இயற்கை அன்னையின் அழகைப் போற்றும் ‘மன்னிப்பு’ ஆல்பம் பாடல்… தனது கனவு நிறைவேறியதாக சுயாதீன இசைக் கலைஞர் ரனினா ரெட்டி பெருமிதம்!

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகும் பல சார்ட்பஸ்டர் பாடல்களுக்குப் பின்னால் உள்ள வசீகரக் குரலுக்கு சொந்தக்காரர் ரனினா ரெட்டி. சுயாதீன இசைக் கலைஞராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவரது நீண்ட காலக் கனவு, ‘மன்னிப்பு’ என்ற அழகிய சுயாதீன ஆல்பம் பாடலை உருவாக்கியதன் மூலம் நிறைவேறியுள்ளது.

ரனினா ரெட்டி மற்றும் குழந்தைக் கலைஞர் ஷிவானி ஹரிகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் பாடலை திம்மப்பா கொல்லர் இயக்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இயற்கை அன்னையின் அழகைப் போற்றும் விதத்தில் உருவாகியிருக்கும் இந்த பாடல் குறித்து ரனினாவிடம் கேட்டோம்…

“எனது 16-வது வயதில் இசையமைத்த இந்த பாடல் எனது ஆத்மாவின் ஆழத்தில் இருந்து உருவானது. பெல்காமில் வேறு பாடலுக்கு இசையமைக்கும் போது இந்த அற்புதம் நடந்தது. அந்தி நேரத்தில் நிலவொளியை ரசித்துக்கொண்டிருந்தேன். நான் நிலாவை பார்த்து எனது நன்றியுணர்வை வெளிப்படுத்தினேன், கடவுளுக்கு எனது நன்றி உணர்வை வெளிப்படுத்தினேன். ஒளி போன்ற அத்தியாவசியமான ஒன்றை இயற்கை நமக்கு எவ்வாறு ஆசீர்வதித்துள்ளது என்பதை நான் உணர்ந்தேன். நாம் நமது ஆசீர்வாதங்களை எண்ணி இன்புறுவதை விட எப்போதும் புகார் செய்து கொண்டிருக்கிறோம்.

பிரபஞ்சம், கிரகம் மற்றும் அண்டவெளி பற்றி எனக்குள் ஏதோ உத்வேகம் உருவாகி, இந்தப் பாடலை இயற்றினேன். ‘இயற்கை’யை மனித இயல்பின் சாரத்துடன் கலந்து ஒரு பாடலை உருவாக்க விரும்பினேன். ஆனால் அந்தக் கால கட்டத்தில் அப்படிப்பட்ட பாடல்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை. அந்தக் காலங்களில், பெப்பி மற்றும் வணிகப் பாடல்கள் விற்பனைக்குக் காரணமான முக்கிய காரணிகளாக இருந்ததால், இத்தகைய பாடல்களுக்கான பாராட்டுக்கள் குறைவாகவே இருந்தன. இப்போது ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நான் ஒரு சுயாதீன கலைஞராக இருக்க விரும்பினேன், கடவுளின் கிருபை, மெல்போர்ன்-ஆஸ்திரேலியாவை தளமாக கொண்ட கே.கே. ரெகார்ட்ஸ் ராஜா மற்றும் கிஷோர் உடன் இணைந்து, இந்த ஆல்பம் மூலமாக எனது நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தொழில்துறையில் உள்ள பிரபலங்களின் ஈடுபாட்டாலும் ஆர்வத்தாலும் இந்த பாடலைப் படமாக்க முடிந்தது. மனித மனதை குணப்படுத்தும் கூறுகள் கொண்ட எனது இசையைக் கேட்ட பிறகு, என்னிடம் வேறு ஏதேனும் பாடல்கள் உள்ளதா என்று கேட்டார்கள். அந்த நேரத்தில், நான் வேறு பாடலின் இசையமைப்பில் வேலை செய்து கொண்டிருந்தேன், அவர்களுக்கு எனது பாடல் பிடித்திருந்தது. இந்தப் பாடலை, தமிழில் மட்டும் வெளியிட்டு குறுக்காமல், இந்தியா முழுவதும் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தோம். எனவே, தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகள் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்தப் பாடலைப் பற்றிய எனது எண்ணத்தை தெரிவிக்க, மதன் கார்க்கியை அணுகினேன். அவர் மிகவும் இனிமையாகவும், எனக்கு பெரும் ஆதரவாகவும் இருந்தார், ஒரு வார கால இடைவெளியில் ஆத்மார்த்தமான பாடல் வரிகளைக் கொடுத்தார். அவருடைய பாடல் வரிகளைப் படிக்கும் போது என் கண்கள் ஈரமாகி கன்னங்களில் கண்ணீர் வழிந்தது. இயற்கை அன்னையைப் பற்றி அவருடைய உணர்ச்சிகளைக் கொட்டச் சொன்னேன். என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தினார். தெலுங்கு பதிப்பை ராகேந்து மௌலி-ராம்பாபு கோசாலா எழுதியுள்ளனர், இந்தி பாடல் வரிகளை சமீர் சதிஜா மற்றும் ரித்விகா எழுதியுள்ளனர். KK Records (ஆஸ்திரேலியா) நிறுவனம் இந்த பாடலை தயாரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here