நகைச்சுவை நடிகர் செந்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அறிமுக நடிகர் சுந்தர் மகாஸ்ரீ கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா.’
அறிமுக இயக்குநர் ராஜ் கண்ணாயிரம் இயக்கியுள்ள இந்த படத்தில் அபிநயாஸ்ரீ, சந்தியா பாலசுப்பிரமணியன், நதியா வெங்கட், பிரபு, சன்னி பாபு, மின்னல் ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடந்தது. முன்னாள் மத்திய இணை அமைச்சர் சு திருநாவுக்கரசர், அண்ணா நகர் எம் எல் ஏ எம்.கே. மோகன், திரைப்பட தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், ‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் பாபு, ‘லொள்ளு சபா’ ஜீவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் படத்தின் நாயகன் சுந்தர் மகாஸ்ரீ, ” ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ படம் காமெடி படம் மட்டுமல்ல நல்லதொரு கருத்தும் இருக்கிறது. நான் பார்த்து உணர்ந்த வகையில் எங்கும் சாலை வசதி சரியாக இல்லை. குண்டும் குழியுமாகத்தான் இருக்கிறது. ஒரு எம்எல்ஏவாக இருப்பவரை உச்ச கட்ட காட்சியில் சாலையில் நடக்க வைத்து சாலைகள் உள்ள குண்டும் குழிகளால் உண்டாகும் தர்ம சங்கடங்களை அவருக்கு உணர்த்தும் படம் தான் இது. அவரை சாலையில் நடக்க வைத்து.. நடக்கும் போது ஏற்படும் அசௌகரியங்களை காட்சிப்படுத்துவது தான் இப்படத்தின் நோக்கம். அதன் பிறகு மக்களுக்கு சாலை வசதி முக்கியம் என்பதை எப்படி ஒரு எம்எல்ஏ உணர்கிறார் என்பது தான் கதை.
இதற்கு காமெடியாகவும், பொழுது போக்காகவும் தான் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும் மக்கள் வீட்டிற்கு பயணிக்கும் போது சாலைகளை ஒரு முறை பார்ப்பார்கள் என்பது உறுதி. அதுவே இந்த படத்திற்கு கிடைக்கும் வெற்றி” என்றார்.
படத்தின் இயக்குநர் ராஜ் கண்ணாயிரம் பேசியபோது, ” இந்த படத்தின் தயாரிப்பாளர்களும், ,நாயகனும், நண்பனுமான சுந்தர் மகாஸ்ரீ எனக்கு அழைப்பு விடுத்து இந்த படத்தை இயக்கி தாருங்கள் என கேட்டார். சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் யூட்யூபர் ஒருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்படுகிறது. அதன் பின் சட்டமன்ற உறுப்பினரின் கோபத்திற்கு யூட்யூபர் ஆளாகிறார். 24 மணி நேரத்திற்குள் அந்த யூட்யூபர் தப்பினாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தில் செந்தில் மட்டும் தான் அனைவருக்கும் தெரிந்த நட்சத்திர நடிகர். அவர் எம்எல்ஏவாக நடிக்கிறார். அவர்தான் கதையின் நாயகன். மற்ற அனைவரும் புதுமுகங்கள் தான். இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. இப்போது இந்தப் படத்தின் முன்னோட்டத்தையும் பாடல்களையும் பார்த்திருப்பீர்கள். விரைவில் இந்த ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ திரையரங்கில் வெளியாகும். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
சு. திருநாவுக்கரசர் பேசியபோது, இரண்டரை மணி நேர சினிமாவில் இரண்டரை நிமிசமாவது ஒரு மெசேஜ் இருக்க வேண்டும். மக்களை நல்வழிப்படுத்தும் வகையில் காட்சியாகவோ.. பாடல்களிலோ.. ஏதேனும் ஒரு மெசேஜ் இருக்க வேண்டும். அந்தப் படம் தான் எப்போது வெற்றி பெறும்.
மக்கள் சந்தோஷத்தை மட்டும் ரசிப்பதில்லை. சோகத்தையும் ரசிக்கிறார்கள். அதனால் மக்கள் எல்லா படத்தையும் பார்ப்பார்கள். ஒரு கதை எப்படி ரசிகர்களுக்கு கொடுக்கப்படுகிறது என்பது தான் முக்கியம். இந்தப் படம் ரசிகர்களுக்கு நல்லதொரு கதையை நகைச்சுவையாக சொல்லி இருக்கும் என நம்புகிறேன்.
படத்தின் டைட்டில் கேட்சிங்காக இருக்கிறது. ஒரு படத்தில் விஜய் பாடிய பாடலை தலைப்பாக வைத்திருக்கிறார்கள். அதனால் இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் உறுதியாக நம்புகிறேன். வெற்றி பெற வேண்டுமென மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்” என்றார்.
நிகழ்வில் தயாரிப்பாளர் லட்சுமணன், தயாரிப்பாளர் யாஸ்மின் பேகம், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயன், நடிகை அபிநயாஸ்ரீ, நடிகை சந்தியா பாலசுப்பிரமணியன், இசையமைப்பாளர் ஜோசப் சந்திரசேகர் உள்ளிட்டோரும் பேசினார்கள்.
நிகழ்வின் நிறைவாக, சுந்தர் மகா ஸ்ரீ ஹீரோவாக நடித்துள்ள மற்றொரு படமான ‘சூட்சகன்’ படத்தின் போஸ்டரும் வெளியிடப்பட்டது.