Home விமர்சனம் ஜாக்கி சினிமா விமர்சனம்

ஜாக்கி சினிமா விமர்சனம்

நாம் வளர்க்கும் ஆடு மாடுகளை, சேவல் புறா உள்ளிட்ட பறவைகளை வைத்து போட்டிகள் நடத்தி வெறித்தனமாக சண்டையிட்டுக் கொள்வதெல்லாம் நம்முடைய பாரம்பரிய விளையாட்டாக, கலாச்சார அடையாளமாக இருக்கிறது. அந்த வகையில் மதுரை சுற்று வட்டாரத்தில் காலங்காலமாக நடந்து வரும் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்று கிடா முட்டுச் சண்டை. அதை மையப்படுத்தி சுழல்கிறது ஜாக்கியின் கதை.

ராமர், கார்த்தி என இளைஞர்கள் இரண்டு பேர், தாங்கள் வளர்க்கும் ஆட்டுக் கிடாக்களுக்கு முறையாக பயிற்சியளித்து களத்தில் இறக்குகிறார்கள். அதுவரை களத்தில் தோல்வியை சந்திக்காத கார்த்தியின் கிடா, ராமரின் கிடாவிடம் தோற்கிறது. அந்த தோல்வியால் கார்த்தி ராமரை எதிரியாக கருத, கிடாமுட்டுச் சண்டை இரு இளைஞர்களுக்குள்ளான ஹீரோ – வில்லன் சண்டையாகிறது. அப்படியான சண்டைகளில் பெரும்பாலும் ஹீரோதான் ஜெயிப்பார். இதிலும் அவர்தான் ஜெயிக்கிறார். எப்படி ஜெயிக்கிறார்; ஜெயிக்கும்வரை என்னென்ன கஷ்ட நஷ்டங்களைச் சந்திக்கிறார் என்பதே திரைக்கதை…

முரட்டுத்தனமான கார் ரேஸை மையப்படுத்தி ‘மட்டி’ படம் இயக்கி கவனம் ஈர்த்த டாக்டர் பிரகபல் இந்த ‘ஜாக்கி’ மூலம் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறார்.

நேர்மையான வழியில் களம் காணும் ராமராக யுவன் கிருஷ்ணா. வெற்றிக்காக சூழச்சி, சதி, கொலை என எதை வேண்டுமானாலும் செய்பவராக ரிதான். நேர்மையாக நடந்துகொள்பவன் சவால்களை எதிர்கொண்டு போராடுவதும் துன்பங்களைச் சந்திப்பதும் வழக்கம். யுவனும் அதே வழக்கப்படி எல்லாவற்றையும் அனுபவிக்கிறார். ரிதான் அவரது வில்லன் கேரக்டருக்கேற்ப உருட்டல் மிரட்டலாக திரிகிறார். இருவரின் நடிப்புப் பங்களிப்பும் ஆக்சன் அதிரடியும் கதைக்களத்துக்கு பலம்.

ஹீரோவுக்கு ஜோடியாக வந்து படத்தில் காதல் காட்சிகளுக்கு புத்துணர்ச்சி தருபவர் அம்மு அபிராமி. கிடாக்களும் தெறிக்க விடுகின்றன.

மதுசுதன் ராவ், சித்தன் மோகன், சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா, சரண்யா ரவி, பத்மன், கே பி ஒய் யோகி என நடிகர் நடிகைகள் ஏராளம்; நடிப்பு கச்சிதம்.

என்.எஸ்.உதயகுமாரின் கேமரா கிடா சண்டைகளையும், கதை நிகழும் மதுரையின் சுற்று வட்டாரப்பகுதிகளை அதன் தன்மையோடு காட்சிப்படுத்தியிருக்கிறது.

சக்தி பாலாஜியின் இசையில் பாடல்கள் உயிர்ப்புடன் இருக்க, பின்னணி இசை கிடா சண்டை, இரு தரப்பு மோதல் என பரபரப்பான கதையின் நகர்வுக்கு துணை நிற்கிறது.

போட்டிகளில் பங்கேற்பதற்கேற்ற கிடாக்களை சொந்தமாக வாங்கி, அவற்றுக்கும் ஹீரோ, வில்லன் உள்ளிட்ட நடிகர்களுக்கும் முறையான பயிற்சியளித்து, கிடாக்களை நிஜமான போட்டிகளில் பங்கேற்க வைத்து என 3 வருடகால உழைப்பில் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது முக்கியச் செய்தி. படம் அதற்கான அங்கீகாரங்களைப் பெறும் என்பது உறுதி!

ஜாக்கி – மலையாள இயக்குநரின் ‘ஆடுகளம்!’

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்