‘தளபதி’ விஜய் நடிப்பில் பல வருடங்கள் முன் வெளிவந்து ஹிட்டடித்த படம் ‘லவ் டுடே.‘ அதே தலைப்பில் இப்போது இன்னொரு புதிய படம் உருவாகியுள்ளது.
‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் நடித்த இவானா நாயகியாகவும், சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லரை நடிகர் சிலம்பரசன் டி.ஆர். வெளியிட்டார்
”அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய நகைச்சுவை ததும்பும் பொழுதுபோக்கு படமாக ‘லவ் டுடே’ இருக்கும். இன்றைய காதல் மற்றும் 2கே தலைமுறையினர் எதிர்கொள்ளும் உறவு சிக்கல்களைப் பற்றி இப்படம் பேசும்” என்று படக் குழுவினர் தெரிவிக்கின்றனர். அதை மெய்ப்பிக்கும் வகையில் டிரைலரும் அமைந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.
இந்த படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கலை வடிவமைப்பை எம்கேடி கையாண்டுள்ளார். ‘லவ் டுடே’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தியும், நிர்வாக தயாரிப்பாளராக எஸ் எம் வெங்கட் மாணிக்கமும் பணியாற்றுகிறார்கள்.
‘லவ் டுடே’ என்ற தலைப்பைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்த சூப்பர் குட் பிலிம்ஸின் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி மற்றும் ‘தளபதி’ விஜய் ஆகியோருக்கு தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்த படம் நவம்பர் 4 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.