சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமான்ஸ் படைப்பாக உருவாகியுள்ள மிஸ் யூ’ திரைப்படம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீட்டில் தமிழகமெங்கும் நவம்பர் 29 ஆம் தேதி திரைக்கு வருகிறது. உலகமெங்கும் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது.
ஒரு இளைஞன் தனக்கு ஒத்துவராத, பிடிக்காத ஒரு பெண்ணை, தீவிரமாகக் காதலிக்கிறான். ஏன்?, எப்படி? எதற்கு? தனக்குப் பிடிக்கவில்லை எனும் போது, நாயகன் ஏன் காதலிக்கிறான் எனும் கேள்விக்குப் பின்னால் உள்ள சுவாரஸ்யம்தான் கதைக்களம்.
இன்றைய தலைமுறை இளைஞர்களின் காதலை அழகான திரைக்கதையில் கோர்த்து, அனைவரும் ரசித்து மகிழும் வகையில், அழகான ரொமான்ஸ் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார், ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை இயக்கிய என்.ராஜசேகர்.
‘சித்தா’வின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இளமை துள்ளலுடன் இப்படத்தில் களமிறங்குகிறார் சித்தார்த். தெலுங்கு, கன்னடத்தில் புகழ்பெற்ற ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா என பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
படத்திலிருந்து ‘நீ என்ன பார்த்தியா’மற்றும் ‘சொன்னாரு நைனா’ பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது, ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.