‘லாரா’ சினிமா விமர்சனம்

கதையில் டிவிஸ்ட் இருக்கலாம். கதை முழுவதுமே டிவிட்ஸ்டாக இருந்தால்? அப்படியொரு ஜோரான அனுபவத்தை தருகிற ‘லாரா.’

இளைஞன் லாரன்ஸ் தன் மனைவியைக் காணவில்லை என போலீஸில் புகார் கொடுக்கிறான். அடுத்த சில நாட்களில் போலீஸார், தண்ணீரில் மிதந்து அழுகிய நிலையில் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றுகிறார்கள்; சில அடையாளங்களை வைத்து அது லாரன்ஸின் மனைவியாக இருக்கலாம் என தீர்மானிக்கிறார்கள். லாரன்ஸ் அதை மறுக்கிறான்.

அதையடுத்து இரண்டு இளைஞர்கள் ஒரு பாலியல் தொழிலாளியிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள, அவள் தப்பித்து ஓட, இவர்கள் விடாமல் துரத்திய சம்பவம் போலீஸாருக்கு தெரிய வருகிறது. இறந்த பெண் அந்த பாலியல் தொழிலாளியாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை துவங்குகிறது.

அந்த பகுதி எம் எல் ஏ, நடந்துகொண்டிருக்கும் வழக்கை சீக்கிரம் முடிக்கச் சொல்லி போலீஸை அவசரப்படுத்துகிறார். கவுன்சிலர் ஒருவர் வேறு விதமாக போலீஸுக்கு நெருக்கடி தருகிறார்.

அந்த நேரமாகப் பார்த்து, லாரன்ஸ் தன் மனைவியைக் கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடுகிறான் என்று யாரோ ஒரு பெண் போலீஸுக்கு போனில் தகவல் தர, கதை சூடுபிடிக்கிறது.

போலீஸ் லாரன்ஸை வளைத்துப் பிடித்து அடித்துத் துவைக்க அதிர வைக்கும் பல உண்மைகள் வெளிவருகின்றன… அவை கதையின் விறுவிறுப்புக்கு உதவுகின்றன. அழுகிய சடலம் யாருடையது என்பதும், இயற்கை மரணமா, கொலையா என்பதற்கான பதில்கள் கிளைமாக்ஸில்…

ஹீரோ, ஹீரோயின், வில்லன் என ஒரு வட்டத்துக்குள் அடங்காமல் பல திசைகளில் பாய்ந்தோடுகிற திரைக்கதை, ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தந்திருக்கும் முக்கியத்துவம் என பல விதங்களில் படத்தை பலப்படுத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மணிமூர்த்தி.

லாரன்ஸாக பாலா. எடுப்பான பற்கள் ஒடுங்கிய முகம் என தோற்றமும், ஒல்லிப்பிச்சான் உடல்வாகும் டெரராக அமைந்திருக்க தன் முதலாளிக்காக எதையும் செய்யத் துணிந்து ‘அடல்ஸ் ஒன்லி’ சமாச்சாரங்களை குரூரமாக அரங்கேற்றுவது மிரள வைக்கிறது.

காவல்துறை உயரதிகாரியாக வருகிற (இந்த படத்தின் தயாரிப்பாளர்) கார்த்திகேசன் ஆரம்பத்தில் நகை திருட்டு விவகாரத்தை டீல் செய்யும் விதம் சுவாரஸ்யம். கிடைத்த சடலம் பற்றி துப்பு துலக்குவதில் தேவைக்கேற்ப நிதானம் காட்டுவதும், பரபரப்பு பற்ற வைப்பதுமாய் சரிவிகித பங்களிப்பை சரியாக தந்திருக்கிறார்.

படத்தின் பின் பாதியில் குறைந்த நேரத்தை மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கிற ‘முருகா’ அசோக் காதலியுடனான நெருக்கத்தில் பரவசம், காதலியை பிரிகிறபோது கலக்கம், அடக்க முடியாத அழுகை என கலவையான உணர்வுகளை கச்சிதமாக பரிமாறியிருக்கிறார்.

அசோக்கிற்கு ஜோடியாக அனுஸ்ரேயா ராஜன். ஹீரோவின் மனதில் இடம்பிடிக்கிற வழக்கமான காதலி என்பதை தாண்டி இயக்கமாக செயல்படுவது, தவறு செய்த போலீஸை துணிச்சலாக தண்டிப்பது என துடிப்பான நடிப்பைத் தந்திருக்கும் அவர் மூச்சுத் திணறி அவதிப்படுவது பரிதாபத்தை தூண்டுகிறது.

குரூரமான கணவனிடம் சிக்கித் தவிப்பது, காம உணர்வோடு திரிகிறவர்களிடம் மாட்டிக் கொண்டு அவர்களை தன் சொல்லுக்கு கட்டுப்பட வைப்பது என கவனம் பெறுகிறது இன்ஸ்டா வெண்மதியின் பெர்ஃபாமென்ஸ்.

பாலியல் தொழிலாளிகள் சந்திக்கிற பிரச்சனைகளில் ஒரு துளியை மட்டுமே வெளிக்காட்டினாலும் அதன் வழியாக ஒட்டுமொத்த பாலியல் தொழிலாளிகளின் வலியை கடத்தியிருக்கிறார் ‘பிக்பாஸ்’ வர்ஷினி வெங்கட்.

எம் எல் ஏ என்றாலும் பெரிதாக கெத்து காட்டாமல் பாசக்கார அப்பாவாக தனது சிறிய கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்திருக்கிறார் மேத்யூ வர்கீஸ்.

கவுன்சிலராக வருபவரின் வக்கிரம் நெளிய வைக்கிறது.

குடிபோதையும் ஹார்மோன் உசுப்பேற்றல் இரண்டும் கலந்துகொள்ள, செய்ய நினைத்தது ஒன்று நடந்தது இன்னொன்று என மாறிவிட சூழ்நிலைக் கைதிகளாகி போலீஸால் சுளுக்கெடுக்கப்படுகிற இ எஸ் பிரதீப், திலீப்குமார், யாரைப் பார்த்தாலும் 100 ரூபாய் கேட்கும் பாட்டி என இன்னபிறர் கதையோடு இணைந்து பயணித்திருக்கிறார்கள்.

ரகு ஸ்வரன் இசையில் ‘காதல் தீராத நேரங்கள்’ பாடல் தென்றலின் இதம் தர, ‘எல்லாம் வல்ல அல்லா’ பாடல் மெல்லிய பக்திச் சிலிர்ப்பை பரிமாறியிருக்கிறது. பின்னணி இசை கதையோட்டத்துக்கு இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பு கூட்டியிருக்கலாம்.

ஆர் ஜே ரவீன் ஒளிப்பதிவில் காரைக்காலை மங்கலான வெளிச்சத்தில் சுற்றிப் பார்க்க முடிகிறது.

பாலியல் வக்கிரத்துக்கு ஆளாகிற ஒரு பெண், பாலியல் தொழில் செய்கிற இன்னொரு பெண், துணிச்சலான மற்றொரு பெண் என மூன்று பேரை மையப்படுத்தி மூவரையும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் இணைத்து, கடைசி வரை சஸ்பென்ஸை தக்க வைத்திருப்பதற்காகவும், முதியோர் பாதுகாப்பு பற்றிய அக்கறையை கலந்திருப்பதற்காகவும் லாராவை தாராளமாய் பாராட்டலாம்.

லாரா _ இன்வெஸ்டிகேஷன் திரில்லரில் புதிய பாதை!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here