கொம்புசீவி சினிமா விமர்சனம்

‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல’ என்ற எண்ணத்தில், தான் வாழும் கிராமத்தைச் சார்ந்த மக்களின் வாழ்வாதரத்துக்காக கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர் ரொக்கப்புலி. அவரிடம் அடியாளாக சேர்கிறான் அப்பா, அம்மாவை இழந்து ஆதரவற்ற நிலைமைக்கு தள்ளப்பட்ட சிறுவன் பாண்டி.

பாண்டி ரொக்கப்புலியை ‘மாமா’ என்றழைக்க, அவர் பாண்டியை ‘மாப்ள’ என்று அரவணைக்க, அந்த பாச நேசத்தோடு வருடங்கள் கடந்தோடுகின்றன. பாண்டி வளர்ந்து வாலிபனாகிறான். எப்பேர்ப்பட்ட காவல்துறை உயரதிகாரிகளாலும் வீழ்த்த முடியாத அளவுக்கு கெத்து காட்டிக் கொண்டிருக்கிற அவர்களை பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் ஸ்கெட்ச் போட்டு தூக்குகிறார். மாமாவும் மாப்ளயும் அதையெல்லாம் சமாளித்து, மக்களுக்கு உதவுவதற்காக மீண்டும் கஞ்சா’வில் கை வைக்கிறார்கள்.

நேஷனல் பர்மிட் லாரியொன்று அந்த போதைப் பொருளை ஏற்றிக்கொண்டு ஆந்திராவை நோக்கி வேகமெடுக்க, இந்த முறை அந்த கடத்தலை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என வரிந்துகட்டி களமிறங்குகிறது காவல்துறை.

படம் பார்க்கும் நமக்கு, ‘கடத்தல் நல்லபடியாக நடக்க வேண்டும்’ என்ற பதற்றம் தொற்றிக் கொள்கிறது. அந்தளவுக்கு அமைக்கப்பட்டிருக்கிறது ‘கொம்புசீவி’யின் திரைக்கதை…

கடத்தலில் ஜெயித்தது போலீஸின் கெடுபிடியா, ரொக்கப்புலியின் அடிதடியா என்பது கிளைமாக்ஸ்…

பாண்டியாக கேப்டன் விஜய்காந்தின் வாரிசு சண்முகப் பாண்டியன். மாஸ் ஹீரோவுக்கான அத்தனை தகுதிகளையும் அவர் வளர்த்துக் கொண்டிருப்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது. சென்டிமெண்ட், ஆக்சன், காதல், நடனம் என எல்லாவற்றையும் ஒரு கை பார்ப்பவரின் காமெடிப் பங்களிப்பும் களை கட்டுகிறது.

ஊருக்கு நல்லவராக, சட்டத்தின் பார்வையில் கெட்டவராக கதைநாயகன் ரொக்கப்புலியாக சரத்குமார். உருட்டல் மிரட்டல், வெட்டுக்குத்து, பரிதவிப்பு, நக்கல் நையாண்டி, சாமர்த்தியம் என நடிப்பில் எல்லாவற்றையும் காட்டும்படியான கனமான கேரக்டர். ரசித்துச் செய்திருக்கிறார்; ரசிக்கும்படி செய்திருக்கிறார்.

காவல்துறை உயரதிகாரியாக ஆரம்பக் காட்சிகளில் ‘யாருக்கும் பயப்பட மாட்டேன்; சட்டம் தன் கடமையைச் செய்தே தீரும்’ என வார்னிங் தந்தபடி சிங்கப் பெண்ணாக களமாடும்போது கவனம் ஈர்க்கிறது (நடிகை ராணியின் மகள்) தார்னிகாவின் கதாபாத்திரம். போகப்போக ஹீரோவை காதலிக்கும் வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயினாக மாறி, கடமையிலிருந்து தவறும்போது கேரக்டரின் தரம் பத்தோடு பதினொன்றாகிறது.

போலீஸ் எஸ் பி யாக வரும் சுஜித் சங்கரின் நடிப்பு மிரட்டல் ரகம்.

கல்கி ராஜாவுக்கும், தருண் கோபி _ ஸ்ரீ ரெட்டி ஜோடிக்கும் கதையோடு கலந்த காமெடி கலாட்டாக்களில் ஓரளவு முக்கியத்துவமிருக்கிறது. முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலருக்கு அப்படியும் இப்படியும் தலைகாட்டும் வாய்ப்பிருக்கிறது.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பரவாயில்லை என்ற உணர்வையே தருகிறது.

மதுரையின் சுற்றுவட்டாரப் பகுதிகள், வைகை அணையின் பிரமாண்ட நிலப்பரப்பு என கதை நிகழ்விடங்களை கண்கள் வழியே மனதுக்குள் செலுத்துகிறது பாலசுப்ரமணியெத்தின் கேமரா.

ஒரு சில கிராமங்களை ஒட்டுமொத்தமாக காலி செய்து வைகை அணை கட்டப்பட்டதும், சம்பந்தப்பட்ட கிராம மக்கள் அப்போது அனுபவித்த வேதனைகளும் கள்ளிக்காட்டு இதிகாச வரலாறாக நிலைத்திருக்கின்றன. அந்த வலி மிகுந்த ஹிஸ்ட்ரியை ஊறுகாயாக தொட்டு, ஹுயூமர் ட்ரீட் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் பொன்ராம். அந்த முயற்சி பாஸ்மார்க் பெறுகிற அளவிலேயே இருக்கிறது.

கொம்புசீவி – மந்தமான மதுரை சம்பவம்!

-சு. கணேஷ்குமார் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here