‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதியின் 50-வது படமாக உருவாகிறது ‘மகாராஜா.’ இந்த படத்தை ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் இயக்குகிறார். இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், நடிகர் நட்டி நட்ராஜ், நடிகைகள் மம்தா மோகன்தாஸ், அபிராமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘காந்தாரா’ படத்தின் இசையமைப்பாளர் அஜ்னிஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் நிதிலன் பேசியபோது, “இந்த கதை மீது நம்பிக்கை வைத்து கடுமையாக உழைக்கும் என்னுடைய அணிக்கு நன்றி. படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட அனைவருக்கும் நன்றி. விஜய் சேதுபதி அண்ணன் சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி அவர் ஒரு சிறந்த மனிதர். அவரது ஐம்பதாவது படத்தை இயக்க எனக்கு வாய்ப்பு கொடுத்தது பெரிய விஷயம். நிச்சயம் தயாரிப்பாளர்களுக்கு மூன்று மடங்கு லாபம் தரக்கூடிய படமாக இதை உருவாக்குவேன்” என்றார்.
நடிகர் விஜய்சேதுபதி பேசியபோது, “என்னை திட்டியும் வாழ்த்தியும் இந்த உயரத்திற்கு கொண்டு வந்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொறுமையும் அனுபவமும் ஒரு மனிதனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். அத்தகைய அற்புதமான அனுபவத்தை கொடுத்த என் இயக்குநர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி.
இந்த படம் உங்களுக்கு பிடித்தது போல வந்திருக்கிறது. ஐம்பதாவது படம் என்பது நிச்சயம் என் சினிமா பயணத்தில் ஒரு மைல்கல். அது ஞானத்தையும் அனுபவத்தையும் கொடுத்திருக்கிறது. என் சினிமா வாழ்க்கையின் மிக முக்கிய புள்ளியை அருள் தாஸ் அண்ணன் வைத்துள்ளார். அவரைப் பார்த்ததும் பழைய நினைவுகள் மீண்டும் வந்துள்ளது. நட்டி சாரை பார்க்கும் பொழுது ரஜினி சாரின் அதே வேகம் ஈர்ப்பு அவரிடம் இருந்தது. பிலோமின், தினேஷ், அபிராமி, மம்தா என அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர். நிதிலன் தயாரிப்பாளர்களின் பணத்தை எடுத்து தருவேன் என்று சொன்னது திமிர் கிடையாது, அவர் படத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை. அந்த அளவுக்கு சிறப்பாக படம் வந்திருக்கிறது.
அனுராக் சாரின் தயாரிப்பில் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போனது. ஆனால் இந்த படத்திற்காக அவர் செய்த வேலை மிக பெரியது. நானும் அவரும் இணைந்து இன்னும் நிறைய படங்கள் பணிபுரிய வேண்டும் என்பது என் விருப்பம்” என்றார்.
நடிகை மம்தா மோகன்தாஸ் பேசியபோது, “நான் தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்திருக்கிறேன். இப்போது ஸ்பெஷலான ஒரு படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி! கதை நன்றாக இருந்தால் எந்த மொழி, எந்த ஹீரோ என்று பார்க்காமல் அந்த படத்தை நான் பார்த்து விடுவேன். இப்படி விஜய் சேதுபதி சாரின் படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். அவருடைய கண்களில் ஒரு மேஜிக் உள்ளது.
இது ஒரு ரிவென்ச் ஸ்டோரி தான். அனுராக் மற்றும் விஜய் சேதுபதி சாருக்கு இடையே கதை நடக்கும். படத்தை நான் இன்னும் முழுதாக பார்க்கவில்லை. ஆனால், பார்த்தவர்கள் அருமையான விமர்சனம் கொடுத்திருக்கிறார்கள். கண்டிப்பாக ‘மகாராஜா’ தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு படமாக அமையும்” என்றார்.
நடிகர் நட்டி பேசியபோது, “இந்த படத்தின் திரைக்கதை இனி வரும் படங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். விஜய் சேதுபதியுடன் எனக்கு இது முதல் படம். நிதிலன் இன்னும் சில வருடங்களில் பான் இந்தியா படம் இயக்கும் அளவிற்கு பெரிய ஆளாக வருவார்” என்றார்.
நடிகை அபிராமி பேசியபோது, “இந்த படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி. விஜய் சேதுபதியுடன் எனக்கு இது முதல் படம். தமிழ் சினிமாவில் மிக தீவிரமான கண்கள் என்றால் முதலில் கமல் சாருடையதை சொல்வேன். அதற்கு அடுத்து விஜய் சேதுபதியுடையது தான். இந்த படம் ஒரு ரிவென்ச் கதை என்று தெரியும். மற்றபடி முழு கதையும் எனக்கு தெரியாது. என்னுடைய காட்சிகள் மட்டுமே தெரியும். உங்களை போலவே இந்த படத்தின் மீது மிகத் தீவிரமான நம்பிக்கை கொண்டு படம் பார்க்க ஆவலாக உள்ளேன்” என்றார்.
நிகழ்வில் இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத் பேசியபோது, “விஜய் சேதுபதி சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரின் ஐம்பதாவது படத்திற்கு நான் இசையமைக்கிறேன் என்பதே எனக்கு பெருமையாக உள்ளது. ‘குரங்கு பொம்மை’ படத்திலேயே நிதிலன் அட்டகாசம் செய்திருப்பார். இந்த படமும் சிறப்பாக வந்திருக்கிறது. இரண்டு மெலோடி பாடல்கள் படத்தில் உண்டு” என்றார்.
நிகழ்வில் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன், எடிட்டர் ஃபிலோமின் ராஜ், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர். பிரபு, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித், ஸ்டோன் பெஞ்ச் கார்த்திகேயன் சந்தானம் உள்ளிட்டோரும் படம் வெற்றிபெற வாழ்த்திப் பேசினார்கள்.