‘மாயோன்’ சினிமா விமர்சனம்

பக்திப்பட சாயலில் அமானுஷ்ய அறிவியல் விருந்து!

புதுக்கோட்டை மாவட்டம் மாயோன் மலையில் இருக்கிற, 5000 வருட பழமையான அந்த கிருஷ்ணர் கோயிலை தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி செய்கிறார்கள். குழுவின் அதிகாரிகளில் ஒருவரான ஹரிஸ் பேரடி அந்த கோயிலில் இருக்கும் புதையலை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிடுகிறார். குழுவிலுள்ள சிபி சத்யராஜ். தான்யா ரவிச்சந்திரன், பகவதி பெருமாள் மூவரும் அவருக்கு உதவ முன்வருகிறார்கள். அந்த குழுவின் உயரதிகாரி கே.எஸ். ரவிக்குமார் நேர்மையானவர்.

கோயிலை காலங்காலமாக நிர்வகிக்கிற குடும்பத்தின் வாரிசான ராதாரவி பொக்கிஷ அறையைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அவருக்கும், நேர்மையான உயரதிகாரிக்கும் தெரியாமல் இரவில் கோயிலுக்குள் நுழைந்து, ரகசிய அறையைத் திறந்து தொன்மையான பொருட்களை, புதையலைக் கைப்பற்ற நினைக்கிறது சிபி டீம்.

ஆனால், அது அத்தனை சுலபமில்லை. காரணம் மாலை ஆறு மணிக்கு மேல் அந்த கோயிலில் யார் இருந்தாலும் அவர்களுக்கு சித்தபிரமை பிடித்துவிடும். அப்படியொரு அமானுஷ்ய சக்தி அந்த கோயிலுக்கு இருக்கிறது. மட்டுமல்லாது அனகோண்டா மாதிரியான பாம்பொன்று கோயிலில் உலா வருவதாகவும் சொல்லப்பட, அதையெல்லாம் கடந்து அவர்கள் ரகசிய அறையைக் கண்டடைய முடிந்ததா, புதையலைக் களவாட முடிந்ததா என்பதே கதையோட்டத்தின் அடுத்தடுத்த அத்தியாயங்கள்…

அம்புலிமாமா கதை போலிருந்தாலும் திரைக்கதையில் விரிகிற சம்பவங்கள், அமானுஷ்ய மிரட்டல்கள் மாயோன் தந்திருக்கும் சற்றே புதிய அனுபவம்!

இயக்கம்: கிஷோர் திரைக்கதை: அருண்மொழி மாணிக்கம்

கதையில் ஹீரோயிஸம் காட்ட எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில் அலட்டலற்ற இயல்பான நடிப்பால் கவர்கிறார் சிபி சத்யராஜ்.

அப்படி வருவதும் இப்படி போவதுமாய் இருந்தாலும் தான்யா ரவிச்சந்திரனின் படபடக்கும் விழிகள் பரபரப்பு கூட்டுகிறது.

ஹீரோயினுக்கு மட்டுமல்ல; படத்தில் வருகிற அத்தனைப் பேருக்குமே பெரிதாய் மெனக்கெடாமல் இயல்பாக நடித்தால் போதும் என்கிற அளவிலான பாத்திரங்கள். அதை அவர்கள் உணர்ந்திருப்பது நடிப்புப் பங்களிப்பில் தெரிகிறது!

பின்னணி இசையால் அமானுஷ்யக் காட்சிகளை அதிர்வேட்டாக்கி, ‘மாயோனே மணிவண்ணா’ பாடலில் கிறங்கச் செய்கிறார் இளையராஜா!

இருள் காட்சிகளிலும் வெளிச்சம் பாய்ச்சுகிறது ராம் பிரசாத்தின் கேமரா!

பழங்காலக் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதரைப் போன்ற பிரமாண்ட சயனக்கோல கிருஷ்ணர் சிலை, சுவர்களில் சித்திரங்கள் என கலை இயக்குநரின் பங்களிப்பு நேர்த்தி!

ரகசிய அறைக்கான சாவியைத் தேடுதல், புதையல் வேட்டை, பாம்பு துரத்தல் என நீளும் காட்சிகளில் சிரத்தையாய் கை கோர்த்திருக்கிறது சீஜி தொழில்நுட்பம்!

கதையின் அஸ்திவாரமாய் கிருஷ்ணருக்கு காந்தர்வர்கள் வழங்கிய இசைப் பின்னணியை கோர்த்துவிட்டிருப்பது கச்சிதம்!

அடுத்த காட்சி இதுவாகத்தான் இருக்கும் என யூகிக்க முடிந்தாலும், ஹீரோவை வில்லன் போல் காட்டும்போதே கிளைமாக்ஸ் என்னவென்பது தெரிந்தாலும் அதையெல்லாம் தாண்டி குடும்பத்தோடு பார்க்க, குழந்தைகள் ரசிக்க மாயோனில் விஷயங்கள் இருக்கிறது; அவை வீரியமாகவும் இருக்கிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here