தூய தமிழில் தலைப்பு; அறிவிப்புகளில் அழகுத் தமிழ்! -மெய்யழகன் படக்குழுவுக்கு செந்தமிழன் சீமான் பாராட்டு

 

அன்புத்தம்பி சூர்யா – ஜோதிகா இணையரின் தயாரிப்பில், அன்புச்சகோதரர் ச.பிரேம்குமார் எழுதி, இயக்கி, அன்பு இளவல் கார்த்தி மற்றும் அன்புச்சகோதரர் அரவிந்த் சுவாமி அவர்கள் முதன்மை வேடமேற்று நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் மெய்யழகன் திரைப்படத்தின் அறிவிப்பு வடிவமைப்பினைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

‘மெய்யழகன்’ என்று திரைப்படத்திற்குத் தூய தமிழ்ப்பெயர் சூட்டியதற்கும், அனைவரும் ஆங்கிலத்தில் டீசர் (Teaser) என்று கூறிக்கொண்டிருக்க அதனை ‘கிளர்வோட்டம்’ என்று அழகுத்தமிழில் மொழியாக்கம் செய்தமைக்கும் படக்குழுவினருக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், பாராட்டுகளும்!

படம் உருவாக்கத்தில் பங்கு கொண்ட துறைகள் பலவற்றை ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடும் வழக்கத்தை மாற்றி வண்ணக்கலவை, ஒளிக்கலவை, கள ஒளிப்பதிவு, நிழற்படம், ஆடை வடிவமைப்பு, விளம்பர வடிவமைப்பு என அனைத்தையும் அழகுத்தமிழில் குறிப்பிட்டிருப்பது மிகச்சிறப்பு.

‘கிளர்வோட்டம்’ என்ற சொல்லாக்கம் எந்த அளவிற்கு மிகச்சரியாக அமைந்துள்ளது என்பதை எண்ணி எண்ணி வியக்கின்றேன்.

தமிழில் மட்டும்தான் இப்படியான பொருள்பொதிந்த கலைச்சொற்களை உருவாக்க முடியும். மற்றமொழிகளில் இப்படியான கலைச்சொற்களை எளிதில் உருவாக்கிவிட முடியாது. பிறமொழி சொற்களை நீக்கினால் பல மொழிகள் இயங்காது. ஆனால், பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் இனிதின் இயங்கவல்லதனால் தான் தமிழ் உயர்தனிச் செம்மொழியாகப் போற்றப்படுகிறது.

இதற்காகவாவது இத்திரைப்படம் மாபெரும் வெற்றிபெற வேண்டுமென நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகின்றேன்!

-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here