வாழ்க்கை என்னை கைவிட்டு விட்டது; வாழவே பிடிக்கவில்லை என்று நினைப்பவர்களுக்கு இந்த படத்தில் ஒரு செய்தி இருக்கிறது! -‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சீனு ராமசாமி பேச்சு 

சீனு ராமசாமி இயக்கி, வரும் செப்டம்பர் 20-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

படக் குழுவினருடன் ‘ மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் ரியோ ராஜ், இயக்குநர் ஹரிஹரன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், ”சினிமா என்பது முழு உடல். அதனை அரை மணி நேரம் பார்த்துவிட்டு அப்படியே நிறுத்திவிட்டு, இதற்கு முன் எப்படி இருக்கும் எனக் கேட்பது தவறு. முழு உடல், முழு தரிசனம். அப்படி ஒரு முழு தரிசனம் இந்த ‘கோழிப்பண்ணை செல்லதுரை’யில் கிடைக்கும்.

நான் கதாபாத்திரத்திற்கான நடிகர் தேர்வு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்வதில்லை.

இந்த படத்தை, தந்தை தயாரிப்பாளர் என்பதற்காக இந்த படத்தை உருவாக்கவில்லை. ஏகன் ஏற்கனவே சின்னத்திரையில் அறிமுகமானவர். அத்துடன் நடனம், உடற்பயிற்சி, நடிப்பு என அனைத்து தகுதிகளையும் பெற்றிருந்தார். அவரின் திறமையை உணர்த்தும் பல காணொலிகளை எனக்கு அனுப்பி கொண்டிருந்தார். அதன் பிறகு தான் அவர் ஒரு சினிமா வெறியன், சினிமா காதலன், சினிமாவிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மாணவன் என்பதை அறிந்து கொண்டேன். நான் அவரை ஆடிஷனுக்காக வரவழைத்தேன். ஆனால் ஏகனை நான் ஆடிஷன் செய்யவில்லை. அவரை வரும்போது கவனித்தேன். உட்காரும்போதும் கவனித்தேன். பேசும் போதும் அவனுடைய கண்களை கவனித்தேன். அவ்வளவுதான். அவனை அனுப்பி வைத்து விட்டேன். இந்த இளைஞன் எதிர்காலத்தில் மிகச் சிறந்த நடிகனாக வருவான் என்று எனக்கு அப்போதே தெரிந்து விட்டது.

படம் ஒரு முக்கியமான விஷயத்தை பேசி இருக்கிறது. வாழ்க்கை என்னை கைவிட்டு விட்டது, இந்த வாழ்க்கையை வாழவே பிடிக்கவில்லை, இந்த வாழ்க்கையில் எனக்கென்று யாரும் இல்லை என்று யாராவது நினைத்தால் அவர்களுக்கு இந்த படத்தில் ஒரு செய்தி இருக்கிறது. இந்த பிரபஞ்சம் எந்த ஒரு தனி மனிதனையும் கைவிடுவதில்லை. ஏதேனும் ஒரு ரூபத்தில் வருகை தந்து உங்களை அரவணைத்து காக்கும்.

யோகி பாபு கதையை கேட்காமல் என்னை நம்பி வந்து இந்த திரைப்படத்தில் ஏகனின் பெரியப்பாவாக பெரியசாமி எனும் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். ஏகன்-யோகி பாபு கூட்டணியில் படத்தில் இடம் பெறும் காட்சி ஒன்று இருக்கிறது. உணர்வுபூர்வமாகவும், மௌனமாகவும் இருக்கும் இந்த காட்சியில் ஏகன் மற்றும் யோகி பாபுவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவரும். இந்த காட்சியில் ஏகனின் நடிப்பை பார்த்து பார்வையாளர்கள் வியப்படைவார்கள். அந்த வகையில் ஏகனுக்கு தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் காத்திருக்கிறது.

இந்தத் திரைப்படம் எதிர்வரும் 18ம் தேதி அன்று அமெரிக்காவில் உள்ள ஆக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த விழாவிற்கு வருகை தந்து சிறப்பு சேர்த்த ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு என்னுடைய நன்றி.‌

இந்த திரைப்படத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மகளிருக்கு வழங்கிய இலவச பேருந்து பயண சலுகைகள், அரசு மருத்துவமனைகளின் பலன்கள் குறித்து காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் படம் ரசிகர்களை நிச்சயம் ஏமாற்றாது.

இந்தத் திரைப்படம் உள்ளூர் மக்களையும் ரசிக்க வைக்கிறது.‌ உலக மக்களிடமும் சென்றடையும். ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ உள்ளூர் மக்களுக்கும் மட்டுமல்லாமல் உலக மக்களுக்கும் பிடித்த செல்லதுரையாகவும் இருக்கும்” என்றார்.

படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்ய தேவி, பவா செல்லத்துரை, லியோ சிவகுமார், ‘குட்டி புலி’ தினேஷ் , மானஸ்வி கொட்டாச்சி, ரியாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here