இராமாயணம், மகாபாரதம் என்ற இந்து மதத்தினர் போற்றுகிற இரண்டு இதிகாசங்களை நாடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என பல வருடங்களாக விதவிதமாக பார்த்து வருகிறோம். அடுத்தகட்டமாக அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, அந்த இதிகாசங்களை அனிமேஷன் வடிவில் பார்க்கிற வாய்ப்பை வழங்கியிருக்கிறது. அதன்படி அனிமேஷனில் உருவாகியிருக்கிறது இந்த ‘மகா அவதார் நரசிம்மா.’
உலகையே அடக்கியாள்கிற சக்தியை வரமாக பெற்ற அசுரன் இரண்யகசிபுவின் மகன் பிரகலாதன் தீவிர விஷ்ணு பக்தனாக உருவெடுக்கிறான். அதனால் ஆத்திரமடையும் இரண்யகசிபு மகனைக் கொல்ல ஆணையிடுகிறான். இந்த நிலையில் விஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்து பிரகலாதனைக் காப்பாற்றி இரண்யகசிபுவை அழிக்கிறார். இந்த கதைதான் மகா அவதார் நரசிம்மா’வாகியிருக்கிறது. நரசிம்ம அவதாரத்துடன் தொடர்புடைய வராக அவதாரத்தையும் தரிசிக்க முடிகிறது.
தெரிந்த கதைதான் என்றாலும் அனிமேஷனில் பார்க்கிற அனுபவம் உற்சாகம் தருகிறது. கதையின் பாத்திரங்களை அனிமேஷனில் வித்தியாசமான தோற்றங்களில் வடிவமைத்த குழுவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்; எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம்.
கதை ஆறிலிருந்து 100 வயது வரை யாருக்கும் புரியும் வகையில் நகர்த்தியிருப்பதற்கு ஸ்பெஷல் பாராட்டுக்களை பரிசளிக்க வேண்டியது அவசியம்.
நரசிம்ம அவதார விஷ்ணு, இரண்யகசிபுவோடு மோதுகிற தருணத்தில் மாஸ் ஹீரோ ரேஞ்சுக்கு சுழன்றடித்து சண்டையிடுவது சிலிர்ப்பு தராமல் விடாது. பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலம்.
வசனங்கள், காட்சியமைப்புகள், உருவாக்கம் என அத்தனையாலும் அசத்துகிற இந்த மகா அவதார் உங்கள் வீட்டு குட்டிச் சுட்டிஸையும் கவரும். ஆகவே குடும்பத்தோடு போகலாம்; திருப்தியான திரையரங்க அனுபவத்துடன் குதூகலமாய் திரும்பலாம்.


