‘தளபதி’ விஜய்யின் ‘லியோ’ ஒரே நாளில் 10000+ டிக்கெட்டுகள் விற்று சாதனை! இங்கிலாந்தில் புதிய சகாப்தம்.

‘தளபதி’ விஜய் நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘லியோ’ திரைப்படம், உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், இங்கிலாந்தில் ஒரே நாளில் 10000+ டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த தகவலை லியோ படத்தின் யூகே மற்றும் ஐரோப்பாவிற்கான திரையரங்கு உரிமைகளைப் பெற்றுள்ள ‘அஹிம்சா என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் இன்று தெரிவித்தது. இந்த நிறுவனம் முன்னதாக விநியோகம் செய்த ‘வாரிசு’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் முன்பதிவு ஆரம்பித்த முதல் 24 மணி நேரத்தில் சுமார் 2000 டிக்கெட்டுகளை விற்று சாதனை படைத்தது. இப்போது லியோ பலமடங்கு டிக்கெட்டுகள் அதிகம் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாக முன்பதிவுகளைத் தொடங்கிய முதல் இந்தியத் திரைப்படம் எனும் பெருமையையும் லியோ பெற்றுள்ளது.

ஆறு வாரங்களுக்கு முன்பாக டிக்கெட் விற்பனையை தொடங்கிய நிலையில் கிடைத்த பெரியளவிலான வரவேற்பால், அஹிம்சா நிறுவனம் உற்சாகமடைந்துள்ளது. இனி வரும் நாட்களில் கூடுதலான  டிக்கெட்கள்  விற்பனையாகி சாதனை படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக அஹிம்சா விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை அமெரிக்காவில் விநியோகம் செய்தது. அந்த படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல், அமெரிக்க நாட்டில் வெளியான விஜய் படங்களிலேயே அதிக வசூலையும் பெற்றது. அதே போன்று, இங்கிலாந்தில் அந்த நிறுவனம் வெளியிட்ட ‘வாரிசு’ படமும் இங்கிலாந்தில் பெரியளவிலான வசூல் ஈட்டி சாதனை படைத்தது.

இப்படியான சாதனைகள் குறித்து அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தினர் பேசும்போது, ‘‘லியோ பட டிக்கெட் விற்பனையில் முதல் நாளிலேயே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத், சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலமான கூட்டணியால், மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரசிகர்கள் மிகப்பெரும் ஆதரவை தந்து வருகிறார்கள். இங்கிலாந்தில் இந்தியப் படமொன்றின் மிகப்பெரிய வெளியீடாக இப்படத்தை  உருவாக்க வேண்டும் என்பதை  நோக்கமாகக் கொண்டுள்ளோம். ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்” என்றார்கள்.

வெளிநாட்டு தமிழ்த் திரைப்பட விநியோகத்தில் புகழ்பெற்ற நிறுவனமான அஹிம்சா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர நடவடிக்கைகள் புதுமையான அணுகுமுறையை கொண்டவை. அதனால் அவர்கள் விநியோகித்த ‘பீஸ்ட்’, ‘வாரிசு’, ‘மாமன்னன்’, ‘போர் தொழில்’, ‘கோப்ரா’, ‘நானே வருவேன்’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘லவ் டுடே’, ‘விடுதலை பாகம் 1′ உள்ளிட்ட பல படங்கள் வசூலில் பிரமாண்டமான சாதனைகளைப் படைத்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here