இந்த படத்தை டைட்டானிக், அவதார் போல் எடுக்கவில்லை! -‘சூது கவ்வும் 2’ படத்தின் பிரஸ் மீட்டில் ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ மிர்ச்சி சிவா பேச்சு

‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘சூது கவ்வும் 2.’

மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன்,  ராதா ரவி, எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ், ரமேஷ் திலக், யோக் ஜேபி, ஹரிஷா ஜஸ்டின், கராத்தே கார்த்தி, கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் – ஹரி‌ ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

சி. வி. குமார், எஸ். தங்கராஜ் ஆகியோரின் தயாரிப்பில், எஸ். ஜே. அர்ஜுன் இயக்கியுள்ள இந்த படம் டிசம்பர் 13-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

முன்னதாக படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் பேசுகையில், ”முண்டாசுப்பட்டி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். அந்தப் படத்திற்கு சி வி குமார் சார்தான் தயாரிப்பாளர். அதன் பிறகு ராட்சசன் படத்தின் திரைக்கதை எழுதினேன். மார்க் ஆண்டனி படத்திற்கு திரைக்கதையில் உதவி செய்தேன். 13 ஆண்டு காலம் நிறைவடைந்து விட்டது. அதன் பிறகு மீண்டும் சி வி குமார் சார் அழைப்பு விடுத்தார். சூது கவ்வும் 2 படத்தின் கதையை எழுதுங்கள் என கேட்டுக் கொண்டார். நானும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். இதை என் நண்பர்களிடம் சொன்னபோது அனைவரும் என்னை பயமுறுத்தினார்கள்.  ஆனால் நான் பயப்படவில்லை ஏனென்றால் அப்போது எனக்கு எந்த வேலையும் இல்லை. சும்மா இருப்பதை விட இந்த வேலையை செய்யலாம் என்று நினைத்துக் கொண்டேன்.  இந்தப் படத்தில் ‘வாய்ப்புல இருக்கிற பிரச்சினைய பார்க்காதே…அந்த பிரச்சனைக்குள்ள இருக்கிற வாய்ப்ப பாரு..’ என  டயலாக் வரும். அதனால் கதை எழுத தொடங்கினோம். சி வி குமாரின் தயாரிப்பு நிறுவனம் என்பது கடினமானது தான்.

பொதுவாக இரண்டு விதமான பெற்றோர்கள் உண்டு. தன்னுடைய பிள்ளை எந்த கஷ்டமும் படக்கூடாது என்பதற்காக எல்லா வசதிகளையும் செய்து தருவார்கள். அதனால் அந்த பிள்ளை என்ன கேட்டாலும் அதை வாங்கி கொடுத்து வளர்ப்பார்கள். இது ஒரு வகை. மற்றொரு வகையான பெற்றோர்களும் உண்டு அதாவது தான் படும் கஷ்டத்தை மகனுக்கு உணர்த்த வேண்டும் என்று விரும்புவார்கள். அதனால் அவர்கள் படும் கஷ்டத்தை பையனுக்கு தெரியப்படுத்துவார்கள். பையனும் தந்தையின் கஷ்டத்தை உணர்ந்து வளர்வான். இது போன்றது தான் சி.வி குமாரின் தயாரிப்பு நிறுவனம். ஆனால் சிவி குமாரின் தயாரிப்பு நிறுவனம் மூலம் உருவானவர்கள் தயாரிப்பாளர்களின் வலியினை புரிந்து கொண்டவர்கள். சினிமாவின் யதார்த்தத்தை இங்குதான் உணர முடியும். கார்த்திக் சுப்பராஜ் போன்றவர்கள் இங்கிருந்து சென்று இன்று வெற்றிகரமான இயக்குநர்களாகவும், தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள் என்றால் இங்கு அவர்களுக்கு சி.வி குமார் கொடுத்த பயிற்சிதான் காரணம்.

சூது கவ்வும் 2 படத்தின் கதையை எழுதி முடித்த பிறகு இந்த கதைக்கு யார் பொருத்தமான ஹீரோவாக இருப்பார் என்று கேள்வி எழுந்தது. எந்த அளவுக்கு நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் அதனை எளிதாக கையாளக்கூடிய கதாபாத்திரம் அது. அதற்கு மிர்ச்சி சிவா தான் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்தோம். அவர் படப்பிடிப்பு தளத்திலும் ஜாலியாகவே இருப்பார். இந்தப் படத்தில் குருநாத் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். இதனை திரையரங்குகளில் காணும் ரசிகர்கள் நிச்சயமாக ரசிப்பார்கள்.

எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ், வாகை சந்திரசேகர், கருணாகரன் என ஒவ்வொருவரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

சூது கவ்வும் பாடத்தின் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே கதாபாத்திரம் டாக்டர் கதாபாத்திரம் தான். அதில் அருள்தாஸ் அற்புதமாக நடித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் நிச்சயமாக கவரும்” என்றார்.

நடிகர் மிர்ச்சி சிவா பேசுகையில், ”எங்கே இருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. பாய்ஸ் ஹாஸ்டலில் இருப்பது போல் இருக்கிறது. அதற்காக படத்தில் ஹீரோயின் இல்லை என்று நினைக்காதீர்கள். ஹீரோயின் கதாபாத்திரம் கற்பனையான கதாபாத்திரம். அதனால் இங்கும் ஹீரோயின் இருக்கிறார்கள் ஆனால் எங்கே என்று தான் தெரியவில்லை.

சி வி குமார் சாரை அலுவலகத்தில் சந்தித்தபோது ‘சூது கவ்வும் 2’ படத்தை உருவாக்கவிருக்கிறோம் என்றார். அதை சொன்னவுடன் எனக்குள் சூது கவ்வும் நல்ல படமாச்சே, அதை ஏன் இரண்டாம் பாகம் எடுக்கிறார்கள் என்று தோன்றியது. அதாவது அந்த நல்ல படத்தை ஏன் மீண்டும் எடுக்கிறார்கள் என்பது தான் என்னுடைய கேள்வியாக இருந்தது. அதில் நான் நடிக்கிறேன் என்றாலும்… அப்போது இயக்குநர் அர்ஜுன் இந்த திரைப்படம் சூது கவ்வும் திரைப்படத்தின் ப்ரீகுவலாக உருவாகிறது. அதன் பிறகு தற்போதைய படத்துடன் தொடர்பு ஏற்படும் என்றார். அத்துடன் அதற்காக அவர் சொன்ன திரைக்கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  அந்த கதைக்குள் நான் வருவது, கருணாகரனை சந்திப்பது, என பல சுவாரசியமான திருப்பங்கள் இருந்தன. அதன் பிறகு இப்படத்தின் பணிகளை தொடங்கினோம்.

தயாரிப்பாளர் சி வி குமார் தமிழ் திரை உலகிற்கு ஏராளமான புதிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார். பா. ரஞ்சித் – நலன் குமாரசாமி – கார்த்திக் சுப்பராஜ்-  போன்றவர்களை அறிமுகப்படுத்தியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நிதி சிக்கல் குறித்து தயாரிப்பாளர் பல மேடைகளில் கண் கலங்கி பேசி இருப்பதை பார்த்திருக்கிறேன். சினிமாவை நேசிப்பவர்களை சினிமா கைவிடாது என்பார்கள். சினிமாவை அவர் அளவு கடந்து நேசிப்பதால் தான் நான் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். நாம் இதுவரை என்டர் தி டிராகன் படத்தை பார்த்திருக்கிறோம். அவர் இப்போது ரிட்டன் தி டிராகன் ஆக வருகை தந்திருக்கிறார்.

‘சூது கவ்வும் – தர்மம் வெல்லும்’ என்று அடுத்த படத்தை தயாரிக்க உள்ளதாக சொன்னார். ஆனால் அந்த படத்தில் நான் இருக்கிறேனா? இல்லையா? என்று சொல்லவில்லை. இருந்தாலும் அந்தப் படமும் வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கிறேன்.

இந்த படத்திற்கு மற்றொரு தயாரிப்பாளர் தங்கராஜ். அவர் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார். அதனால் படப்பிடிப்பு நடைபெறும் போது வயிறார உணவளித்தார். அவர் பெயரைப் போலவே தங்கமான மனதுடையவர். இந்தப் படத்தைப் பற்றி எல்லோரிடமும் பாசிட்டிவாக பேசக்கூடியவர். அவருடைய ஒத்துழைப்பிற்கு நன்றி.

