ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா, ஷார்ட்ஸ் இப்போது த்ரெட்ஸ் என உலகம் வேகமெடுத்து பறந்துகொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்திலும்,
நமது பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிற கலைஞர்கள் சந்திக்கிற கஷ்ட நஷ்டங்களை அக்கறையாக காட்சிப்படுத்துகிற படங்களின் வரிசையில் ‘காடப்புறா கலைக்குழு.’
சிலரைப் பார்த்து ‘அந்த மனுஷன் ஈ, எறும்புக்கு கூட துரோகம் நினைக்க மாட்டார்’ என்று சொல்வோம். இந்த படத்தின் கதைநாயகன் பாவாடை அந்த மாதிரியான ஆசாமி; பல குடும்பங்களை வாழ வைக்கிற சாமி!
நாட்டுப்புற கலைகள் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக, அந்த கலைகளில் ஈடுபாடு கொண்டவர்களை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தி வருபவர். குணத்தில் தங்கமான அவருடைய துரதிஷ்டம், தகரத்துக்கு சமமான ஊர்த் தலைவருடன் பகை உருவாகிவிடுகிறது. அந்த தலைவர் பாவாடையை எதிர்க்கும் நோக்கத்தில் அவருக்கான வாய்ப்பை முடக்க நினைக்கிறார். ஒருகட்டத்தில் அந்த பகை பாவாடையை பாடை ஏற்றுகிற முயற்சியில் ஈடுபடுகிற அளவுக்கு வன்மமாக மாறிப்போகிறது.
பாவாடை அதையெல்லாம் எப்படி முறியடிக்கிறார் என்பதும், அதற்கு அவர் செய்த நல்ல விஷயங்களெல்லாம் எப்படி உதவிக்கு வருகின்றன என்பதும் கதையோட்டம்.
கலைகளில் ஈடுபாடு கொண்டவன் அந்த கலையால் உலகப்புகழ் பெறுவது நிறைவுக் காட்சி; நிறைவான காட்சியும்கூட!
நாட்டுப்புற ஆடல், பாடல் கலைகளில் தேர்ந்தவராக பாவாடைச் சாமியாக வருகிற முனீஸ்காந்த் அதற்கேற்ற உடல்மொழியை, நடனத்தை கச்சிதமாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்க,
அவருக்கு நண்பனாக கலைக்குழுவின் தவில் இசைக் கலைஞராக வருகிற காளி வெங்கட் பாத்திரத்திற்கேற்ற பொருத்தமான நடிப்பை தந்திருக்கிறார். அவர்களின் நட்பிலிருக்கும் ஆழம் நெகிழ்ச்சி!
தன்னை வளர்த்து ஆளாக்கி, சொந்த தம்பியாக நினைத்து பாசம் காட்டுகிற பாவாடையின் திறமைக்கு உலகளவிலான புகழ் வெளிச்சம் கிடைக்க வேண்டும் என முயற்சி எடுத்து சாதித்துக் காட்டுகிற, படத்தின் இரண்டாவது நாயகனாக வருகிற ஹரிகிருஷ்ணனின் துடிப்பான நடிப்பு, அண்ணாந்து பார்க்க வைக்கிற உயரத்தில் வில்லன்களில் ஒருவராக வருகிற கார்த்திக்கின் பரபரப்பு கதைக்கு பலம்.
பென்சில் மீசை பெருமாள் என்ற பெயரில்,நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளில் பாடுபவராக ‘சூப்பர் குட்’ சுப்ரமணி. கதைக்குத் தேவையான கோமாளித்தனங்களை சரியாகச் செய்திருக்கிறார்.
‘மைம்’ கோபி வில்லனாக அவரது வழக்கமான பாணியில் கம்பீரம் காட்டியிருக்கிறார்.
கரகாட்டக் கலைஞராக வருகிற சுவாதி முத்து, கெத்து!
ஸ்ரீலேகா ராஜேந்திரன், டெலிபோன் ராஜ், ஆந்தகுடி இளையராஜா என மற்ற பாத்திரங்களில் வருகிறவர்களின் பங்களிப்பு நேர்த்தி.
ஹென்றியின் இசையில் பாடல்கள் கதைக்களத்தை புரிந்து பூர்த்தி செய்திருக்கின்றன. ‘அம்மாடி பொண்ணு செல ஓண்ணு போகுது; பாடலின் இனிமையில் தாலாட்டின் சுகத்தை உணரலாம்.
படத்தை ரசிக்க வைக்க, சென்டிமென்டை குறைத்து திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
குறைகளையெல்லாம் தாண்டி ‘நல்லவனுக்கு சோதனைமேல் சோதனை வந்தாலும், அவன் செய்த நல்ல விஷயங்கள் என்றாவது ஒருநாள் அவனை முன்னேற்றி அழகு பார்க்கும்’ என்ற நம்பிக்கையை விதைத்திருப்பதற்காக இயக்குநர் ராஜா குருசாமிக்கு பாராட்டுக்கள்!
-சு. கணேஷ்குமார் / WhatsApp: 99415 14078 / startcutactionn@gmail.com


