அவர்கள் அவளை கட்டிப்போட்டு தொட்டுத்தடவி இம்சிக்க அவர்களிடமிருந்து தப்பிக்க அவள் போராடுவதாக நகர்கிறது அந்த கார் பயணம். போராட்டத்தில் அவள் ஜெயித்தாளா? இல்லையா என்பது கிளைமாக்ஸ். இயக்கம் ஹர்ஷவர்தன்

திடுதிப்பென கடத்தப்படும் பெண்ணின் மனநிலையை கச்சிதமாக பிரதிபலித்திருப்பதாகட்டும், அணிந்திருக்கும் உடையோடு காரில் சிறுநீர் கழித்து அவதிப்படுவதாகட்டும், நிறைவுக் காட்சியில் கரிப்புழுதியில் சதிகாரர்களை சம்ஹாரம் செய்வதாகட்டும் ரித்திகா சிங்குக்கு ‘இறுதிச்சுற்று’க்கு பிறகு பெயர் சொல்லும்படியான கனமான பாத்திரம்!

குடிப்பதோடு ஏதேதோ போதைப் பொருட்களை உட்கொண்டு வக்கிரத்தை வெளிப்படுத்தும் பாத்திரத்திற்கு சந்தீப் கோயட், மணிஷ் ஜன்ஜோலியா, ஜியான் பிரகாஷ் மூவரும் தோற்றத்திலும் நடை உடை பாவனையிலும் மிகச்சரியான தேர்வு; நடிப்பு பங்களிப்பும் நேர்த்தி!

கதையின் பெரும்பாலான காட்சிகள் கார் பயணத்திலேயே கடந்துபோக அவை சலிப்பூட்டாதிருப்பதற்கு கடுமையாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மிதுன் கங்கோபாத்யாய்!

காட்சிகளின் தேவைக்கேற்ப ஏற்ற இறக்கத்துடன் பின்னணி இசையை தந்துள்ள மதியாஸ் டூப்ளிஸி சில காட்சிகளில் அமைதியை தவழவிட்டிருப்பது கவனிக்க வைக்கிறது!

பயமும் பதட்டமுமாக நகர வேண்டிய சில காட்சிகள் ஏனோதானோவென கடந்து போவதை தவிர்த்துப் பார்த்தால்…

பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டமுள்ள இடத்திலேயே ஒரு பெண்ணை கடத்துவது, மக்கள் நடமாட்டமுள்ள சாலைவழியே எங்கும் எவரிடமும் சிக்காமல் அவர்களின் இலக்கு நோக்கி பயணிப்பது, கடத்தப்பட்ட பெண்ணுக்கு யாரும் உதவிக்கு வர முடியாதது என்றெல்லாம் நீளும் காட்சிகள் இதெல்லாம் சாத்தியம்தானா? என மனதுக்குள் கேள்வியெழுப்பினாலும் கதை நிகழ்விடத்தில் அனைத்தும் சாத்தியமே என்பதே உண்மை. அந்த உண்மையை அதன் வீரியம் குறையாமல் பதிவு செய்திருக்கும் துணிச்சலுக்காக இயக்குநரை பாராட்டலாம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்