Home பொது லெனின் பாண்டியன் சினிமா விமர்சனம்

லெனின் பாண்டியன் சினிமா விமர்சனம்

மண்மணம் மாறாத கிராமத்துப் பின்னணியில், சமூகப் பிரச்சனை சார்ந்த கதையை ஹீரோவாக்கியிருக்கும் ‘லெனின் பாண்டியன்.’

மானாமதுரையின் சுற்று வட்ட கிராமத்தில் மனைவியுடன் வசிக்கிற எளிய விவசாயி துரைராசு. அவர் குழந்தை போல் பாசமாக வளர்க்கும் ஆடு மணல் கொள்ளையர்களின் லாரியில் அடிபட்டு மரணமடைகிறது. கொந்தளிக்கும் துரைராசு, போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார். ஆட்டை கொலை செய்ததாக மணல் கொள்ளையன் மீது வழக்கு பதியச் சொல்கிறார். அதனால் டென்சனாகும் இன்ஸ்பெக்டர் துரைராசுவை மிருகத்தனமாக தாக்குகிறார்.

அந்த தாக்குதல் நீதிமன்றத்துக்கு தெரிகிறது. சாதாரண ஆடு அடிபட்ட விவகாரம் மணல் கொள்ளையர்களுக்கு எதிரான மிகப்பெரிய குற்ற வழக்காகி, சி பி சி ஐ டி விசாரணைக்கு மாறுகிறது.

மணல் கொள்ளையர்களால் துரைராசுவின் உயிருக்கு ஆபத்து என்கிற சூழ்நிலை. நீதிமன்றம் அவரது பாதுகாப்புக்காக கான்ஸ்டபிள் ஒருவரை நியமிக்கிறது.

துரைராசுவை கொல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்த மணல் கொள்ளையர்கள் இப்போது அந்த கான்ஸ்டபிளையும் காவு வாங்க திட்டமிடுகிறார்கள்.

அதன்பிறகு நடக்கும் சில சம்பவங்கள் பரபரப்பாக இருக்க, துரைராசு எதிர்பார்த்த நியாயம் கிடைத்ததா இல்லையா என்பது கிளைமாக்ஸ்… இயக்கம் டி டி பாலசந்திரன்

தன் விவசாய  நிலத்தை விலைபேச வந்தரிடம் கெத்தாக மறுப்பு தெரிவிப்பது, வளர்க்கும் ஆடு மீது அளவில்லாத பாசம் காட்டுவது, ஆடு அடிபட்டுக் கிடப்பதைப் பார்த்து கதறியழுவது, போலீஸின் அடிக்கும் மிதிக்கும் ஆளாகி வலியால் துடிப்பது, தனக்கு பாதுகாப்பாக வந்த போலீஸை சொந்த பிள்ளைபோல் கருதி பிரியம் செலுத்துவது, மனைவியிடம் வயதின் முதுமைக்கேற்ற ரொமான்ஸில் ஈடுபடுவது, நீதிமன்றத்தில் தனக்கு நியாயம் கிடைப்பதற்காக போராடுவது என துரைராசுவாக வருகிற கங்கை அமரனுக்கு ஏகப்பட்ட வேலைகள். வெடவெட உடம்பும் ஒடுங்கிய முகமும் அவரது எளிய மனிதன் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்க, படபட பேச்சாலும் போதுமான நடிப்பாலும் ஏற்ற பாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கிறார்.

கதைப்படி துரைராசுவுக்கும் அவரது மனைவிக்கும் 20 வயது வித்தியாசம். அதற்கேற்ற ஒப்பனையில் கிராமத்து மனுஷியாக மாறி, பக்குவப்பட்ட நடிப்பைத் தந்திருக்கிறார் ரோஜா.

கதையின் முக்கிய பாத்திரத்தில் வருகிற சிவாஜியின் பேரன் தர்ஷனுக்கு அறிமுகப் படம். உயரதிகாரிக்கு சல்யூட் அடித்து அடித்து வெறுத்துப் போயிருக்கும் அவர், துரைராசுவின் பாதுகாப்புக்காக துப்பாக்கியை பெறும்போது காட்டும் பரவச உணர்வு, துப்பாக்கி கைவசமிருந்தும் தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் காட்டும் விரக்தி, வேறு வழியில்லாத சூழ்நிலையில் செய்த நம்பிக்கைத் துரோகத்தை நினைத்து கண்ணீர் சிந்துதல் என கனமான காட்சிகள் கொடுக்கப்பட்டிருக்க நடிப்பு பரவாயில்லை ரகமாக இருக்கிறது.

