‘கடமையைச் செய்‘ சினிமா விமர்சனம்
இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் கையாளாத கனமான கதைக்கருவில், லேசாக சந்தர். சி பாணி காமெடி மாசாலா தூவிய ‘கடமையைச் செய்.’
எஸ்.ஜே. சூர்யா கதாநாயகன்; ‘இருட்டறையில் முரட்டுக் குத்து’ யாஷிகா கதாநாயகி… அப்ப சரி, இது சதையம்ச படமாத்தான் இருக்கும் என ஒரு எண்ணம் வரத்தானே செய்யும். அந்த எண்ணத்தை உடைக்கும் விதமாக கதையம்ச படத்தைக் கொடுத்து கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் வேங்கட் ராகவன்.
நாயகன் எஸ்.ஜே. சூர்யா சிவில் என்ஜினியர்; கடமையைச் சரியாக செய்பவர். சம்பளத்துக்கும் குறைவில்லாதவர். மனைவியுடனும் மகளுடனும் உற்சாகமாக குடும்பம் நடத்தி வருபவர். மாமனாரின் தேவைகளையும் நிறைவேற்றுபவர். அவருக்கு திடுதிப்பென வேலை போய்விடுகிறது. தன் தகுதிக்கான வேலையைத் தேடியலைகிறார். கிடைக்காமல் போகவே, ஒரு பெரிய அப்பார்ட்மெண்டில் செக்யூரிட்டி வேலையில் சேர்கிறார். தனது சேவையால், பணிவால், பிரியத்தால் அங்குள்ள மக்களின் பிரியத்தைச் சம்பாதிக்கிறார்.
ஒருகட்டத்தில் அவர் பணிபுரியும் அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் ஒட்டுமொத்தப் பேருக்கும் பேராபத்து ஏற்படப் போவதை அறிகிறார். அந்த நேரமாகப் பார்த்து விபத்தொன்றில் சிக்குகிறார். தன்னைச் சுற்றியுள்ளவர்கள் பேசுவதை கேட்க முடியும்; ஆனால், தான் நினைப்பதை பேச முடியாது, எழுதிக் காட்டவும் முடியாது என்ற வித்தியாசமான கோமா (ஸ்டூப்பர்) நிலைக்குப் போகிறார்.
அப்படியொரு கோமாவிலிருக்கும் அவர், அந்த அபார்மென்ட் வாசிகளைக் காப்பாற்ற போராடுவதும் அதன் ரிசல்ட் என்ன என்பதுமே கதையோட்டம்… அந்த பேராபத்து என்ன என்பது திரைக்கதையின் அஸ்திவாரம்!
ஸ்மார்ட் லுக்கில் இன்ஜினியராக வருவது, விபத்தில் சிக்கியபின் உடம்பு முறுக்கேறி கை கால்கள் திருகியவர் போல் நடப்பது, வில்லன்களால் தாறுமாறாய் அடிபடும்போது கூடுதல் விரைப்பேறி புயல் வேகத்தில் அவர்களைப் பந்தாடுவது என நடிப்பில் வெரைட்டி காட்டி ஈர்க்கிறார் எஸ். ஜே. சூர்யா. மனதுக்குள் இருக்கும் தவிப்பை வார்த்தைகளால் தெரிவிக்க இயலாத நிலையில் முகபாவங்களால் சொல்வது அசத்தல். உடல்நிலை மோசமான நிலையில் வெளிப்படுத்தும் அவரது நடையும், அப்பார்ட்மெண்ட் மக்களை மீட்க அவர் எடுத்துக்கொள்ளும் கடைசி முயற்சியும் தனித்துவம!
எஸ்.ஜே. சூர்யாவின் மனைவியாக யாஷிகா ஆனந்த். இதுவரை சதையம்சப் படங்களிலேயே நடித்து வந்தவர் கவர்ச்சிக்கு பை பை சொல்லியிருக்கிறார். கணவர் விபத்தில் சிக்கியதையறிந்து கதறித் துடிக்கும்போது அவருக்குள் இருக்கும் நடிக்கத் தெரிந்த நடிகை எட்டிப் பார்க்கிறார். படுக்கையறைக் காட்சியிலும் மனுஷி அடக்கி வாசித்திருக்கிறார்!
சேஷுவின் அச்சுப்பிச்சு காமெடி பரவாயில்லை ரகம். யோகா பெட்டில் அவர் தன் கால் விரலைச் சுவைக்கும் காட்சி ரகளை!
வில்லனாக சார்லஸ் வினோத், இராஜசிம்மன், அப்பார்ட்மெண்ட் வாசிகளாக மோகன் வைத்யா, டிஎஸ்ஆர், ராம்ஜி, இன்னபிற கதாபாத்திரங்களை ஏற்றிருக்கும் ஜெயச்சந்திரன், ஹலோ கந்தசாமி , அரவிந்த், ஷர்மிளா, கீர்த்தி, மணிமேகலை, கிருஷ்ணவேணி, ரேகா, உமா, நிஷா, ஜெயவேல், பேபி ஹர்ஷிதா உள்ளிட்டோரின் நடிப்பு பங்களிப்பு நேர்த்தி!
‘நான் கடவுள்’ ராஜேந்திரனின் காமெடி கலகலப்புக்கு கேரன்டி!
ஹீரோவுக்கு டிரைவர் வேலை போட்டுக் கொடுப்பவராக வரும் (படத்தின் இயக்குநர்) வேங்கட் ராகவனும் கலகலப்பூட்டுகிறார்.
அருண்ராஜ் இசையில், அருண்பாரதி வரிகளில் செக்யூரிட்டி வேலையின் நீள அகலங்களை விவரிக்கும் விதத்தில் உருவான ‘கடமையைச் செய்’ பாடலில் அத்தனை யதார்த்தம்; உயிரோட்டம்!
வினோத் ரத்னசாமியின் ஒளிப்பதிவு கச்சிதம்!
அது எப்படி சாத்தியம்; இது எப்படி நடக்கும் என ஆராய்ச்சி செய்யும் முளையை சற்றே அதட்டியடக்கி விட்டால், கடமையைச் செய் கண்டிப்பாக உங்களுக்கு படு வித்தியாசமான படம் பார்த்த திருப்தி தரும்!
—————
இந்த படத்தின் இயக்குநர் சுந்தர்.சியிடம், உதவியாளராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியதோடு அவரை நாயகனாக வைத்து, ‘முத்தின கத்திரிக்காய்’ என்ற படத்தை இயக்கியவர்.