அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில், முதல் முறையாக நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்க, 1980 களின் கிராமப்புற பின்னணியில், கலக்கலான காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ராபின்ஹூட்.’
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் எச் வினோத் இப்பட டிரெய்லரை வெளியிட்டு, படக்குழுவை பாராட்டியுள்ளார்.
படத்தின் டிரெய்லரைப் பார்த்த இயக்குநர் H.வினோத் , படத்தின் பின்னணி, விஷுவல்கள் பிரம்மாதமாக உள்ளது. காமெடி அருமையாக உள்ளது. இசை படத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளது. டிரெய்லர் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
1980 களில், கிராமத்தில் ஒரு லாட்டரி சீட்டில் பெரிய பரிசு விழ, அந்த பரிசுக்காக இருவருக்கு இடையே நிகழும் போட்டியும், பிரச்சனைகளும் தான் இப்படத்தின் மையம்.
நாம் மறந்து போன லாட்டரி சீட்டு காலத்தை, கிராமப்புற பின்னணியில் மீட்டெடுத்து , கலகலப்பான திரைக்கதையுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன்.
இன்று வெளியாகியிருக்கும் டிரெய்லர், 1980 களின் காலகட்டத்தை திரையில் பார்க்கும் குதூகலத்தை தருவதோடு, வயிறு வலிக்க சிரிக்க வைக்கும், ஒரு கலக்கலான எண்டர்டெயினராக இப்படம் இருக்கும் என்பதை, உறுதி செய்கிறது.
இப்படத்தில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் முதன்முறையாக நாயகனாக களமிறங்கியுள்ளார். எதிர் பாத்திரத்தில் மறைந்த ஆர் என் ஆர் மனோகர் நடித்துள்ளார். இவர்களுடன் கே பி ஒய் சதீஷ், அம்மு அபிராமி, சங்கிலி முருகன், முல்லை மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு அருப்புகோட்டை, காரியாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும்.

