‘மஹா’ சினிமா விமர்சனம்
‘ஆ’ என அலறவைக்கும் சைக்கோ கில்லர் படங்களின் வரிசையில் ‘மஹா.’
சிறுமிகளைக் கடத்தி, தன் காமப்பசிக்கு இரையாக்கி, அந்தரங்க உறுப்புகளைக் கடித்துக் குதறி, கூரான ஆயுதங்களால் குத்திக் கிழித்து குரூரமாக கொலை செய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிற சைக்கோ ஆசாமியிடம் சிம்பு – ஹன்சிகா தம்பதியின் குழந்தையும் சிக்கிச் சிதைந்து பரலோகம் போகிறது.
சைக்கோ கொலைகாரனை போலீஸ் மந்தகதியில் தேடிக் கொண்டிருக்க, தொடர்கொலை வரிசையில் இன்னொரு குழந்தை அந்த மனித மிருகத்திடம் மாட்டிக்கொள்ள, அதே தருணத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஹன்ஸிகா சைக்கோவை நேருக்கு நேர் சந்திக்கிற சூழ்நிலை உருவாகிறது. அதன்பின் அந்த குழந்தைக்கும் ஹன்ஸிகாவுக்கும் என்னவானது என்பது கிளைமாக்ஸ். இயக்கம்:- உபைத் ரஹ்மான் ஜமீல்
ஹன்ஸிகாவோடு காதல், கலர்ஃபுல்லான பாடல், கனல் பறக்கும் சண்டை என சிம்பு எட்டிப் பார்க்கிற மிகச்சில காட்சிகள் படத்தின் தெம்பு! விமான பைலட் கெட்டப் அழகு!
சிம்புவுடனாக காதல் காட்சிகளில் அதற்கேற்ற இளமை, நான்கைந்து வயதுநிரம்பிய குழந்தைக்கு அம்மா எனும்போது அதற்கேற்ற தோற்றம், நடிப்பிலும் மெச்சூரிட்டி என கச்சித காம்போவாக ஹன்ஸிகா. அம்மணிக்கு இது 50-வது படம் வேறு! வாழ்த்துகள்!
காவல்துறை அதிகாரியாக ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா, நடுங்கவைக்கும் கொலைகளைச் செய்கிற அந்த முகம் ஒடுங்கிய சைக்கோ, குழந்தை மானஸ்வி என இன்னபிற நடிகர் நடிகைகளின் பங்களிப்பு கதைக்களத்துக்கான ஒத்துழைப்பு!
பின்னணி இசை பரவாயில்லை ரகம். பாடல்கள் மனதில் நிற்பது சிரமம். ஜிப்ரான் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
சிம்புவின் சொந்த வாழ்க்கை அனுபவங்களை வசனங்களில் வழியவிட்டிருப்பது பெரிதாய் ஈர்க்கவில்லை.
சிம்பு, ஹன்ஸிகா, தம்பி ராமையா என பெரிய நடிகர் நடிகைகள் கிடைத்தும், இயக்குநரின் ஏனோதானோ திரைக்கதையால் மஹாவுக்கான மெஹாஹிட் பாக்கியம் பறிபோயிருக்கிறது!