கணவன் மனைவிக்குள் ‘லவ்’ இல்லாவிட்டால் வாழ்க்கைப் பாதை என்னவாகும் என்பதை வித்தியாசமான கோணத்தில் எடுத்துச் சொன்ன மலையாளப் படத்தின் மறு உருவாக்கம்.
தொழிலில் நஷ்டமடைந்த பரத், பணக்கார வீட்டுப் பெண் வாணி போஜன் இருவரும் ஏற்பாட்டுத் திருமணம் மூலம் கணவன் மனைவியாகிறார்கள். பரத்தின் பொறுப்பற்றத் தனத்தால் மண வாழ்க்கையில் விழுகிறது விரிசல். ஒரு கட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடியாக மாறியதில் சடலமாகிச் சரிகிறார் வாணி போஜன். செய்த கொலையை மறைத்து, சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பிக்க திட்டமிடுகிறார் பரத்.
அந்த திட்டங்கள், அவற்றை செயல்படுத்துவதில் அவர் சந்திக்கிற சவால்கள், சமாளிப்புகள் என பலவற்றைக் கடந்தோடும் கதையின் முடிவு எதிர்பாராதது… இயக்கம் ஆர் பி பாலா
பரத் நடிக்கும் 50-வது படம். நடை உடையில் பணக்காரத் தனம், முகத்தில் தொழில் நஷ்டம் தந்த விரக்தி, கொலையை மறைக்கும் செயல்பாடுகளில் பரபரப்பு என எளிமையான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
ஆரம்பக் காட்சியில் பாலில் குளித்த நிலாவாய் சுண்டியிழுக்கும் வாணி போஜன், கணவனுடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்போது நடிப்பில் வேறொரு பரிமாணத்துக்கு தாவியிருப்பதும், பிரேதமாக வருகிற காட்சிகளுக்கு அமைதியான நடிப்பால் உயிரூட்டிருப்பதும் கச்சிதம்!
மயில்சாமிக்கு பிறகு குடிகார ஆசாமியாக நடிப்பதில் முத்திரை பதித்து வருகிற விவேக் பிரசன்னா, இந்த படத்தில் திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்தும் படி குடித்திருக்கிறார்!
இரண்டொரு முறை போனில் குரல் கொடுத்து, ஒரேயொரு காட்சியில் முகம் காட்டிப் போகிற ராதாரவியின் நடிப்பு வழக்கம்போல் கெத்து!
டேனியல் ஆனி போப், ஸ்வயம் சித்தா என படத்தில் மிகச்சில பாத்திரங்கள் மட்டுமே. அவர்களின் நேர்த்தியான நடிப்பு படத்துக்கு பலம்!
பின்னணி இசை திரைக்கதைக்கு வேகமூட்டியிருக்கிறது!
லவ் – இன்னும் கொஞ்சம் காதலோடு திரைக்கதை அமைத்திருந்தால் மனதைக் கவ்வியிருக்கும்!