அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன் மற்றும் பலர் நடிக்க, மாயோன் சிவா தொரப்பாடி இயக்கியுள்ள படம் ‘கன்னி.’
இந்த படம் வரும் மே 17-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் அறிமுகவிழா சென்னையில் நடந்தது.
விழாவில் 96 படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார், கன்னி
படத்தின் தயாரிப்பாளர் எம். செல்வராஜ், இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி, படத்தில் நடித்த அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன், ஒளிப்பதிவாளர் ராஜ்குமார், இசையமைப்பாளர் செபாஸ்டியன் சதீஷ்,படத்தொகுப்பாளர் சாம், கலை இயக்குநர் சக்திவேல் மோகன்,கலரிஸ்ட் சி. சுருளி ராஜன்,மக்கள் தொடர்பாளர் சக்தி சரவணன்,தயாரிப்பு நிர்வாகி ஹென்றி குமார் ஆகியோர் உள்ளிட்ட படக் குழுவினர் பங்கேற்றனர்.
திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவர் தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர் பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கே. ராஜன் பேசும்போது, “கன்னி என்கிற அற்புதமான தலைப்பு இந்தப் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. கன்னி என்பது பரிசுத்தம், தூய்மை என்ற பொருள்படும். அவர் வைத்திருக்கிற கதைக்கரு தமிழ்ப் பாரம்பரியம், தமிழ்க் கலாச்சாரம், தமிழ்ப் பண்பாடு, சித்த வைத்தியம் அனைத்தையும் உள்ளடக்கியது.
ஒரு காலத்தில் சித்த மருத்துவம் சிறந்து விளங்கியது. பிறகு யாரும் ஏறெடுத்து பார்க்காமல் அலோபதிக்குச் சென்றார்கள்.தலைவலி என்றால் காலுக்கு எக்ஸ்ரே எடுப்பான்.ஏனென்றால் அவனது எக்ஸ்ரே மிஷின் சும்மா இருக்கக் கூடாது. பல டாக்டர்கள் படித்துவிட்டு கோடீஸ்வரர் ஆகி விட்டார்கள். சித்த மருத்துவத்தின் சிறப்பு கொரோனா காலத்தில்தான் தெரிந்தது. அப்போதுதான் படித்தவன், படிக்காதவன் அத்தனை பேரும் அலோபதியை விட்டு விட்டுச் சித்த மருத்துவத்திற்குப் போனார்கள். இன்னும் 10 ஆண்டுகளில் சித்த மருத்துவம் இன்னும் சிறந்து விளங்கும். அந்த விஷயத்தை இந்தப் படத்தில் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்” என்றார்.