வெப் படத்தின் கதாநாயகிகளுக்குள் உடை விஷயத்தில் பிரச்சினை வராததற்கு காரணம் என்ன? டிரெய்லர் வெளியீட்டு விழாவில் விளக்கம் சொன்ன இயக்குநர் ஹாரூன்

நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்து, வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி வெளியாகவிருக்கும் படம் ‘வெப்.’

இந்த படத்தில் ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாக நடிக்க, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா மணி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஹாரூன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா 26.7.2023 அன்று சென்னையில் நடந்தது. படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கே.ராஜன், தனஞ்செயன், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், சுப்பிரமணிய சிவா, நடிகை ரேகா நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இயக்குநர் ஹாரூன் பேசும்போது, “பெரும்பாலும் ஒரு கட்டடம் அழகாக தெரிவதைத்தான் பார்ப்பார்கள். ஆனால், அதன் அடித்தளம் யாருக்கும் தெரியாது. அதுபோலத் தான் தயாரிப்பாளர்களும். கார்த்திக் ராஜாவிடம் இந்த படத்தின் கதை பற்றி கூறிய போது, அப்பா இளையராஜா சைக்கோ படத்திற்கு ஒரு விதமாக பண்ணினார். நான் இதில் ஒரு புது மாதிரியாக முயற்சிக்கிறேன் என்று ஊக்கமளித்தார். நடிகர் நட்டி புது இயக்குனர் என நினைக்காமல் 100% எங்களை நம்பினார். இந்த படத்தின் கதாநாயகிகள் தங்களுக்குள் ஆடை சம்பந்தமாக எந்த பிரச்சினையும் வரவில்லை என்று சொன்னார்கள்.. அதற்கு காரணம் இரண்டு பாடல்களைத் தவிர கிளைமாக்ஸ் வரை அனைவருக்கும் ஒரே காஸ்டியூம் தான். ஜெயிலர் திரைப்படம் வரும் அதே மாதத்தில் எங்களது படமும் வெளியாவதில் மகிழ்ச்சி” என்றார்.

நடிகர் நட்டி பேசும்போது, “இயக்குநர் ஹாரூன் இதுவரை எந்த படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றாவிட்டாலும் அவர் முதல் காட்சியை எடுக்கும் போதே வேலை தெரிந்தவர்தான் என்பது தெரிந்து விட்டது. இப்போதைய சூழலில் பல பேர் தங்களது மன அழுத்தத்தை குறைப்பதற்காக சில விஷயங்களை செய்கிறார்கள். அவை ஆபத்து நிறைந்த ஒன்வே டிராபிக் என்பது பற்றி விளக்கும் படம் தான் இந்த வெப்” என்றார்.

நடிகை சுபப்பிரியா பேசும்போது, “ஒரு படத்தில் ஒரு நடிகை இருந்தாலே சமாளிப்பது கஷ்டம். இந்த படத்தில் ஐந்து பேர் இருந்தாலும் படப்பிடிப்பின்போது பெண்களுக்கான பாதுகாப்பு, தங்கும் வசதி, சாப்பாடு என எல்லாவற்றிலும் எங்களை நல்ல விதமாக பார்த்துக் கொண்டனர். இயக்குநர் ஹாரூன் படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு பேச்சுக்கும் கவுன்ட்டர் கொடுத்து ஜாலியாக படப்பிடிப்பை நடத்தினார். கதாநாயகன் நட்டியும் எப்பொழுதும் ரஜினி பாடலை உற்சாகமாக பாடிக்கொண்டு அனைவரையும் கலகலப்பாக வைத்திருந்தார்” என்றார்.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேசும்போது ‘‘நான் தமிழுக்கு அடிமை. ஹீரோயின்கள் அழகாக தமிழ் பேசியதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. நட்டியுடன் அவர் அறிமுகமான நாளை உட்பட மூன்று படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன். இயக்குனர் மிஷ்கின் போல ஒரு சிலர்தான் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டு வாங்குவதை சரியாக தெரிந்து வைத்து இருப்பார்கள். அந்த வகையில் இந்த படத்தின் இயக்குநர் ஹாரூனும் ஒருவர்” என்றார்

பாடலாசிரியர் அருண்பாரதி பேசும்போது, “இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா தான் பாடல் எழுத என்னை அழைத்தார். இந்த படத்தில் நட்டியின் ஃப்ளாஷ்பேக்கில் அண்ணன் தங்கச்சிக்காக ஒரு பாடலை எழுதியுள்ளேன். இந்த படத்தை நான் பார்த்து விட்டேன். கிளைமாக்ஸ் உங்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக இருக்கும். இந்த படத்தில் வேறொரு விதமான திரைக்கதையை கையாண்டுள்ளார் இயக்குநர் ஹாரூண்” என்றார்.

பாடலாசிரிசிரியர் ஜெகன் கவிராஜ் பேசும்போது, “அதிர்ஷ்டம் என்றாலே அது இஷ்டத்துக்கு வரும் என்பார்கள், அப்படி வந்த வாய்ப்புதான் இது. இளையராஜாவின் முதல் ராஜாவான கார்த்திக் ராஜாவுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் ராஜ வம்சத்தில் நானும் இணைந்துள்ளேன் என பெருமைப்படுகிறேன். பாடல் எழுதத் தெரிந்த இயக்குநருடன் பணிபுரிந்ததில் சந்தோஷம்” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் முனிவேலன் பேசும்போது, “சமூகத்திற்கு ஒரு நல்ல ஒரு மெசேஜ் சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது. இந்த இடத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் சில வேண்டுகோள்களை வைக்கிறேன். படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் கட்டாயம் படத்தின் புரமோசனுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அப்படி தராத நடிகர்கள் மீது தடை விதிக்க வேண்டும். ஓடிடி வியாபாரத்தை ஒழுங்குபடுத்தி தரவேண்டும்” என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “நடிகர் நட்டி தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது. கார்த்திக் ராஜா ஜீனியஸ் இசையமைப்பாளர்களில் ஒருவர். அவர் சிறுவயதாக இருந்தபோதே நான் அவரிடம் சின்னக்கவுண்டர் படத்தின் கதையை சொல்லியிருக்கிறேன். நான் இயக்கிய உறுதிமொழி படத்திற்கு டிரெய்லரை உருவாக்கும்போது அப்போது கார்த்திக் ராஜாவும் திலீப் என்கிற பெயரில் இருந்த ஏ.ஆர் ரகுமானும் தான் அதை செய்து கொடுத்தனர். அதன்பிறகு பொன்னுமணி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கார்த்திக் ராஜா இசையமைத்து கொடுத்தார்” என்றார்.

நடிகை சாஷ்வி பாலா, நடிகை ரேகா நாயர், நடிகர் முரளி ராதாகிருஷ்ணன், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் சுப்பிரமணிய சிவா, தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here