Home விமர்சனம் தலைவன் தலைவி சினிமா விமர்சனம்

தலைவன் தலைவி சினிமா விமர்சனம்

புருஷன் பொண்டாட்டி சண்டையை மையமாக வைத்து இயக்குநர் பாண்டிராஜ் ஆடியிருக்கும் காமெடி கதகளி.

கதையின் நாயகன் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டர். கதைநாயகி நித்யா மேனன் அவரது ஹோட்டலில் தயாராகும் விதவிதமான பரோட்டாக்களின் சுவையில் மயங்குகிறார். அதனாலேயே அவருக்கு மனைவியுமாகிறார். மகள் பிறக்கிறாள்.

இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக போய்க் கொண்டிருக்கும்போது கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு உருவாகி, பிரிகிறார்கள். பிரிந்தவர்கள். மூன்று மாதங்கள் கழித்து அவர்களது மகளுக்கு குலதெய்வ கோயிலில் மொட்டையடிக்கும் நிகழ்வில் சந்திக்கிறார்கள். மீண்டும் வெடிக்கும் சண்டை சச்சரவுகளால் கோயில் வளாகம் கலவர பூமியாகிறது. அதையெல்லாம் கடந்து பிரிந்தவர்கள் சேர்கிறார்கள். அது எப்படி என்பது திரைக்கதையிலிருக்கும் சுவாரஸ்யம்…

விஜய் சேதுபதிக்கு காதலித்து உற்சாகமாக, கணவனாகி குதுகலமாக, சண்டையிட்டு கலங்கித் தவிக்க என எல்லாவித உணர்வுகளையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு மனதைக் கவர்பவர், வசனங்களை காட்டுக்கத்தலாய் டெலிவரி செய்து எரிச்சலூட்டுகிறார்.

சண்டை போட்டாலும் அதை பகையாக கருதாத மனைவியாக நித்யா மேனன் துடுக்கான பேச்சாலும் துறுதுறு நடிப்பாலும் ரசிக்க வைக்கிறார்.

ஹோட்டல்களில் பொங்கல் ஆர்டர் செய்யும்போது நாம் கேட்காமலே வைக்கப்படுகிற வடை போல அவசியம் இருக்கிறதோ இல்லையோ பல காட்சிகளில் ஒட்டிக் கொண்டிருக்கிற யோகிபாபு ரிலாக்ஸுக்கு உதவுகிறார்.

நாயகனின் அப்பா, அம்மா, தங்கை, நாயகியின் அப்பா, அம்மா, அண்ணன் என திரும்பிய பக்கமெல்லாம் பிரபலமான நடிகர் நடிகைகள் கூட்டம்… அத்தனை பேரும் தங்களுக்கு கதையிலிருக்கும் முக்கியத்துவம் புரிந்து நடித்திருக்கிறார்கள்.

குழந்தைக்கு மொட்டை போட வந்த தொழிலாளியை கதையின் நாயகன் ரெண்டு தட்டு தட்டிவிட, அவருக்கு ஆதரவாக இரண்டு சங்கங்கள் கும்பல் கும்பலாக வந்திறங்குவதெல்லாம் அக்குறும்பு அநியாயம்.

‘ஆகாச வீரன்’, `பொட்டல மிட்டாய்’ பாடல்களை அசத்தலாக தந்திருக்கும் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி பரிமாறியிருக்கலாம்.

கருப்பசாமி கோயில், ஹோட்டல், கதாபாத்திரங்கள் வசிக்கும் வீடுகள் என குறுகிய வட்டத்துக்குள் அடங்கிவிடுகிற கதை நிகழ்விடங்களை ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரரின் கேமரா மூலமாக பார்ப்பது அத்தனை பிரமாண்டமாக இருக்கிறது.

சிரித்து மகிழ ஏராளமான சம்பவங்களும், ‘கணவன் மனைவிக்குள் வருகிற சண்டையை உறவினர்கள் பெரிது படுத்தாமல் விட்டு விட்டாலே பிரச்சனை தீர்ந்து விட வாய்ப்பிருக்கிறது’ என்கிற கருத்தும் கலந்திருக்கிற ‘தலைவன் தலைவி’யை குடும்பத்தோடு பார்க்கலாம்; ரசிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்