இந்தத் திரைப்படத்தில் நடித்த எம் எஸ் பாஸ்கர், கருணாகரன், வாகை சந்திரசேகர், அருள்தாஸ் என அனைவருடனும் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். அதிலும் குறிப்பாக வாகை சந்திரசேகர் உடன் இணைந்து நடிக்கிறேன் என்று என் அம்மாவிடம் சொன்னேன். அவர் ஆச்சரியப்பட்டு அவருடன் நடிக்கிறாயா? அவர் நல்ல தமிழ் பேசுவாரே..! என்றார். ‘ஒரு தலை ராகம்’ படத்திலிருந்து இன்று வரை அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமா மீது அவர் வைத்திருக்கும் அன்பும், நேசமும் இதன் மூலம் தெரிகிறது. அவரைப் பார்த்து நான் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அதனால் அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கருணாகரன் கொடுத்த பில்டப் சற்று அதிகம். என்னுடைய பேச்சை கேட்பதற்காக பாண்டிச்சேரியில் இருந்து வந்திருக்கிறேன் என்றார். அவர் பாண்டிச்சேரியில் எப்படி இருந்தார் என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் அவரும் ஒரு திறமையான நடிகர். அவருடைய முதல் படம் கலகலப்பு. அதில் நானும் அவருடன் இணைந்து நடித்தேன். படப்பிடிப்பு தளத்தில் சந்திக்கும் போது நாமெல்லாம் எப்போதும் பரபரப்பாக இருக்க வேண்டும் என சொல்வார்.  அந்தப் படப்பிடிப்பு தளத்தில் நான்- கருணாகரன் -யோகி பாபு ஆகிய மூவரும் ஒன்றாக தான் இருப்போம். இன்று யோகி பாபு நடித்த படத்தை அவரே திரையரங்கத்திற்கு சென்று பார்க்க முடியாத அளவிற்கு பிஸியாக இருக்கிறார். அதைவிட சந்தோஷம் கருணாகரன் நூறு  படங்களில் நடித்திருக்கிறார் என்று அவர் சொன்னது. அவர் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இந்தப் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் கார்த்திக் தில்லை படத்தொகுப்பாளர் என அனைவரும் திறமையான கலைஞர்கள்.

இந்த திரைப்படத்தின் திரைக்கதையை மூன்று வருடமாக எழுதினார்கள் என்றார்கள். அதெல்லாம் கிடையாது. டைட்டானிக், அவதார் போல் எடுக்கவில்லை. இரண்டு வருடம் கோவிட்.  அதனால் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை. இதுதான் உண்மை. மூன்று வருடம் திரைக்கதையை எழுதினால் அவதார், டைட்டானிக் போன்று படம் எடுக்க வேண்டும். அதுபோல் இல்லை இந்த திரைப்படம்.  ஆனால் இந்த படத்தின் கதை சுருக்கம் நலன் குமார்சாமியுடையது. அது அற்புதமாக இருந்தது. அவருடைய சூது கவ்வும் தர்மம் வெல்லும் படத்திற்காகவும் காத்திருக்கிறேன்.

இயக்குநர் அர்ஜுனும், நானும் நீண்ட நாள் நண்பர்கள் அவருடைய முதல் படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. ஆனால் பல காரணங்களால் அது நடைபெறவில்லை. தமிழ் திரை உலகத்திற்கு சில இயக்குநர்கள் தேவை என்று நாம் கருதுவோம். அந்த பட்டியலில்  அர்ஜுனுக்கு முக்கிய இடம் உண்டு.

குறைவான வசதிகளை அளித்துவிட்டு தரமான படைப்புகளை உருவாக்க வேண்டும் என்றால் அவரால் உருவாக்க முடியும். இந்த திரைப்படத்தையும் அவர் சிக்கனமாகவும் சிறப்பாகவும் உருவாக்கி இருக்கிறார். இதற்காகவே அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.

அர்ஜுன் பேசும்போது 15 சவரன் தங்க நகையை தொலைத்து விட்டதாக குறிப்பிட்டார். அது ஏன் இங்கு சொன்னார் என்றால்.. இந்த படம் வெற்றி பெற்றால்.. படத்தின் தயாரிப்பாளர் அந்த 15 சவரன் தங்க நகை பரிசாக வழங்க வேண்டும் என்பதற்காக சொன்னார்.  அதனால் இந்த படம் வெற்றி பெற்ற பிறகு அவருக்கு மறக்காமல் 15 சவரன் தங்க நகையை தயாரிப்பாளர்கள் பரிசாக வழங்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

சூது கவ்வும் முதல் பாகம் கல்ட் பிலிம்.. சூது கவ்வும் இரண்டாம் பாகம் ஃபன் பிலிம்.. இந்தத் திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ரசிக்கலாம்.  டிசம்பர் 13ம் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here