கணவனை நல்வழிப்படுத்த தன்னாலான முயற்சிகளைச் செய்யும் மனைவியாக ஸ்ரித்தா ராவ். தர்ஷனுக்கும் அவருக்கான கெமிஸ்ட்ரியில் ஆழமில்லை என்றாலும் உணர்வுபூர்வமான நடிப்பு கவர்கிறது.

நீதிபதியாக ஜார்ஜ் மரியான். அவர் சார்ந்த காட்சிகள் ஆளுமையான பங்களிப்பால் அப்ளாஸ் அள்ளுகின்றன.

மணல் மாபியா கும்பல் தலைவனாக ஆடுகளம் நரேன், அவரது தளபதியாக யுகேந்திரன், அநியாய அக்கிரங்களை குஷியாக செய்யும் காவல்துறை உயரதிகாரியாக போஸ் வெங்கட், நேர்மையான வி ஏ ஓ’வாக பிக்பாஸ் அர்ச்சனா, சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக சுப்பு பஞ்சு, ஜோதிடர் ஷெல்வீ என பலரும் அவரவர் பங்கிற்கு கச்சிதமாக கடமையாற்றுவதை பார்க்க முடிகிறது.

இசைஞானி இளையராஜா ‘பாண்டிமுனி சரணம் சரணம்’, ‘சர்க்காரே சொல்லிடுச்சு’ பாடல்கள் மூலம் வைப் உருவாக்கி, பின்னணி இசையில் போதுமான அதிரடி அட்டகாசம் செய்கிறார். ‘முதல் மரியாதை’ பாடலை சந்தர்ப்பத்துக்கேற்றபடி பயன்படுத்தியிருப்பது ரசிக்க வைக்கிறது.

வளமும் வறட்சியும் கலந்துகட்டிய கதை நிகழ்விடங்களை அழகிய கோணங்களில் பதிவு செய்து படத்தின் தரத்தைக் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏ எம் எட்வின் சகே.

அரக்க குணமுள்ளவர்களிடம் அப்பாவிகள் சிக்கினால் நிலைமை என்னவாகும் என்பதற்கு சில டெம்ப்ளேட் திரைக்கதைகள் நம்மூர் இயக்குநர்களிடம் உண்டு. அதே டெம்ப்ளேட்டில் ஏறிப் பயணிக்கும் இந்த படத்தின் முன் பாதி வெரி வெரி இன்ட்ரஸ்டிங். மிச்சமீதி அதிகப்படியான சினிமாத்தனங்களால் நிரம்பி அயர்ச்சிக்கு ஆளாக வேண்டியிருக்கிறது.

சட்டத்தால் குற்றவாளிகளின் அராஜகத்தை அழிக்க முடியாதபோது கதைநாயகன் நம்பும் பாண்டிமுனி’யாவது அவருக்கு கை கொடுப்பார் என்று எதிர்பார்த்தால், உம்ஹூம் அதற்கும் வழியில்லாமல் போகிறது.

லெனின் பாண்டியன் – அடைக்கவே முடியாதது சட்டத்திலிருக்கும் ஓட்டை!

-சு.கணேஷ்குமார்

REVIEW OVERVIEW
லெனின் பாண்டியன் சினிமா விமர்சனம்
Previous articleஇசைஞானி இளையராஜாவுக்கு ஆஸ்திரேலியா நாடாளுமன்றம் வெளியிட்ட தபால் தலை… மகிழ்ச்சியில் நடிகர் ராமராஜன் 
lenin-pandiyan-movie-reviewமண்மணம் மாறாத கிராமத்துப் பின்னணியில், சமூகப் பிரச்சனை சார்ந்த கதையை ஹீரோவாக்கியிருக்கும் 'லெனின் பாண்டியன்.' மானாமதுரையின் சுற்று வட்ட கிராமத்தில் மனைவியுடன் வசிக்கிற எளிய விவசாயி துரைராசு. அவர் குழந்தை போல் பாசமாக வளர்க்கும் ஆடு மணல் கொள்ளையர்களின் லாரியில் அடிபட்டு மரணமடைகிறது. கொந்தளிக்கும் துரைராசு, போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார். ஆட்டை கொலை செய்ததாக மணல் கொள்ளையன் மீது வழக்கு பதியச் சொல்கிறார்....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்