ஒரு கொலை; அதை செய்தது யார் என கண்டுபிடிக்க களமிறங்கும் போலீஸ் என உருவாக்கப்பட்ட விறுவிறுப்பான திரைக்கதையிலிருந்து சீறிப் பாய்கிறது ‘கடைசி தோட்டா.’
கொடைக்கானலிலுள்ள அந்த ரிசார்ட்டில் ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட, அங்கு தங்கியிருப்பவர்களை போலீஸ் விசாரிக்கத் துவங்குகிறது. கிடைத்த விவரங்களை வைத்து, கொலை செய்த நபர் எங்கும் கிளம்பிப் போகாமல் அதே ரிசார்ட்டில் இருப்பதாக நம்புகிற போலீஸ் தரப்பு, அந்த நபர் யார் என்பதை அடையாளம் கண்டு கைது செய்ய தீவிரமாகிறது.
இப்படி வேகமெடுக்கும் கதையில் போலீஸின் பிடியில் சிக்கியது யார்; கொலைக்கான காரணம் என்ன; கொலை செய்யப்பட்டவர் யார் என்பதெல்லாம் அடுத்தடுத்த காட்சிகளில்…
கதையின் நாயகனாக, ஓய்வு பெற்ற ராணுவ உயரதிகாரியாக ‘டத்தோ’ ராதாரவி. வயதுக்கும் கொடைக்கானல் குளிருக்கும் ஏற்ப அணிந்திருக்கும் உடையே ஒருவித கம்பீரத்தைக் கொடுத்துவிட, சாந்தமான முகத்தோடு வாக்கிங் ஸ்டிக் வைத்தபடி வலம் வருகிற அவருக்கு அலட்டிக் கொள்ளாமல் நடிக்கும்படியான கதாபாத்திரம். மனைவி மீதான நேசம், மனைவியைப் இழந்தபின் மனதைவிட்டுப் பிரியாத சோகம் என காட்சிகளின் தேவைக்கேற்ப உணர்வுகளை சரியாக பிரதிபலித்திருக்கிற அவர்,
போலீஸ் விசாரணையை எதிர்கொள்ளும் போது, தன்னால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞனிடம் தன் முன்கதையை சொல்லும்போது தான் நடிப்பில் ’50 ஆண்டுகால’ அனுபவமிக்கவர் என்பதை அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார்.
போலீஸ் உயரதிகாரியாக வனிதா விஜயகுமார்; நெஞ்சை நிமிர்த்தியபடி நடப்பதிலும் நிற்பதிலும் கம்பீரம் காட்டி, கொலையாளியை கண்டறிவதற்கான விசாரணையில் சிகரெட் பிடித்தபடி தெனாவட்டுப் பேச்சாலும் திமிர்ப் பார்வையாலும் மிரட்டலான பங்களிப்பை பரிமாறியிருக்கிறார்.
மனைவியோடு ஹனிமுனுக்கு வந்த இடத்தில், நடந்த கொலையையும் கொலையாளியையும் பார்த்துவிட்டு, அதை போலீஸில் சொல்லவும் முடியாமல் சொல்லாமலிருக்கவும் முடியாமல் படுகிற அவஸ்தையை சரியாக தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார் ஸ்ரீகுமார்.
தன் முதலாளியின் மனைவியை ரிசார்ட்டுக்கு கூட்டிவந்து சல்லாபத்தில் ஈடுபடுகிற வையாபுரியின் லூட்டி கலகலப்புக்கு உதவியிருக்கிறது.
ராதாரவியின் மனைவியாக ஸ்ரீஜாரவி. பெயர்ப் பொருத்தமே அட்டகாசமாக இருக்க அந்த கனிவான முகமும் கணவர் மீது பொழியும் பாசமும் மனதில் தங்குகிறது. விசுவாசமாக இருந்த பணியாளன் துரோகியானதைக் கண்டு, என்ன செய்வதென புரியாமல் தவிக்கும் காட்சி நெகிழ்ச்சி.
யூ டியூபர்களாக வருகிற ஓட்டேரி சிவா அண்ட் கோவின் காமெடி கலாட்டா அதிகம் சிரிப்பூட்டவில்லை.
‘ராட்சசன்’ காலத்திலிருந்தே யாசரை நெகட்டிவாக பார்த்துப் பழகிவிட்டது. மீண்டும் ஒருமுறை அப்படி பார்க்க முடிகிறது. அவருக்கு ஜோடியாக வருகிற அபிராமி நமஹ லேசாக வில்லத்தனம் காட்டி கடந்துபோகிறார்.
கொட்டாச்சி, ஆரஞ்ச் மிட்டாய் பிரபா, டி ஆர் பாலசுப்ரமணியன், பிரதாப் குமார் உள்ளிட்ட இன்னபிறரின் நடிப்பு கச்சிதம்.
வி.ஆர்.சுவாமிநாதனின் இசையில் ‘ஆழம் பாத்து காலவிடு; அடுத்தவன வாழவிடு’ கானா பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. ராதாரவியும் ஸ்ரீஜாரவியும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் தருணங்களை இணைத்துப் பிணைத்திருக்கும் நானும் அவளும் பாடலின் மெல்லிசை இதயத்தை நிறைக்கிறது.
ஒரேயொரு ரிசார்ட் வளாகத்திலேயே பெரும்பாலான காட்சிகள் சுற்றிச்சுழல, கேமராவின் கோணங்களை அப்படியும் இப்படியும் மாற்றி குளிர் பிரதேசத்தின் அழகை பரவ விட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மோகன் குமார்.
லோகேஷ்வரின் எடிட்டிங்கில் படத்தின் நீளம் குறைந்து திரைக்கதையின் வேகம் கூடியிருக்கிறது.
கொலை, போலீஸ் விசாரணை என பரபரக்கும் கதையில்,
எம் எல் ஏ ஒருவரின் ரெய்டு பயத்தில் பதுக்கி வைக்கப்பட்ட லட்சக்கணக்கான பணம் காணாமல் போக, அதை கொள்ளையடித்தது யார் என்கிற தேடலையும் சேர்த்து கதைக்களத்தை அதிரிபுதிரியாக்கியிருக்கிறார் இயக்குநர் நவீன் குமார்.
கடைசி தோட்டா _ பாய்ச்சல் அதிகம்!
-சு.கணேஷ்குமார்