வடசென்னையை கதைக்களமாக கொண்டு அங்கு வசிக்கும் ஏழை எளிய மக்களின் பழக்க வழக்கம், காதல் மோதல், அவர்களில் சிலரை தவறான வழியில் இழுத்துச் செல்லும் சூழ்நிலை, சட்ட திட்ட அத்துமீறல் என பலவற்றை பல படங்களில் பார்த்தாயிற்று.
அதே கதைக்களத்தை சற்றே வித்தியாசமாக பார்க்கும் வாய்ப்பைத் தருகிறது ‘என் 4.’
மைக்கேல் தங்கதுரை – கேப்ரில்லா, அப்சல் – வினுஷா இந்த நான்கு பேரும் காசிமேடு பகுதியின் மீன் வியாபாரியான வடிவுக்கரசியின் ஆதரவில் வாழ்கிறார்கள்.
மைக்கேல் தங்கதுரையும் கேப்ரில்லாவும் ஒருவரையொருவர் காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் முடிவில் இருக்க, அப்சலும் வினுஷாவும் ஒருவருக்கொருவர் மனதை பறிகொடுத்து உற்சாகமாக வலம் வருகிறார்கள்.
அந்த உற்சாகத்துக்கு உலை வைக்கும் விதமாக திடுதிப்பென ஒருநாள் மர்மநபரால் வினுஷா சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். அவளைக் காப்பாற்ற லட்சக்கணக்கில் செலவாகும் என்ற இக்கட்டான சூழ்நிலை.
மீன் பிடி சம்பந்தப்பட்ட, கடல்சார்ந்த எளிய பிழைப்பை நம்பியிருக்கும் அந்த மனிதர்கள் அவளை காப்பாற்ற எப்படியான முயற்சியில் இறங்குகிறார்கள்? சுட்டது யார்? அதற்கான காரணம் என்ன? சுட்டது யார் என கண்டுபிடிக்க அந்த பகுதியின் N 4 ஸ்டேஷன் போலீஸ் தரப்பு என்ன மாதிரியான தேடலில் ஈடுபடுகிறது? இத்தனை கேள்விகளுக்குமான பதில்கள் திரைக்கதையில்… இயக்கம் லோகேஷ் குமார்
மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா, அப்சல், வினுஷா, வடிவுக்கரசி அத்தனை பேரும் காசிமேடு வாழ் மக்களாகவே மாறியிருக்கிறார்கள்.
அந்த இரண்டு ஜோடிகளின் காதலில் இருக்கிற ஆழம் கதைக்கு பலம் சேர்க்கிறது.
கடலுக்குள் சென்ற அப்சல் திரும்ப தாமதமாகும்போது துடித்துப் போகும் காட்சிகளில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வினுஷாவின் நடிப்பில் நல்ல உயிரோட்டம்!
‘சுந்தரி’ சீரியல் கேப்ரில்லாவும் அவரது துடிப்பான நடிப்பும் கவனிக்க வைக்கிறது!
உடல்நலக் கோளாறால் அவதிப்படும் தன் மகனைக் காப்பாற்ற பணம் தேவை என்றபோதும் நேர்மையிலிருந்து விலகாத போலீஸ் அதிகாரியாக அனுபமா குமாரிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது தேர்ந்த நடிப்பு!
இன்னபிற கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிற அபிஷேக், அழகு உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தம்!
போதைக்கு அடிமையான இளைஞர்கள், அவர்கள் கைக்கு துப்பாக்கி வந்து சேர்கிற முன்கதை என விரியும் காட்சிகள் பரபரப்பூட்டுகின்றன!
திவ்யங்கின் ஒளிப்பதிவும், பால சுப்ரமணியத்தின் பின்னணி இசையும் கச்சிதம்!
என் 4 – மீன் பிடி தொழில் சார்ந்து இயங்கும் மனிதர்களின் வாழ்வியலை காட்சிப்படுத்திய படங்களின் வரிசையில் நேர்த்தியான பதிவு!

