பனை மரத்தைச் சார்ந்து வாழும் பனையேறிகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகியிருக்கும் படம் ‘நெடுமி.’ நந்தா லட்சுமணன் இயக்கியுள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா 20.1. 2023 அன்று மாலை சென்னையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பேரரசு, பத்திரிகையாளர்கள் பயில்வான் ரங்கநாதன், முக்தார் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விழாவில் படத்தின் கதாநாயகன் பிரதீப் செல்வராஜ் பேசும்போது, “முதலில் கதை சொல்லும் போது நான் நடிப்பேன் என்று நினைக்கவில்லை. நீதான் நடிக்க வேண்டும் என்றார்கள். ஏனென்றால் இந்தப் படத்தில் நடிக்கும் கதாநாயகன் பனைமரம் ஏற வேண்டும். என்னால் முடியாது என்று தோன்றியது. ஆனால் 10 நாட்கள் எனக்கு அதற்காகப் பயிற்சி கொடுத்தார்கள். மரமெல்லாம் ஏறிப் பயிற்சி எடுத்துக் கொண்டேன்.
இன்று படம் எடுப்பது சுலபம். வெளியிடுவது தான் சிரமமாக இருக்கிறது. இந்தச் சினிமா ஒரு கடல் போன்றது. இங்கே சினிமாவில் பல திமிங்கிலங்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. நாங்கள் இப்போதுதான் மீன் தொட்டியில் இருந்து சினிமாவில் குதித்துள்ளோம். நாங்களும் திமிங்கிலமாக வளர்வோம்” என்றார்.
படத்தின் கதாநாயகி அபிநயா பேசும்போது, “வாழ்க்கையில் பார்த்த விஷயங்களை அழகாகப் படமாக எடுத்திருக்கிறார்கள். அனைவரும் புது முகங்கள் தான். என்னை முதலில் ஆறோ ஏரியோ தெரியவில்லை.ஒரு நீர் நிலையில் இறக்கி விட்டதும் பயந்தேன். ஏனென்றால் எனக்கு நீச்சல் தெரியாது. ஆனால், அவர்கள் என்னை நம்பி ஊக்கப்படுத்தினார்கள். நான் இரண்டு மாத கைக் குழந்தையுடன் இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன். ஒரு கதாநாயகியாக இதைச் சொல்ல எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. ஏனென்றால் குடும்ப ஆதரவு எனக்கு அந்தளவுக்கு இருக்கிறது” என்றார்.
படத்தின் இயக்குநர் நந்தா லட்சுமணன் பேசும்போது, “இங்கே இருப்பவர்கள் தனித்தனி பெயர்களைக் கொண்டு தனித்தனி ஆட்களாகத் தெரிந்தாலும் நாங்கள் படத்தில் பணியாற்றும் போது ஒன்றாகத் தான் இருந்தோம். அவரவருக்கு என்று வேலைகள் இல்லாமல் அனைத்து வேலைகளையும் அனைவரும் செய்தோம். ஒருவரிடம் திறமை இருக்கலாம் அந்த திறமையை அறிமுகப்படுத்தி மேலே உயர்த்துவதற்கு நல்ல நட்பு தேவை. அப்படி எனக்கு அமைந்த நண்பன் தான் டி.வி.வசந்தன். அந்த நண்பன் இல்லாவிட்டால் நான் இங்கு வந்து இருக்க முடியாது. அவன்தான் இந்தப் படத்தின் கலை இயக்குநராகவும் மற்றும் பல வேலைகளையும் பார்த்துக் கொண்டான்.
அதேபோல எனக்கு என் குடும்பமும் உறவினர்களும் மிகவும் ஆதரவாக இருந்தனர்.கல்லூரி முடித்து 2017 முதல் என்னால் குடும்பத்திற்கு எந்த வருமானமும் இல்லாத போதும் என்னை நம்பி அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். குறும்படங்கள் ஆல்பங்கள் என்று எடுத்து சினிமா பற்றி எதுவும் தெரியாத எங்களுக்கு வாய்ப்பு கொடுத்து இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்த எனது மாமா தயாரிப்பாளர் வேல்முருகனுக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தான் அவர் சொல்வார். அந்த ஊக்கம் அனைவருக்கும் கிடைக்காது.
