Home பொது ஆண்டுதோறும் குறைந்தது 100 சிறிய திரைப்படங்களுக்காவது அரசு மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசின்...

ஆண்டுதோறும் குறைந்தது 100 சிறிய திரைப்படங்களுக்காவது அரசு மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முயற்சி செய்வேன்! – ‘மௌன மொழிகள்’ பட விழாவில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் பேச்சு

பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ஷாகிர் மனோ கதாநாயகனாகவும், அர்ச்சனா கதாநாயகியாகவும் நடித்துள்ள திரைப்படம் ‘மௌன மொழிகள்.’

படத்தை காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு, இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசித்து மகிழும் கலகலப்பான கமர்ஷியல் பொழுதுபோக்குத் திரைப்படமாக இயக்கியுள்ளார் ஏ.சி. சௌந்தர்.

வரும் நவம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திரையுலக நட்சத்திரங்கள், சமூக ஆளுமைகள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள பிரமாண்டமாக நடைபெற்றது.

நிகழ்வில் இயக்குநர் ஏ.சி. சௌந்தர் பேசியதாவது, ”இவ்வளவு பெரிய ஆளுமைகள் முன்னிலையில் பேசுவதற்கு சற்று தயக்கமாக இருக்கிறது. இந்த மேடையில் நான் நிற்பதற்கு முக்கியக் காரணம் என்னுடைய தயாரிப்பாளர்தான். அவர் என்மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை உருவாக்க வாய்ப்பளித்தார். ஒரு மீடியம் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். அதற்கு ஊடக நண்பர்கள் வழங்கும் ஆதரவு மிகவும் முக்கியம்.

இந்த விழாவைச் சிறப்பாக நடத்த வேண்டும் என்பதற்காக மனோ சார், எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பெரிய ஆளுமைகளை அழைக்க விரும்பினோம். எங்களுக்காக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் விளம்பரப் பணிகளில் உதவிய கானா பாலா சாருக்கும், இசையமைப்பாளர் சிற்பி சாருக்கும், எங்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தும் ஆர்.கே. அன்புசெல்வன் சாருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், எங்களுக்காக நேரம் ஒதுக்கி ஆதரவு அளித்த முதல்வர் விஜய் அவர்களுக்கும் நன்றி. தயாரிப்பாளரும் அவரது மகன் ஸ்ரீமனும் இந்தப் படத்திற்காக மிகுந்த ஆதரவும் ஊக்கமும் அளித்தனர். நடிகர் அர்ஜுன் உள்ளிட்ட அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி.
இந்தப் படத்திற்காக அனைவரும் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறோம். மூன்று ஆண்டுகளாக இந்தப் படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, ஊடக நண்பர்களும் ரசிகர்களும் இந்தப் படத்திற்கு ஆதரவு அளித்து திரையரங்கில் பார்த்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அடுத்ததாக ‘இதயத்தில் காதல்’ என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறேன். இன்றைய விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்.”
எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் பேசியதாவது,
‘மௌன மொழிகள்’ என்ற அழகான தமிழ்த் தலைப்பைத் தேர்வு செய்த இயக்குநர் ஏ.சி. சௌந்தர் அவர்களை முதலில் பாராட்டுகிறேன். தமிழில் திரைப்படங்களுக்குப் பெயர் சூட்ட வேண்டும் என்று தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நாங்கள் வலியுறுத்திப் போராடியிருக்கிறோம். அந்த வகையில் ‘மௌன மொழிகள்’ என்பது கவித்துவமான தலைப்பு. பிரபல பாடகர் மனோ அவர்களின் மகன் ஷாகிர் மனோ, சிறு முதலீட்டில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பெரிய முதலீடுகளைக் கொண்ட திரைப்படங்களுடன் போட்டியிடுவது கடினமான சூழலில், பாலச்சந்திரன், ஸ்ரீமன், வேலுமணி போன்றவர்கள் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
இன்றைய திரைப்பட உலகம் வெறும் பொழுதுபோக்குத் துறையாக மட்டும் இல்லை. சமூக மாற்றத்திலும், அரசியல் களத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமை கொண்டது. குறிப்பாக, தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கும் அரசியலுக்கும் நீண்டகாலத் தொடர்பு இருந்து வருகிறது. ‘ரத்தக்கண்ணீர்’, ‘தண்ணீர் தண்ணீர்’ போன்ற திரைப்படங்கள் வணிகத்தைத் தாண்டி சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை. இன்றைய இளம் இயக்குநர்கள் முற்போக்குச் சிந்தனையுடன் திரைப்படங்களை உருவாக்கி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. சாதிப் பெருமிதம், பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கைகள் போன்றவற்றுக்கு இடமளிக்காமல், சமூக சமத்துவம், பெண்களின் ஆளுமை, ஜனநாயகச் சிந்தனை ஆகியவற்றை முன்னிறுத்தும் படைப்புகள் அதிகரிக்க வேண்டும்.
திரைப்படத்திற்கும் அரசியலுக்கும் தமிழ்நாட்டில் நீண்டகாலத் தொடர்பு இருந்து வருகிறது. திரைத்துறையின் தாக்கம் அரசியல் களத்திலும் பிரதிபலிக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் நடிகர் விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இதனை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வாகப் பார்க்க வேண்
காதல் என்பது மனித வாழ்வியலோடு இயல்பாக இணைந்திருக்கும் ஓர் உணர்வு. அதை நல்ல காதல், தவறான காதல் என்று வரையறுக்க முடியாது. சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய திரைப்படங்கள் வரை காதல் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் காதல் வெவ்வேறு கோணங்களில் பேசப்படும். அதேபோல், திரைப்படங்கள் வெறும் லாபத்தைக் கணக்கிடும் வணிகமாக இல்லாமல், சமூக முன்னேற்றத்திற்கும் மாற்றத்திற்கும் பங்களிக்கும் களமாக இருக்க வேண்டும். இளம் இயக்குநர்கள் இந்தப் புரிதலுடனும் உறுதிப்பாட்டுடனும் தங்களது படைப்புகளை உருவாக்க வேண்டும். அந்த வகையில் ‘மௌன மொழிகள்’ திரைப்படம் தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்று வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
மேலும், சிறு முதலீட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆர்.கே. அன்புசெல்வன் முன்வைத்துள்ளார். ஆண்டுதோறும் குறைந்தது 100 சிறிய திரைப்படங்களுக்காவது அரசு மானியம் வழங்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முயற்சி செய்வேன். சிறு முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதும், அவர்களை ஊக்கப்படுத்துவதும் எங்களைப் போன்றவர்களின் பொறுப்பு. புதிய இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தொடர்ந்து திரைப்படங்களை உருவாக்குவதற்கு உரிய ஆதரவு கிடைக்க வேண்டும். ‘மௌன மொழிகள்’ படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்.
இசையமைப்பாளர் சிற்பி, பாடகர் மனோ, பாடகர் கானா பாலா, தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஆர்.கே. அன்புசெல்வன், இசையமைப்பாளர் நள இளந்திரையன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்