‘மிரள்’ சினிமா விமர்சனம்

கனவில் வந்த பயங்கர சம்பவங்கள் நிஜத்தில் நடக்கிற கதை; அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க முடியாத சம்பவங்களின் தொகுப்பாக திரைக்கதை; திகில் சினிமா டெம்ப்ளேட்டில் திருப்பங்களுக்குப் பஞ்சமில்லாத சஸ்பென்ஸ் திரில்லர்!

குடும்பத்தோடு காரில் பயணிக்கும்போது வழியில் தன் கணவன் பரத் அடையாளம் தெரியாத ஆசாமியால் கொலை செய்யப்படுவதுபோல் கனவு வருகிறது வாணிபோஜனுக்கு. ஆரம்பக் காட்சியிலேயே ஆல்கஹால் குடோனில் தீ பற்றியதுபோல் நமக்குள் தொற்றிக் கொள்கிறது பரபரப்பு…

மனைவிக்கு கனவு தந்த பயத்தை, அதிலிருந்து அவள் மீளமுடியாமல் பயத்தோடும் பதட்டத்தோடும் தவிப்பதை மனைவியின் அம்மாவுக்கு தெரியப்படுத்துகிறார் பரத். பதறிப் போன அந்த அம்மா, தன் மகள் கனவில் வந்தது போல் தங்கள் கிராமத்தில் சிலபல வருடங்கள் முன் சம்பவமொன்று நடந்ததை சொல்லி மிரள்கிறார். சூடுபிடிக்கிறது கதைக்களம்…

குலதெய்வத்துக்கு படையல் போட்டால் விடியல் பிறக்கும் என நினைக்கிறார்கள். நினைத்ததை நிறைவேற்றிவிட்டுத் திரும்பும்போது வாணிபோஜன் கண்ட கனவு பலிக்கிறது. அடுக்கடுக்காய் அமானுஷ்ய சம்பவங்கள் அரங்கேற வேகமெடுக்கிறது திரைக்கதை… இயக்கம்:- எம். சக்திவேல்

இன்ஜினியர் பணிலிருக்கிற இளைஞன்; அழகான மனைவிக்கு அன்பான கணவன்; ஏழெட்டு வயது நிரம்பிய மகனுக்கு அப்பா என அத்தனைக்கும் பொருத்தமாக இருக்கிறார் பரத். தன்னைச் சுற்றி நடக்கும் திகில் சம்பவங்களில் சிக்கிச் சின்னாபின்னமாகி மனைவியை, மகனைக் காப்பாற்றப் போராடும் காட்சிகளில் பரத்திடமிருந்து வெளிப்படுகிறது தேர்ந்த நடிப்பு!

மனதிலிருக்கிற படபடப்பை வெளிக்காட்ட விழிகளின் வாசலைத் திறந்து விடுகிற வாணிபோஜனின் இயல்பான நடிப்பும், ஹோம்லி லுக்கும் ஈர்க்கிறது!

அப்பாவி போலிருந்து அடப்பாவி’யாக மாறுகிற வேடத்தில் ராஜ்குமார். காமச்சேட்டை, கட்டில் வேட்டை என தன்னால் முடிந்ததை செய்திருக்கிறார்.

கே.எஸ். ரவிக்குமார், மீரா கிருஷ்ணன் என இன்னபிற நடிகர், நடிகைகள் அவரவர் பங்களிப்பில் நிறைவு!

அடர் இருட்டு திகில் காட்சிகளை அதன் வீரியம் குறையாமல் கடத்துவதற்காக அதிகம் உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா!

பயம்காட்டும் காட்சிகளின் வேகத்துக்கு தன் பின்னணி இசையால் பலம்கூட்டியிருக்கிறார் எஸ்.என். பிரசாத்!

கிளைமாக்ஸ் சற்றே ஏமாற்றம் தந்தாலும் கடைசிவரை சஸ்பென்ஸை காப்பாற்றிய திரைக்கதையின் விறுவிறுப்புக்காக பார்க்கலாம். ஒரே டிக்கெட்டில் திகில் படம் திரில்லர் படம் என இரண்டையும் படம் பார்த்த அனுபவம் கிடைக்கலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here