திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மாயோன்’ திரைப்படத்தைப் பற்றி திரையுலக ஆர்வலர்கள், ரசிகர்கள் என பலரும் நேர்மறையான விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அதையடுத்து, பொது விடுமுறை தினமான ஞாயிறன்று சென்னையிலுள்ள ரோகிணி திரையரங்கத்திற்கு இப்படத்தைக் காண அதிகளவிலான ரசிகர்கள் திரண்டனர். அவர்களை, அங்கு அமைக்கப்பட்டிருந்த கிருஷ்ண பகவானின் பிரமாண்டமான கட் அவுட்டிற்கு அருகே சில கிருஷ்ணர் வேடம் அணிந்து நின்ற குழந்தைகள் உற்சாகமாக வரவேற்றனர்.
இது குறித்து, ரசிகர்களில் ஒருவர், “இன்று விடுமுறை தினம் என்பதால் சென்னையிலுள்ள ரோகிணி தியேட்டரில் ‘மாயோன்’ படத்தைக் கண்டு ரசிக்க குடும்பத்துடன் வந்தோம். இங்கு வந்தபிறகு இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கிருஷ்ண பகவானின் கட்அவுட்டிற்கு சிலர் பாலாபிசேகம் செய்ததைப் பார்த்தோம். சில குழந்தைகள் கிருஷ்ணன் வேடமணிந்து கையில் புல்லாங்குழலுடன் அழகாக வரவேற்பு அளித்தனர். மறுபுறம் அன்னதானமும் நடைபெற்றது- இதன் காரணத்தை அறிந்துக் கொள்வதற்காக அங்குள்ளவர்களுடன் பேசினோம். அப்போது தான் எங்களுக்கு அன்று கிருஷ்ண பகவான் அவதரித்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திர தினம் என்றும், அதிலும் இந்த ரோகிணி திரையரங்கத்தில் உள்ள கிருஷ்ண பகவானின் கட்அவுட்டிற்கு இது போன்று உற்சாகமான விழா நடைபெறுகிறது என்றும் அறிந்துகொண்டோம். எங்களுக்கு இது வித்தியாசமான அனுபவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது’’ என்றார்.
இன்னொரு ரசிகர், ” ‘மாயோன்’ படத்தினைப் பார்த்த ரசிர்களின் விமர்சனத்தால் ஈர்க்கப்பட்டு,அறிவியல், ஆன்மீகம், ஆலயம் என சுவராசியமான விசயங்களை மையமாகக் கொண்டு, பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தைக் காண வந்த எங்களுக்கு அந்த கிருஷ்ண பகவானே வரவேற்பு கொடுத்தது போலிருந்தது’’ என்றார்.
பொதுவாக ‘அம்மன்’ படங்களுக்குத்தான் படக்குழுவினர் பிரமாண்டமான அம்மனின் சிலைகளை வைத்து, ரசிகர்களை குறிப்பாக பெண் ரசிகைகளை கவர்வார்கள். ஆனால் கிருஷ்ண பகவானைப் பற்றிய படத்திற்கு சிறார்கள் கிருஷ்ண வேடமணிந்து வரவேற்பு அளித்ததுடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த கிருஷ்ணனின் கட்அவுட்டிற்கு பாலாபிசேகம் செய்யப்பட்டது பார்வையாளர்களை மட்டுமல்ல திரையுலகினரையும் ஆச்சரியப்படுத்தியது.