‘வெற்றியோ தோல்வியோ மீசைய முறுக்கு’ன்னு சொன்ன ஹிப் ஹாப் ஆதி அதையே ரிப்பீட் 2’ மோடுல சொல்ற படம்.
ஆதிக்கு இதுல தாத்தா, அப்பா, பையன்னு மூணு ரோல். மூணு பேருமே அவங்களோட இளமைப் பருவத்துல அவங்ககிட்டே இருக்கிற கானா பாட்டு பாடும் திறமையால புகழ் வெளிச்சத்தை அடையணும்னு முயற்சி பண்றாங்க. முயற்சின்னு இறங்கிட்டா தடங்கல், தடை, சவால், அவமானம், துரோகம்னு எல்லாத்தையும் சந்திச்சாகணும். அவங்களும் சந்திக்கிறாங்க. வலிகளை தாங்கினா வழி பிறக்காம போகாது. எப்படி பிறக்குதுங்கிறதுதான் மேட்டரே…
காலகட்டத்துக்கு தக்கபடி மூணு கெட்டப்லயும் பாடி லாங்வேஜிலும் வித்தியாசம் காட்டியிருக்காரு ஆதி. கானா பாடுற திறமையை காட்டுறதாவட்டும், அவமானங்களை சந்திக்கிறப்போ மனசுக்குள்ள வேதனையை வெச்சுக்கிட்டு வெளியில கெத்து காட்டுறதாவுட்டும், டான்ஸ்ல தெறிக்க வுடுறதாவுட்டும் சீனுக்கு சீன் வெரி வெரி எனர்ஜிடிக் பெர்ஃபாமென்ஸ்.
அப்பா ஆதிக்கு ஜோடியா சைத்ரா ஆச்சார் சிம்பிளா வர்றாங்க; நடிப்புல பின்றாங்க. மகன் ஆதிக்கு ஜோடியா ரம்யா ரங்கநாதன் அய்யராத்து வாரிசா, குப்பத்து மருமகளா எமோஷ்னல் நடிப்புல அசத்துறாங்க. பேரன் ஆதிக்கு ஃபேரா வர்ற கெதிகா சர்மா செம கும்தாவா இருக்காங்க; கிளாமர் காட்டுறதோட ஜோலிய முடிச்சுப்பாங்கனு பார்த்தா அதையும் தாண்டி சில விஷயங்களை பண்றாங்க. மூணு பேரும் செமயா ஆடுறதுக்கு பட்டாசா ஆளுக்கொரு பாட்டு இருக்கு.
கருணாஸ், பாபா பாஸ்கர் கூட்டணி சென்டிமென்ட் ஏரியால அடிச்சு ஆடியிருக்காங்க. நாசர், ஆடுகளம் நரேன்னு சீனியர்கள் சின்சியரா டியூட்டி பார்த்திருக்காங்க. ஆதிக்கு பிரதரா வ்ரற ஹர்ஷத் கான் பண்றதெல்லாம் அதிரிபுதிரி அட்டகாசம். ஃபிரெண்ட்ஸா வர்றவர்லாம் ரசிக்கிற மாதிரி ரகளை பண்றாரு. யோகி பாபு, ஷாராலாம் கூட படத்துல இருக்காங்க.
கடற்கரைல ஆரம்பிச்சு சந்துபொந்து பக்கமெல்லாம் சுத்தி திரிஞ்சு கானாவுக்கு ஃபேமஸான வடசென்னையோட முகத்துக்கு மேக்கப் போட்ட மாதிரி சுத்தபத்தமா காமிச்சிருக்காரு ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம்.
மியூசிக் பத்தி சொல்லணும்னா ஆரா பத்துக்கு பத்து, கோயிந்தம்மா, பப்பாளி பழமே பாட்டெல்லாம் ஆல்பமா ரிலீஸானப்போவே பட்டைய கிளப்பிச்சு. அதையெல்லாம் டான்ஸோட பாக்குறப்போ தியேட்டர் முழுக்க வைப் மூடுக்கு மாறுது. சில பசங்க எந்திரிச்சு குஷியா ஆட்டமெல்லாம் போடுறாங்க மாமே.
படத்துல திரும்பத் திரும்ப சொல்லப்படுற ஒரே விஷயம், மச்சி உனக்கு டேலண்ட் இருக்கா; எது நடந்தாலும் கவலப்படாத; எவன் குறுக்க வந்தாலும் மெர்சலாவாத.. ஒனக்கான மேடை உன் காலுக்கு என்னைக்காவது வந்து சேரும். அம்புட்டுத்தான்…
யங் ஜெனரேசனோட மைன்ட்ல கான்பிடன்டை ஏத்திவிடுற வகையில மீசைய முறுக்கு 2 – வொர்த் மாமா வொர்த்!
-சு.கணேஷ்குமார்


