‘இரை‘ வலைத்தொடர் (Web Series) விமர்சனம்
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத கிரைம் திரில்லராக ‘இரை.’
கடந்த பிப்ரவரி 11 முதல் ஒளிபரப்பைத் தொடங்கியிருக்கும் ஆஹா ஓ.டி.டி. தளத்தின் முதல் வலைத் தொடர். சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்கும் முதல் வலைத் தொடரும்கூட!
நகரத்தில் முக்கிய நபர்கள் காணாமல் போகிறார்கள். குற்றவாளிகளைக் கண்டறிவது காவல்துறைக்கு சவாலாக இருக்கிறது. சில காரணங்களால் காவல்துறைப் பணியிலிருந்து விலகியிருக்கிற சரத்குமார், சம்பவங்களின் பின்னணியை துப்புதுலக்க களமிறங்குகிறார். விசாரணையில் காணாமல் போன நபர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுவது, அதற்கான காரணங்கள் என அடுத்தடுத்த காட்சிகளில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…
அர்ச்சனா சரத் எழுதிய ‘பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே’ நாவலை தழுவி இயக்கியிருக்கிறார் ராஜேஷ் எம். செல்வா (இவர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தூங்காவனம், கடாரம்கொண்டான் படங்களை இயக்கியவர்.)
முகம் தெரியாத அளவுக்கு அடர்ந்த தாடியோடு வந்தாலும் போலீஸ் உயரதிகாரிக்கான கம்பீரத்தை கச்சிதமாக வெளிப்படுத்துவதாகட்டும், சென்டிமென்ட் காட்சிகளில் நெகிழ வைப்பதாகட்டும் சரத்குமார் தான் ஏற்ற பாத்திரத்தின் நடிப்புப் பங்களிப்பில் துடிப்பும் மிடுக்கும் காட்டுவது நிறைவு!
சரத்குமாருக்கு மனைவியாக வருகிறவரின் பாத்திரப் படைப்பு வித்தியாசம். அவர் தமிழ், ஆங்கிலம், மலையாளம் என கலந்துகட்டி பேசித்திரிவது கவனம் ஈர்க்கிறது
வாழைத்தண்டுக்கு வெள்ளி முலாம் பூசியதுபோல் பளீரென்றிருக்கிறார் ஸ்ரீஷா. அவரது நெகுநெகு உயரம் காவல்துறை அதிகாரி பாத்திரத்துக்கு பக்கா பொருத்தம். அவரது இளமை இளைஞர்களின் ஹார்மோனுக்குள் கலவரம் நடத்துவது உறுதி!
நிழல்கள் ரவி, அபிஷேக், கேபிள் சங்கர், கருப்பு நம்பியார், கல்கி, ஸ்ரீகிருஷ்ண தயாள் என மற்ற கதாபாத்திரங்களின் நடிப்பில் குறையேதுமில்லை.
சரத்குமாரின் மகள் பூஜாவும் மனதைத் தொடும்படியான பாத்திரத்தில் வந்துபோகிறார்.
அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை அத்தனை காட்சிகளிலும் தக்க வைத்திருக்கிற மனோஜ்குமார் கலைவாணனின் திரைக்கதை,
திரில்லான காட்சிகளை திகிலாக நகர்த்துகிற ஜிப்ரானின் பின்னணி இசை,
அவ்வப்போது கால் நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்துக்குப் போய்வருகிற கதையின் சம்பவங்களை நேர்த்தியாக கத்தரித்துக் கோர்த்துள்ள எடிட்டர் ஷான் லேகோஷ் என படக்குழுவின் உழைப்பு படத்தின் பலம்!
குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறையை அஸ்திவாரமாக கொண்ட கதைதான் என்றாலும் அதை வித்தியாசமான, விறுவிறுப்பான விஷுவல் டிரிட்டாக தந்திருப்பதில் இரை நிறை!