பொழுதுபோக்கு அம்சங்களோடு, திருநங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையும், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையுமாக ‘கெத்துல.’
அமைச்சரின் தம்பி என்ற கெத்து, இளைமைத் திமிர் இரண்டும் சேர்ந்திருக்கிற சலீம் பாண்டா பெண்களைக் கடத்தி தனது ‘அந்தரங்க ஆசை’க்கு பலியாக்குவதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார். பப் (உயர்ரக ஹோட்டலின் மதுபானக்கூடம்) ஒன்றில் மதுபானக்கூடத்தில் நடனமாடும் ரீரினுவையும் அதே ஆசையோடு அரவணைக்கப் பார்க்கிறார். அவரை, கதையின் நாயகன் ஸ்ரீஜித் காப்பாற்றுகிறார். அதனால் சலீம் பாண்டாவுக்கு ஸ்ரீஜித் மீது அடக்கமுடியாத ஆத்திரம் உருவாகிறது. இன்னொரு பக்கம், ஆபத்தான சூழலிலிருந்து தன்னைக் காப்பாற்றிய ஸ்ரீஜித் மீது ரிரீனுவுக்கு காதல் உருவாகிறது. ஸ்ரீஜித் அவரது காதலை ஏற்கும் மனநிலையில் இல்லை. அதற்கான காரணம் என்ன என்பதும், ஸ்ரீஜித் மீது கொலைவெறியிலிருக்கிற சலீம் பாண்டா அவரை என்ன செய்தார் என்பதுமே திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை!ஸ்ரீஜித் யார் என்ற பிளாஷ்பேக்கில் அதிர்ச்சியும் விறுவிறுப்பும் இருக்கிறது. இயக்கம்: வி.ஆர்.ஆர்.
சின்னச் சின்ன வேறுபாடுள்ள இரண்டு தோற்றங்களில் வருகிற ஸ்ரீஜித் உணர்வுகளை அதன் தன்மையோடு வெளிப்படுத்துவதும், சண்டைக் காட்சிகளில் அளவாக ஆக்ரோஷம் காட்டியிருப்பதும் கவர்கிறது.
சதையம்சம் தெரிய கெட்ட ஆட்டம் போட்டிருப்பதோடு, கதையம்சத்துக்கேற்ப பொருத்தமான நடிப்பையும் தந்து கவனம் ஈர்க்கிறார் நாயகி ரீரினு!
வில்லனாக வரும் சலீம் பாண்டாவின் நடிப்பிலிருக்கும் மிரட்டல் படத்தின் பலம். அமைச்சர் சாயாஜி ஷிண்டே, போலீஸ் கமிஷனர் ரவிகாலே என மற்ற கதாபாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பும் நிறைவு!
திரைக்கதைக்கு உயிரூட்டியிருக்கிறது திருநங்கை(களாக நடித்திருப்பவர்)களின் நடிப்புப் பங்களிப்பு!
இதமான பாடல்களையும் காட்சிகளின் நகர்வுகளுக்கேற்ப பின்னணி இசையையும் சரியாகத் தந்திருக்கிறார் ஜீவா வர்ஷினி! கே.ஷஷிதரின் ஒளிப்பதிவு கச்சிதம்!
‘கெத்துல’ – கதையில் பரபரப்பு இருந்தாலும் திரைக்கதையில் விறுவிறுப்பு பத்தல!