காமெடி படங்கள் எடுப்பதற்கு பதிலாக தற்கொலை செய்து கொள்வேன்! -‘கொலை’ பட விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேச்சு

விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கொலை.’

பாலாஜி குமார் இயக்கியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் நடிகர் விஜய் ஆண்டனி, “இயக்குநர் பாலாஜி நிறைய ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் பற்றி ஒரு ரகசியம் சொல்கிறேன். டிவிட்டர் நிறுவன எலான் மஸ்க் தங்கச்சியின் நண்பர் அவர். படம் சிறப்பாக வந்துள்ளது” என்றார்.

இசையமைப்பாளர் கிரீஷ், “இந்தப் படம் என் கரியரில் மிக முக்கியமானது. வெளிநாடுகளுக்கு சென்று இசையமைப்பது, பாடகர்கள் என அனைத்தையும் கேட்டவுடனே யோசிக்காமல் தயாரிப்பு தரப்பு செய்து கொடுத்தது. இசை, இயக்கம், தயாரிப்பு என விஜய் ஆண்டனி சாரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயம் இருக்கிறது. பாலாஜி குமாருடன் எனக்கு இரண்டாவது படம்” என்றார்.

இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், “இந்த படத்தின் டிரெய்லர் அருமையாக இருந்தது. சினிமா என்பது கூத்துக் என்ற கலையில் இருந்துதான் வந்தது. சினிமா எனும் கலையை புரிந்து இயங்குபவர்கள் இங்கு குறைவு. என்னைப் பார்ப்பவர்களே அடுத்து என்ன சார் கொலை படமா என்று கேட்பார்கள். அப்படி என் படங்களை சுருக்கி விட்டார்கள். ஒரு நல்ல இயக்குநர் படத்தலைப்பின் எழுத்து வடிவம் மூலமாக பார்வையாளர்களுக்கு கதை சொல்ல முடியுமா என்று யோசிப்பான். அந்த வகையில்‘கொலை’ என்ற இந்தப் படத்தின் டைட்டில் எழுத்துக்காக (Font) இயக்குநர் அவ்வளவு மெனக்கெட்டுள்ளார்.

ஒரு மனிதன் ஏன் கொலை செய்கிறான்? உடல் முழுவதும் கத்தியால் குத்தப்பட்டு இருக்கும் ஒருவனின் வலியை நாம் எப்படி புரிந்து கொள்வோம்? அப்படி ஒரு இடத்திற்கு ஒரு மனிதன் உந்தப்படுவான் என்றால் அவன் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளான் என்று அர்த்தம். மகாபாரதம், ராமாயணம் என இதிகாசங்களில் கொலை. ஷேக்ஸ்பியரின் நாவல்களில் நான்கு கொலை பற்றிதான் சொல்கிறது. அது ஏன் என்று யோசிப்பவர்களால்தான் இதுபோன்ற படங்களை உருவாக்க முடியும். அந்த வகையில், இயக்குநர் பாலாஜிக்கு நன்றி. தொடர்ந்து அவர் கொலை படங்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

என்னிடம் ஜாலியான ரெமாண்டிக் காமெடி படங்கள் எடுக்க மாட்டீர்களா எனக் கேட்கிறார்கள். அப்படி செய்வதற்கு நான் தற்கொலை செய்து கொள்வேன். அது எனக்கு போர். ஒவ்வொரு கொலை படத்திலும் ஒரு கொலைகாரனுக்குப் பின்னால் ஒரு மர்மமுடிச்சு அவிழ்க்கப்படாமல் இறுக்கமாக உள்ளது. அதை விசாரித்து இயக்குநர் ஒரு சிறந்த படமாக தரும்போது அது வெற்றிப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன், ‘‘ ‘கொலை’ படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. க்ரைம் திரில்லர் என்பதோடு படத்தில் நிறைய எமோஷனலான விஷயங்களும் உள்ளது. படத்தின் நேரம் 2 மணி நேரம் 8 நிமிடங்கள் தான்” என்றார்.

திரைப்பட விநியோகஸ்தர் ‘சக்தி ஃபிலிம் பேக்டரி’ சக்திவேலன், “‘போர்தொழில்’ படத்திற்கு பிறகு இந்த படம் எனக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என பலரும் நம்பிக்கைக் கொடுத்தனர். இந்த படத்திற்காக கடின உழைப்பை விஜய் ஆண்டனி கொடுத்துள்ளார்” என்றார்.

நடிகர் ஜான் விஜய், நடிகை மீனாட்சி செளத்ரி, ஒளிப்பதிவாளர் குமார், எடிட்டர் செல்வா, இயக்குநர்கள் சசி, விஜய் மில்டன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, சத்யதோதி தியாகராஜன், முரளி, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, இயக்குநர்கள் லிங்குசாமி, விஜய் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here