Home விமர்சனம் சுப்பன் சினிமா விமர்சனம்

சுப்பன் சினிமா விமர்சனம்

மதுரையிலிருந்து சில கிமீ தூரத்திலிருக்கும் அந்த ஊரில் மிகப்பெரிய ரவுடி வீரன். அவனது தம்பி ரவி மிகப்பெரிய காமவெறியன். அவனால் ஏகப்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்ட, அதில் ஒரு பெண்ணின் அண்ணன் அவனை பழிதீர்க்க திட்டமிடுகிறான்.

அந்த திட்டங்களும் அதன் விளைவுகளுமாக வேகமெடுக்கின்றன அடுத்தடுத்த காட்சிகள். புல்லட் ஒன்று கதையின் முக்கிய கதாபாத்திரமாக சுற்றிவருகிறது…

திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி ‘வீடியோ எடுக்காதீங்க’ என கெஞ்சிக் கதறுவதாகட்டும், தனக்கு நடந்த விபரீதத்தை வீட்டாரிடம் சொல்லி மிரள்வதாகட்டும் கனமான தன் கேரக்டருக்கு கச்சிதமான நடிப்பால் உயிரூட்டியிருக்கும் காயத்ரி ரெமா, நிச்சயதார்த்த உடையில் போடும் ஆட்டத்தில் வெளிப்படுத்தியிருக்கும் எனர்ஜி எக்கச்சக்கம்.

சாமானிய மனிதனாக இருந்துகொண்டு எல்லாவிதமான பலமும் கொண்டவர்களை எதிர்க்க வேண்டுமானால் அதற்கு துணிச்சல் மட்டும் போதாது; புத்திசாலித்தனமும் வேண்டும். அதற்கேற்ப களமாடியிருக்கிறார் காயத்ரியின் அண்ணனாக வருகிற பாலா ஹசன்.

இன்ஸ்டா மூலம் இளம் பெண்களை குறிவைத்து தூக்கிவந்து உறவு கொள்வது, வீடியோ எடுத்து மிரட்டுவது, அந்த பெண்களை உடனிருக்கும் இளைஞர்களுக்கு விருந்தாக்குவது என காமவெறியாட்டத்தை அதற்கேற்ற உடல்மொழியோடு கச்சிதமாக செய்திருக்கிறார் ‘ராட்சசன்’ யாசர். செய்வது பாலியல் வன்முறைதான் என்றாலும் அதற்கென வைத்திருக்கும் ரூல்ஸை தான் உறவுகொள்ளும் பெண்களிடம் எடுத்துச் சொல்லும் விதமும், நடக்கும் சம்பவங்களுக்கு பொருத்தமான சினிமா பாடல்களைப் பாடி ஆடும் விதமும் கவனம் பெறுகிறது.

குற்றச் செயல்களை குஷியாகச் செய்வாராம்; பெண்களை மதிப்பாராம். அப்படியொரு கேரக்டர் (இந்த படத்தை தயாரித்திருக்கிற) ஆனந்த முருகனுக்கு. அதை அனுபவித்து செய்திருக்கிறார். தன்னைக் கொல்ல ஸ்கெட்ச் போட்டவனை வித்தியாசமான அணுகுமுறையில் போட்டுத்தள்ளும் அந்த ஆரம்பக் காட்சி அசத்தல்.

இயக்குநர் சரவண சக்திக்கு வில்லனாக முகம் காட்ட வாய்ப்பு. தன்னால் முடிந்தளவு கெத்தாக செய்திருக்கிறார். அம்மாவின் ஆபரேஷன் செலவுக்கு பணம் புரட்டமுடியாத சூழலில் உருவாகும் தவிப்பை தன் நடிப்பில் சரியாக கொண்டு வந்திருக்கிறார் ஸ்ரீதேவா.

கஜராஜ், சர்மிஷா, ஹலோ கந்தசாமி, ஸ்வாதி எஸ் பிள்ளை, சரவணன், ரொட்டேரியன் விஸ்வநாராயணன், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் குறிப்பிடும்படியான கதாபாத்திரங்களில் வந்து போவதை பார்க்க முடிகிறது.

என் ஆர் ரகுநந்தன் இசையில் ‘டம்ம டம்மா’ பாடல் ரசிக்க வைக்கிறது. அலட்டல் அதிரடியில்லாத பின்னணி இசையைத் தந்திருப்பவர் ஜோஸ் பிராங்ளின். குகநேசன் சோனைமுத்துவின் ஒளிப்பதிவு தரம்.

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவங்களைத் தொட்டுக்கொண்டு, சமூகவலைதள தொடர்புகளில் பெண்கள் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் எப்படியான ஆபத்துக்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை விளக்கி படத்தை விழிப்புணர்வுப் பாடமாக்கியிருக்கிறார் இயக்குநர் குகநேசன் சோனைமுத்து.

சுப்பன் _ சமூகவிரோதிகளை சம்ஹாரம் செய்யும் வெப்பன்!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்