‘பிளான் பண்ணிப் பண்ணணும்’ சினிமா விமர்சனம்

பிளான் பண்ணிப் பண்ணணும்‘ சினிமா விமர்சனம்

‘ஜாலியா வாங்க, சிரிச்சுட்டுப் போங்க’ டைப்பில் தமிழ் சினிமாவுக்கு மற்றுமொரு வரவு…

ஹீரோவும் அவருடைய நண்பனும் ஐ.டி. பணியிலிருப்பவர்கள். அவர்கள் தங்கள் அலுவலகத்தின் பார்ட்டியைச் சிறப்பிக்க சினிமா நடிகையொருவரை அழைத்து வருகிறார்கள். கொண்டாட்டத்தின் பரபரப்பில், அவருக்கென எடுத்து வைத்த நான்கு லட்ச ரூபாய் தொலைந்து போகிறது, துரதிஷ்டவசமாக ஹீரோவின் நண்பனின் தங்கையும் காணாது போக காரில் தொடங்குகிறது தேடல் படலம். அந்த பயணத்தில் ஹீரோயினும் இன்னும் இரண்டு பேரும் இணைந்துகொள்ள அவர்கள் பணத்தையும், காணாது போன பெண்ணையும் கண்டுபிடிக்கிற எபிசோடுகள் முழுக்க காமெடி கலாட்டா… இயக்கம் பத்ரி வெங்கடேஷ்

பெரும்பாலான காட்சிகளில் அசடு வழிய சிரித்துக்கொண்டேயிருக்கிறார் ஹீரோ ரியோ ராஜ். அவரது காமெடி கதாபாத்திரத்துக்கு அதுவே பொருத்தமானதாக போதுமானதாக இருக்கிறது. ஒரு சண்டைக் காட்சி வருகிறது. அதில் காட்டும் சீற்றம் ஏற்றம்.

கதையோட்டத்தை அப்படியும் இப்படியும் திருப்பிவிட்டு திருப்பங்களை உருவாக்குபவராக ரம்யா நம்பீசன். ஆளும் வெயிட்டு… கதாபாத்திரமும் அப்படியே. குறையேதுமில்லை.

பால சரவணன், ரோபோ சங்கர், பழையஜோக் தங்கதுரை கூட்டணியின் கன்னாபின்னா காமெடிக்கு சில இடங்களில் மட்டுமே சிரிப்பு சாத்தியம்.

எட்டிப் பார்த்து எட்டப்போவதாக இருந்தாலும் சித்தார்த் விபினின் கதாபாத்திரமும் சீனாக்காரர் தமிழ் பேசுவது போல் அவரது டயலாக் டெலிவரியும் ரகளை!

தங்கையாக பூர்ணிமா ரவி. கதைப்படி காணாதுபோன அவர் திரும்பி வந்தபின் தன் அண்ணணிடம் ஐந்தாறு நிமிடம் கேப்விடாமல் நீ……………ளமாகப் பேசி முடிக்கும்போது நமக்கு மூச்சு வாங்குகிறது.

எம்.எஸ்.பாஸ்கர், முனீஸ்காந்த் என இன்னும் சிலரின் அணிவகுப்பும் அவர்களின் காமெடி களேபரம் அடிஷனல் அட்ராசிடி!

ஆண்களின் அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கும்கி அஸ்வினின் அச்சுப்பிச்சு அடாவடியும் அட்டகாசம்!

‘ஆடுகளம்’ நரேன், ரேகா, விஜி சந்திரசேகர், சந்தானபாரதி, மாரிமுத்து என தேர்ந்த நடிகர், நடிகைகளின் பங்களிப்பும் உண்டு.

பாடல்களில் இனிமையும் உற்சாகமும் வழிகிறது!

சிரிக்க வைப்பது மட்டுமே நோக்கம் என்றானபின் இன்னும் கொஞ்சம் சீரியஸாக பிளான் பண்ணியிருக்கலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here