கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியாகி பெரியளவில் வெற்றி பெற்ற படம் ‘ஜிகர்தண்டா.’ அந்த படத்தைப் போலவே ஆக்ஷன் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.’
இந்த படத்திற்கான படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல சுவாரஸ்யமான இடங்களில் நடைபெற்றதோடு, கதைக்கேற்றபடி பெரும் அரங்கங்களும் அமைக்கப்பட்டன. கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு மிக முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டன.
முதன்மை வேடங்களில் நடிக்கும் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா பங்கேற்க சென்னையில் கடந்த புதன்கிழமை படப்பிடிப்பு நிறைவு பெற்றது.
அப்போது பேசிய படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “எங்கள் அனைவருக்கும் மிகவும் திருப்தியளிக்கும் அனுபவமாக ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படப்பிடிப்பு அமைந்தது. மிகவும் அழகான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு தயாராக இருக்கிறோம். ரசிகர்களுக்கு அற்புதமான அனுபவத்தை இந்த படம் வழங்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
‘மெர்குரி’ மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ உள்ளிட்ட படங்களில் கார்த்திக் சுப்பராஜுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய, தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு, இந்த படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘ஜிகர்தண்டா’ உட்பட கார்த்திக் சுப்பராஜின் பல படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ‘ஜிகர்தண்டா’வை எடிட்டிங் செய்து தேசிய விருது பெற்ற விவேக் ஹர்ஷனின் உதவியாளரான ஷஃபிக் முகமது அலி படத்தொகுப்பை கையாள்கிறார்.
திருப்பங்கள் நிறைந்த ஜிகர்தண்டாவை போல் இந்த படமும் விறுவிறுப்புடன் கூடிய ஒரு டிரெண்ட் செட்டர் படமாக அமையும் என்று படக்குழு உறுதி செய்துள்ளனர்.படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது.