வானில் மேகம் சூழ்ந்த மாலை நேரம், வாசலோரம் அமர்ந்து இதமான சூட்டில் டீ சாப்பிடுகிற தருணம், சட்டென துவங்கும் தூறல்… அப்படியொரு சூழலில் நிச்சயமாய் உடலும் உள்ளமும் சிலிர்த்துப் போகும். அதுபோன்ற அனுபவத்தை தருகிற ‘நேர்காணல்.’
உலகம் இருக்கிற வரை காதல் கதைகளை சொல்லிக்கொண்டே இருக்கலாம். சொல்கிற விதத்தில் சொன்னால் போரடிக்காது. அந்த சூட்சுமம் இயக்குநர் கோகுலகிருஷ்ணன் என்கிற ஜி கே’வுக்கு தெரிந்திருக்கிறது. கதை உருவாக்கத்தில் பங்களித்த பகலவனுக்கும் புரிந்திருக்கிறது.
ராஷ்மி என்ற இளம்பெண் எழுதிய ‘தர்மயுகம்’ என்ற புத்தகத்திற்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. புகழ் வெளிச்சம் அதிகரிக்கிறது. அதையடுத்து ஒரு பிரபல டிவி சேனல் ராஷ்மியை நேர்காணலுக்கு அழைக்கிறது. பலருக்கும் இருப்பது போன்ற பொதுவெளியில், மேடைகளில் பேசத் தயங்குகிற, கூச்சப்படுகிற பிரச்சனை அவளுக்கும் இருக்கிறது. அதனால், நேர்காணலுக்கு போவதையே தவிர்த்து விடலாம் என்கிற அளவுக்கு யோசிக்கிறாள்.
ராஷ்மியின் தோழி, ‘எனக்குத் தெரிந்த பப்ளிக் ஸ்பீச் டிரெய்னர் இருக்கிறார். அவரிடம் பயிற்சி எடுத்துக் கொள்; நேர்காணலில் பிச்சு உதறிடலாம்’ என்கிற அளவுக்கு தன்னம்பிக்கை தருகிறாள். ராஷ்மி சம்மதிக்கிறாள்.
ராஷ்மி டிரெய்னராக வருகிற அழகனிடமிருந்து மூச்சுப் பயிற்சியில் தொடங்கி பேச்சுப் பயிற்சி வரை கற்றுத் தேர்ச்சியடைகிறாள். நேர்காணலுக்கு நேர்த்தியாக தயாராகிறாள்.
எல்லாம் சரி, இதில் காதல் எங்கே வந்தது? என்பது உங்களின் கேள்வியாக இருக்கும். அதை தெரிந்துகொள்ள (31 நிமிடங்களில் ஓடி முடிகிற) படத்தை பார்த்து விடுங்கள். அந்த காதல் சார்ந்த எபிசோடுகள் கடந்து போகும்போது உங்கள் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதை உணர்வீர்கள்…
ராஷ்மியாக ஐக்யா பாலகிருஷ்ணன். லட்சணமாக இருக்கிறார். பொதுவெளியில் பேச தனக்கிருக்கும் பயத்தை வெளிப்படுத்துவது, பயிற்சியாளரிடம் அடக்க ஒடுக்கமாக நடந்து கொண்டு பயத்திலிருந்து விடுபடுவது, நேர்காணலுக்கு கம்பீரமாக தயாராகி நிற்பது என கதையோட்டத்துக்கு தேவையான நடிப்பின் 75% சதவிகித பங்களிப்பை அவரது விழிகளே செய்து விடுகிறது. மிச்சசொச்சத்திற்கு பொருத்தமான உடல்மொழி உதவுகிறது.
ராஷ்மிக்கு ஸ்பீச் டிரெய்னிங் கொடுப்பவராக வருகிற சிவம், ‘மென்மையான காதல் கதைகளுக்கேற்ற கதாநாயகன் தேவைப்படுபவர்கள் அணுகலாம்’ என்கிற அளவில் நல்ல உயரத்தில் மேன்லி லுக்கில் இருக்கிறார். தியரி, பிராக்டிகல் என பிரித்து பயிற்சி கொடுத்து ராஷ்மியை நேர்காணலுக்கு தயார்படுத்தும் கடமையை செய்திருக்கும் விதம் கச்சிதம். நேர்காணலுக்கு தயாரான ராஷ்மி அணிந்திருக்கும் உடையையும் அவரது அழகையும் கண்டு அசந்து போய், ‘நல்லா இருக்கு’ என்று சொல்லி, உடனடியாக ‘நல்லா இருக்கீங்க’ என மாற்றிச் சொல்வது பரவசமூட்டுகிற காட்சி.
பள்ளிப் பருவத்தில் ராஷ்மியிடம், ‘உனக்கு மேடையில பேசத்தான் பயமா இருக்கு; சரி, பேச நினைக்கிறத எழுதலாம்ல?’ என்று சொல்லி ஊக்குவிக்கிற சக மாணவ நண்பன் எழில் உள்ளிட்ட மற்ற கேரக்டர்களில் வருகிற முகுந்தன், சஜினா, இயக்குநர் ஜிகே, ஜெயலெஷ்மி சந்தானம் உள்ளிட்டோருக்கு ஜஸ்ட் வந்து போகிற வேலைதான் என்றாலும் நடிப்பில் குறையில்லை.
பாடல் வரிகள் வீணை – வயலின் – கிடார் வாத்தியங்கள் கூட்டணியமைத்து பிரசவிக்கும் கர்நாடக இசையில் இதமூட்ட, காட்சிகளின் மென்மையான நகர்வுக்கேற்ப பின்னணி இசையை வழங்கியிருக்கிறார் கணேஷ் லெஷ்மணன்.
ராஷ்மி பேச்சுப் பயிற்சி பெறும் ஒவ்வொரு நாளின் துவக்கத்தையும் தாமரை, செம்பருத்தி என பூக்களிலில் தொடங்கி அழகிய கோணங்களில் பதிவு செய்திருக்கிற ஒளிப்பதிவு படத்தின் பலம்.
கதாநாயகி எழுதிய தர்மயுகம் என்ன மாதிரியான சப்ஜெக்ட் என்பது பற்றி, அவளது எழுத்துக்களின் நோக்கம் பற்றி ஏதாவது ஒரு இடத்தில் சில வார்த்தைகள் சொல்லியிருக்கலாம்.
மேடைப்பேச்சில் கைத்தட்டலை எதிர்பார்த்த நாயகி, அவளது சொதப்பலான பேச்சால் கேலியும் கிண்டலும் நிரம்பிய சிரிப்புச் சத்தம் கேட்க வெறுத்துப் போகிறாள். காலப்போக்கில் அவளே எழுத்தாளராகி மிளிர்கிறாள். கதையின் இந்த ஒன்லைன் படம் பார்ப்பவர்களை மோட்டிவேட் செய்யவும் கதையிலிருக்கும் காதல், அவரவர் பள்ளிப்பருவ, கல்லூரிப் பருவ கிரஷை நினைவுபடுத்தவும் வாய்ப்பிருக்கிறது.
திரும்பிய பக்கமெல்லாம் ‘டாக்ஸிக்’ மாதிரியான வன்முறைப் படங்கள், ‘டோரதி’ போன்ற வில்லங்க விவகாரப் படைப்புகள் அணிவகுத்து ரசிகர்களை சோதனைக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், நேர்காணல் போன்ற மென்மையான படைப்புகளை ரசிகர்கள் வரவேற்பதும், அப்படியான படைப்புகளை கைவசம் வைத்திருப்பவர்களுக்கு துறை சார்ந்தவர்கள் திரைப்படங்கள் இயக்க வாய்ப்பளிப்பதும் அவசியம்!
-சு.கணேஷ்குமார்

