கதையை இயக்குநர் நவீன் குமார் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார்! -‘கடைசித் தோட்டா’ படம் பற்றி நடிகர் ராதாரவி பெருமிதம்

டத்தோ ராதாரவி, வனிதா விஜயகுமார், ஸ்ரீகுமார் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க, ‘லோக்கல் சரக்கு’ படத்தை தொடர்ந்து ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்து தயாரிக்கும் படம் ‘கடைசி தோட்டா.’

அறிமுக இயக்குநர் ரவீன் குமார் எழுதி இயக்கும் இப்படத்தில் ஸ்ரீஜா ரவி, யாஷர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் திரைப்படமான இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், ‘கடைசி தோட்டா’ படத்தின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் டத்தோ ராதாரவி அவர்கள் திரையுலகில் தனது 50 வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதை கொண்டாடும் வகையில், நேற்று சென்னையில் அவருக்கு படக்குழுவினர் பாராட்டு விழா ஒன்றை நடத்தினார்கள். சென்னையில் உள்ள அம்பிகா எம்பயர் ஓட்டலில் நடைபெற்ற இந்த விழாவில் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான சுவாமிநாதன் ராஜேஷ், இயக்குநர் நவீன் குமார் உள்ளிட்ட படக்குழுவினர்கள் கலந்துக்கொண்டு டத்தோ ராதாரவிக்கு ஆள் உயர மாலை அணிவித்து கெளரவப்படுத்தினார்கள்.

நடிகர் டத்தோ ராதாராவி பேசியபோது, “தயாரிப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷ் படத்தை சிறப்பாக தயாரித்திருக்கிறார். ‘கடைசி தோட்டா’ ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர். ஒரு ரிசார்ட்டில் நடக்கும் கதையை இயக்குநர் நவீன் குமார் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார். படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. இந்த படத்தில் நான் தான் நாயகன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் நாயகன் அல்ல, கதையின் நாயகன். அனைவருக்கும் நல்ல கதாபாத்திரம் தான், ஆனால் கதை கரு என் பக்கம் இருப்பதால், என்னை நாயகன் என்று சொல்கிறார்கள். வனிதா விஜயகுமாருக்கும் சிறப்பான வேடம். படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.

நடிகைகள் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும், இதை நான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறேன், ஆனால் அதை யாரும் கேட்பதில்லை. இந்த நிகழ்ச்சியில் கூட வனிதா கலந்து கொள்ளவில்லை என்பது படக்குழுவுக்கு வருத்தம் தான். என்னை அழைத்த போது, நானும் எதாவது காரணத்தை சொல்லி நிராகரித்திருக்கலாம். ஆனால், அது நல்லதல்ல. இவ்வளவு பெரிய ஏற்பாட்டை ஒருவர் நம்மை நம்பி செய்யும் போது, நம்மால் முடிந்த உதவியை அவருக்கு செய்ய வேண்டும், என்று தான் இதில் பங்கேற்றேன். தயாரிப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷ், படத்தை சரியான முறையில் திரையரங்கிற்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார், அதனால் தான் வெளியீட்டில் தாமதம் ஆகிறது. மற்றபடி திரையரங்கிற்கான சிறந்த படமாகவும், ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும் படமாகவும் ‘கடைசி தோட்டா’ இருக்கும்.

சினிமாவில் எனக்கு 50 வது ஆண்டு, நான் இதையும் தாண்டி நடித்துக் கொண்டிருப்பேன். நடிகன் என்பவன் இறந்தும் நடிப்பவன். அவன் இறப்பு வீடியோவை வெளியிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள் அல்லாவா, அதேபோல் அவன் இறந்தாலும் அவன் நடித்த கதாபாத்திரங்களும், காட்சிகளும் அடிக்கடி ரசிகர்கள் கண் முன் வந்துக்கொண்டு தான் இருக்கும். அதனால், என்னுடைய நடிப்பு பயணம் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கும். தற்போது நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. விஜய் அரசியலுக்குள் நுழைந்திருப்பது வரவேற்க வேண்டியது தான். அவர் என்னை அழைத்தால் நிச்சயம் நான் அவருடன் இணைவேன்” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ், “’கடைசி தோட்டா’ திரைப்படம் மிக நன்றாக வந்திருக்கிறது. ராதாரவி சாரின் 20 வது ஆண்டில் அவர் இப்படி படத்தில், கதாநாயகனாக நடித்திருப்பது எங்கள் படத்திற்கு பெருமை. படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிபோவதற்கு படத்தை சரியான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான் காரணம். ராதாரவி சார் எங்கள் படத்தில் நடித்தது முதல் இப்போதுவரை தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அவரைப் போல் படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் தான் படத்தை விளம்பர படுத்த முடியும். வனிதா மேடம் மிக நல்ல வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் இதுபோன்ற விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது எங்களுக்கு வருத்தமாக தான் இருக்கிறது. அவருக்கு வேறு ஏதோ வேலை இருக்கிறது, என்று சொல்கிறார்கள். படத்தில் நடித்தவர்கள் ஒன்று சேர்ந்து நிகழ்ச்சி நடத்த முடியாததால் தான், அடிக்கடி நிகழ்ச்சி நடத்த வேண்டி இருக்கிறது. ஆனால், கடைசி தோட்டா படம் தொடர்பாக நடக்கும் கடைசி நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும், இதன் பிறகு படம் வெளியீட்டில் உங்களை சந்திப்போம்.” என்றார்.

படக்குழு:

ஒளிப்பதிவு: மோகன் குமார்

வசனம்: நீலு குமார்

படத்தொகுப்பு: லோகேஷ்வர்

கலை இயக்கம்: சரவணன்

பாடல்கள்: சினேகன், பாலு

நிர்வாக தயாரிப்பாளர்கள்: வேலண்டினா, யுகேஷ் ராமலிங்கம்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here