ரக்ஷன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘மறக்குமா நெஞ்சம்.’ இந்த படத்தில் மலினா, தீனா மற்றும் பிராங்ஸ்டர் ராகுல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பள்ளிப்பருவ நினைவுகளைத் தூண்டுகிற மனதை வருடும் கதைக்களத்தை உருவாக்கி இரா. கோ. யோகேந்திரன் இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் வித்தியாசமான முறையில் நடைபெற்றுள்ளது. விழாவில் படத்தின் நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் படித்த சகமாணவர்கள் கலந்து கொண்டனர். படத்தில் பணியாற்றியவர்களின் நண்பர்கள் விழா மேடையேறி பாடல்களை வெளியிட்டனர்.
முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நன்றிக் கடன் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. விருதில் ‘விதைத்துக் கொண்டே இருங்கள், முளைத்துக் கொண்டே இருக்கிறோம். நன்றி’ என்று எழுதப்பட்டு இருந்தது.
விருதை பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள், மேடையிலேயே கண்கலங்கி, ஆனந்த கண்ணீர் சிந்தி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த சம்பவம் விழாவில் கலந்து கொண்டவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
விழா, கலந்து கொண்ட அனைவரின் பள்ளி கால நினைவுகளால் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சியில் பேசிய ஆசிரியர்கள், தங்களது மாணவர்கள் பள்ளி நாட்களில் செய்த குறும்பு செயல்களை பகிர்ந்து, பள்ளி காலத்தில் கண்டிப்புடன் நடந்து கொண்ட பிறகும், நீண்ட காலம் கழித்து தங்களை அழைத்து விருது வழங்கி சிறப்பித்தது பற்றி தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், தமிழ் சினிமா நிகழ்வுகளில் இதுபோன்ற நிகழ்ச்சியை இதுவரை கண்டதில்லை’ என்று குறிப்பிட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த படக்குழுவுக்கு நன்றி தெரிவித்தனர்.