அதேபோல் பனைமரம் சார்ந்த தகவல்களை அளித்த கவிதா காந்தி அவர்களுக்கும் நன்றி” என்றார்.
பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசும்போது, “இந்த படம் பனையேறிகளின் சிரமங்களைச் சொல்வதாகக் கருதுகிறேன். ஆனால், இன்று பனையேறிகள் சிரமப்படவில்லை. மிகவும் வசதியாக இருக்கிறார்கள். நானும் ஒரு பனையேறி தான். அதைச் சொல்வதில் எனக்கு ஒன்றும் தயக்கம் இல்லை. பெருமையாகவே சொல்கிறேன்.
‘காவல் தெய்வம் ‘படத்தில் சிவாஜி கணேசன்ஒரு பனையேறியாக நடித்திருப்பார். அந்தப் படத்தை எஸ்.வி. சுப்பையா தயாரித்திருப்பார்.
நடிகர் திலகம் அந்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்திருப்பார். காரணம் கேட்டபோது பெருந்தலைவர் காமராஜர் சம்பந்தப்பட்ட சமுதாயம் என்பதால் தான் அப்படி நடித்துக் கொடுத்ததாகக் கூறினார்.
இங்கே பனைத் தொழில் வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணனை அழைத்து வந்திருக்கலாம். பனைமரம் மட்டும் தான் தண்ணீர் இல்லாக் காட்டில் கூட விளைந்து பயன் தருவதாகும்.
பனையேறிகள் என்று சொல்லப்படுபவர்கள் இன்று நன்றாக இருக்கிறார்கள். எவரும் கஷ்டப்படவில்லை . இன்று தமிழ்நாட்டில் 17 எம் எல் ஏக்கள், இரண்டு அமைச்சர்கள் பனையேறிகள்தான்.
அந்த சமுதாயத்தில் இருந்து 27 ஐஏஎஸ்.அதிகாரிகளும் 30 ஐபிஎஸ் அதிகாரிகளும் வந்துள்ளனர். எவரும் வறுமையில் வாழவில்லை. இந்த சமுதாய மக்கள் யாரையும் ஏமாற்ற மாட்டார்கள். யாரிடமும் ஏமாறவும் மாட்டார்கள்.
பனையேறிகள் ஏன் சிரமப்பட வேண்டும்? ஒரு காலத்தில் நாலணாவிற்கு கருப்பட்டி விற்றது. அப்போது வெள்ளை சர்க்கரை எட்டணா விற்றது. இப்போது கருப்பட்டி 400 ரூபாய் விற்கிறது. அதே வெள்ளை சர்க்கரை 30 ரூபாய்க்கு கிடைக்கிறது. அந்த அளவிற்கு மதிப்புள்ளதாக கருப்பட்டி இருக்கிறது .அதனால் தான் சொல்கிறேன் பனையேறிகள் என்றும் சிரமப்பட்டதில்லை.
பனையேறிகளிடம் ஒரு முறை உண்டு. அதற்குப் பாட்டம் என்று பெயர்.ஒரு நாள் வரும் கள்ளைப் பனையேறி எடுத்துக் கொள்வார். மறுநாள் மரத்துக்காரருக்குக் கொடுப்பார். இப்படி முறை வைத்து சம்பாதிப்பார்கள்.
நாங்கள் கள்ளை ஆதரித்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். கள் என்பது இயற்கை கொடுத்த பால். ஒரு மரத்துக் கள்ளை குடிப்பவன் நூறாண்டு வாழ்வான். பனையேறிகள் எப்போதும் உடல் வலிமையோடு இருப்பார்கள்.
படங்களில் பனையேறிகளை உயர்த்திக்காட்டுங்கள். ஊடகங்கள் எப்போதும் நல்ல படங்களை ஆதரிப்பார்கள். இந்த படம் உண்மையில் நன்றாக இருந்தால் ஊடகங்கள் நிச்சயமாகக் தூக்கி பிடிப்பார்கள். லவ் டுடே படம் யாரால் ஓடியது? முழுக்க முழுக்க ஊடகங்கள் தான் காரணம்” என்றார்.