‘மீண்டும்’ சினிமா விமர்சனம்

மீண்டும்‘ சினிமா விமர்சனம்

By சு. கணேஷ்குமார் 99415 14078

ஒரு பெண் – இரண்டு கணவன் – ஒரு குழந்தை என ரத்தமும் சதையுமாய் உணர்வுகளைத் தீண்டும் ஒரு கதை; நாட்டுக்கெதிரான சதி, அதை முறியடிக்க களமிறங்கும் தமிழன் என தேசப்பற்றைத் தூண்டும் இன்னொரு கதை… கலந்துகட்டிய காம்போவாக ‘மீண்டும்.’

காதலித்து கணவன் மனைவியாகி சந்தோஷத்தில் மிதக்கிறார்கள் அந்த இளைஞனும் இளம்பெண்ணும். அவர்கள் அப்பா அம்மா ஆன தருணத்தில் அவள் தனது குழந்தையைப் பிரிந்து வேறொருவனுக்கு திருமதியாகிறாள். ஆண்டுகள் சில கழிந்து முன்னாள் கணவனை குழந்தையோடு ‘மீண்டும்’ சந்திக்கிறாள். அதன்பின் அவளுக்கு நேரும் மனப்போராட்டத்தின் நீள அகலங்களே திரைக்கதை… சற்றே வில்லங்கமான கதையை கண்ணியத்துக்குக் களங்கமின்றி திரைவிருந்தாக்கியிருக்கிறார் இயக்குநர் ஷரவணன் சுப்பையா.

தாடிக்குள் புதைந்திருக்கும் முகம் போலீஸுக்கான கம்பீரத்தை சற்றே தடுத்தாலும், மகனுடனான பாசப்பிணைப்புக் காட்சிகளில் உருகவைக்கிறார் புதுமுக கதைநாயகன் கதிரவன். அவர், உலகை நாசமாக்கும் சக்திகளிடம் மாட்டிக் கொண்டு நிர்வாணமாய் சித்திரவதையை அனுபவிப்பதைப் பார்க்கும்போது மென்மனங்கள் சத்தியமாய் ரணமாகும்!

எந்தப் பக்கம் பார்த்தாலும் அழகாக இருக்கிறார் கதைநாயகி அனகா. தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தும் போது கண்களில் மழைப் பொழிவு, கணவனின் அணைப்பில் அடங்கும்போது கிறங்கடிக்கும் உடல்வளைவு என அனகா வருகிற காட்சிகளில் தருகிற நடிப்பு தரம்; படத்துக்கு உரம்!

மனைவியின் மீதான பிரியத்தால், மனைவியின் முன்னாள் கணவரிடம் பாசத்தைக் கடன் கேட்கும் மனப்பக்குவத்தில் முதிர்ந்த கதாபாத்திரத்தில் ஷரவணன் சுப்பையா. புயலுக்குப் பிந்தைய அமைதியாய் அலட்டலற்ற அவரது நடிப்பு ஈர்க்கிறது!

இயக்குநர் ஷரவணன் சுப்பையா

எஸ்.எஸ். ஸ்டேன்லி, சுப்ரமணிய சிவா, கேபிள் சங்கர் என இயக்குநர்கள் சிலரது நடிப்புப் பங்களிப்பு நிறைவு. லேடி ஹிட்லராக வருகிற சுபா பாண்டியனும் கவனிக்க வைக்கிறார்.

சுட்டித் தனத்தால் கட்டிப்போடுகிறது கதையைத் தாங்கும் குட்டிப் பையன் ஆதர்ஷின் நடிப்பு.

வரி ஏய்ப்புக் குற்றவாளி என்ற போர்வையில் தேசத்துரோகத்தில் ஈடுபடும் துரை சுதாகர் இன்னும் கூடுதலாய் கெத்து காட்டியிருக்கலாம்!

‘நிலநடுக்கம் சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களை செயற்கையாக உருவாக்க முடியுமா?’ என்ற கேள்வியை எழுப்பி, அதற்கான சாத்தியக்கூறுகளை அலசியிருக்கிற காட்சிகள் அதிரவைக்கும் அத்தியாயங்கள்! இறந்த காலத்தில் பத்திருபது வருடங்கள் சேர்ந்தபின், இந்த படம் பேசிய விஷயங்கள் விவாதப்பொருளாகும் வாய்ப்பு அதிகம்.

படத்தின் கதையில் பாதியைச் சொல்லிவிடும் வைரமுத்துவின் ‘வயிறோடு வந்த மகனா, வாடகைக்கு வந்த மகனா‘ என்ற வரிகளை தன் இசையால் நம் உயிரோடு கலக்க வைக்கிறார் இசையமைப்பாளர் நரேன் பாலகுமார். தந்தையின் பெருமையைச் சொல்லும் ‘தகப்பனைப் போலொரு தலைவனில்லை‘ பாடல் இனிமை. மார்கழிக் குளிரில் பருகும் தேநீரைப் போல் கதகதப்பு கூட்டுகிறது ஷரவணன் சுப்பையா வரிகளில் ‘மஞ்சள் கயிறு தாலிச் சரடு‘ பாடல்!

மின்னலும் இடியும் மோதிக் கொள்வது போலிருக்கிறது துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாயும் அந்த பரபர விறுவிறு எபிசோடுகள். ஹாலிவுட் படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தரும் விதத்தில் அந்த காட்சிகளை தனது கேமரா கண்களால் சுருட்டியிருக்கிற ஸ்ரீனிவாஸ் தேவாம்சத்தின் ஒளிப்பதிவின் நேர்த்திக்கு தனி பாராட்டு!

சிட்டிசன்‘ படம் இயக்கி திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் சரவணன் சுப்பையா, பார்க்க வேண்டும் என்ற பட்டியலில் சேர்க்கும்படி ‘மீண்டும்‘ அதை செய்திருக்கிறார்!

எளிய பட்ஜெட்டில் தயாரான இந்த படம், பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியிருந்தால் தமிழ் சினிமாவில் மாபெரும் அதிர்வலையை உருவாக்கியிருக்கும்!

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here